Aug 18, 2007

யாரும் பதிக்காத கால்தடங்கள்

உனக்கு எழுதி முடித்த கடிதத்தின்
கோடொன்று
சலனமில்லாத் தனிமையில்
இருள் துளைத்து
மரங்களற்ற பரப்பொன்றில்
சாலையாக நீள்கிறது.

சிரிப்புகளின் அதிர்வொலி
திட்டுக்களாகி இருக்கும்
அதன் பாதையில்
யாரும் பதிக்காத கால்தடங்கள்
பறவையின் எச்சத்தைப் போல‌ கிடக்கின்றன.

ரகசியப் பேசுக்கள் யாவும்
உறைந்து கிடக்கும்
காற்று வெளி நிசப்தத்தில்

உன் வாசல் தொட்ட கணம்
சுருங்கிய கோடு
நசுங்கிய ரோஜாச் சாற்றின்
புள்ளியாக
கடிதத்தில் படிகிறது.

வெறுமை கவிந்து கிடந்த அந்த இதழ்
உன்னை இறுதியாகத் தொட்டவைகளில்
தானும் ஒன்றென
பதறுகிறது.

9 எதிர் சப்தங்கள்:

குசும்பன் said...

இன்று மதியம்தான் அய்யனாரிடம் கேட்டேன் என்னய்யா மணிகண்டன் எழுதி ரொம்ப நாளாசி என்று:)

Vaa.Manikandan said...

என் சோகம் எனக்குய்யா....இன்னும் நாலு வருஷத்துக்கு எனக்கு கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு ஜோஷ்யகாரன் சொல்லிட்டானாம். வீட்ல பேசவே மாட்டேங்குறாங்க.அதான் சோகத்துல அமைதி ஆகிட்டேன்

Jazeela said...

மாநகராட்சியில உங்கள தேடிக்கிட்டு இருக்காங்களாமே சேதி வந்தது. ஏதோ கோடுப் போட்டே ரோடு போடுறீங்களாமே... ஆனா மரங்களையும் நட்டு வச்சா நல்லாயிருக்கும். அதற்காகவே நிறைய எழுதவும்னு மேயர் வாழ்த்து போட்டிருக்காரு அவர் வலைப்பூவில் http://chennaimayor.blogspot.com :-))))

Vaa.Manikandan said...

ஜெஸிலா... யார் சென்னை மேய‌ர்? இந்த‌ லின்க் வேலை செய்ய‌லையே?

Anonymous said...

ம‌ணி..ஜெஸிலா உன்ன‌ க‌லாசியிருக்காங்க‌ யா...இப்ப‌டி வெள்ளந்தியா இருக்கியே ராசா...


--மொக்கைய‌ன்

கதிர் said...

வரிகளை வாசித்ததும் அதனூடாய் செல்லும் கற்பனையில் என்னையே மறந்தேன்.

வெற்றி said...

மணி,
அருமையான கவிதை.

Vaa.Manikandan said...

ஜெஸிலா கலாய்ச்சுட்டீங்களா? சரி ஓகே :)

நன்றி மொக்கையன். (பேரு சூப்பர்)
நன்றி குசும்பன்,வெற்றி, தம்பி.

Jazeela said...

//ஜெஸிலா கலாய்ச்சுட்டீங்களா? சரி ஓகே :) //இதுல என்ன சந்தேகம் :-))

இருந்தாலும் உங்களுக்கு ஆசை அதிகம்தான் :-) சென்னை மேயரை இங்க தேடுறீங்க ? :-)