Jul 3, 2007

காலச்சுவடு கவிதைகள்.

ஜூலை,2007 காலச்சுவடு(இதழ் 91)ல் வெளிவந்திருக்கும் எனது ஐந்து கவிதைகள்.
------------------
(1)
கலாமந்திர் விளம்பரப் பலகையில்
முதுகு காட்டிப் படுத்திருந்தாள் வினைல் பெண்.

இடுப்பில் சிறிய
மடிப்பிருந்தது.

மடிப்பில் ஊர்ந்த விளக்கொளியின் இருள் எறும்பை
கரங்களை நீட்டித் தொட முயன்றேன்.

கூச்சமாக இருந்தது.

தாங்கிப் பிடித்த
கம்பி வழியாகச் சொன்னேன்.

வெம்மையான நிலம் குறித்துப்
பேசும் போது
உன் விரல்களுக்கிடையேயான
பரப்பினைநினைத்துக் கொள்வேன் என்று.

சிரித்துவிட்டு
மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

குழப்பத்தில் அவசரமாக நகர்ந்தான்
சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தவன்.

------------
(2)

எவருடைய நிழலும்
வருடியிராத இந்தப் புள்ளியில்தான்

எரிமலையின் சிதறலொன்று
க‌ட‌ந்து சென்ற‌து.
-----------
(3)
என் ஜன்னலைத் திறந்தால்
பெயர் தொலைத்துவிட்ட பிணம்
கிடக்கிறது.சகதியப்பிய முகத்துடன்.
துருத்திய பற்கள் அதன்அமைதியைக் குலைக்கின்றன.
தெரிந்த முகங்களை தன் முகத்தில் பொருத்தி
நடுக்கமூட்டுகிறது.

தூர நின்று பார்த்துவிட்டு நகரும்
மூன்று மனிதர்கள்
பயந்து நெருங்கும் சில நாய்கள்
தாவித் தாவி வரும் காக்கைகள்.

த‌விர‌

வேறுயாரும் வருவதாக இல்லை.
இரவில் மழை நனைக்கலாம்
நாளை வெய்யில் அதன் முகத்தைச் சுடலாம்.
கண்களை மட்டும் அந்தக் காக்கைகள்
எடுக்க
குடல் நாய்க்கென்று இருக்கக்கூடும்.

சற்று விறைக்காமல் இருப்பின்
என்னைப் பார்த்து சிரிக்கும்.
அல்லது கூட்டிச் செல்லச் சொல்லும்.

அநாதைப் பிணங்களின் உலகம் வேறுபட்டது.
எது குறித்தும் யோசிக்காமல்
நகர்ந்துவிட வேண்டும்
-----
(4)
பிளாட்பாரத்தில்
தொடை தெரிய தூங்குபவள்
பஸ்ஸில் முறைத்தவளை
ஞாபகப் படுத்துகிறாள

தலை நசுங்கிக் கிடப்பவன்
கழுத்தில் பொருந்துகிறது-
நேற்று மணக்கோலத்தில் பார்த்தவன்
முகம

காயத்தின்
குருதியில் தெரிகிறது
உன் உருவம்.

அடையாளமற்ற‌
புள்ளியில் திருகுகின்றன‌
நிகழ்வுகள்
---
(5)
மஞ்சள் வெய்யில்
பூ
காத‌ல்
ம‌ழை
ப‌ற‌வை
நீ
அல்ல‌து
நான
என்று எளிதாக‌
சொல்ல‌ முடிவ‌தில்லை.

ம‌ர‌ண‌த்தை.
-----------

வா.மணிகண்டன்.

நன்றி: காலச்சுவடு

8 எதிர் சப்தங்கள்:

Mookku Sundar said...

These poems were written by you..??

Great..!!! Simply superb...

Ayyanar Viswanath said...

அட்டகாசம்!!

வாழ்த்துக்கள் மணி

பரத் said...

கவிதைகள் அருமை!
வாழ்த்துக்கள் மணிகண்டன்

Vaa.Manikandan said...

நன்றி சுந்தர்,அய்யனார்,பரத்.

செல்வநாயகி said...

நீண்டநாட்களுக்குப்பிறகு நான் வாசித்த கவிதைகளில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பலதளங்களுக்கும் கூட்டிப்போன கவிதைகள். நன்று மணிகண்டன்.

ilavanji said...

மணி,

கலக்கல்!

3ம் 4ம் மிகவும் பிடித்தது.

கார்திக்வேலு said...

mani,
very fresh when compared to the earlier ones
good work .

Vaa.Manikandan said...

நன்றி செல்வநாயகி, இளவஞ்சி, கார்திக்.