Dec 31, 2009

பழையன கழிதல்

2009 ஐ திரும்பிப்பார்க்கிறேன் என்று டைரிக் குறிப்பெழுதிவிடுவேனோ என்ற அச்சப்படுவதால் அதிகம் பேசாமல், 2010 அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமையவும், ஈழத்தமிழர்கள் வாழ்வில் சிறிதேனும் ஒளிக்கீற்று தென்படட்டும் என்றும் விரும்புகிறேன்.
---
இதுவெல்லாம் நடக்காமல் இருந்திருக்கலாம் என்றும் அவ்வாறு நடந்திருந்தால் நன்றாயிருக்கும் என்று எப்பொழுதுமே நிகழாத ஒன்று குறித்து மனம் அலை பாய்கிறது/விருப்பப்படுகிறது. ஆனால் உண்மை எப்பொழுதுமே யாரும் எதிர்பாராததாக இருந்து கொண்டிருக்கிறது.

ஸ்ரீராம் ஜொன்னவிட்டுலா, இங்கு பெங்களூரில் உடன் பணி புரியும் ஆந்திரக்காரர். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.ஜனவரி 7 ஆம் தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் நாள் குறித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஏதோ சிக்கல் இருக்கும் போலிருக்கிறது. வாரம் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

சிசேரியனாக இருக்கலாம் என்பதால், அறுவை சிகிச்சை செய்வதற்காக நல்ல நேரம் பார்த்து வைத்திருக்கிறார்கள். குழந்தை பிறப்புக்குப் பின் விடுப்பு எடுப்பது பற்றி பேசாமல் இருந்தார். விடுப்பு அளிப்பார்களா என்று சந்தேகமாக இருக்கிறது என்றார். இதற்கு கூட விடுப்பு தரவில்லையென்றால் வேலையை விட்டுவிட்டு ஊரில் ஒரு கடை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பச் சொன்னேன். அவர் அனுப்புவதற்காக வரிகளை தயார் செய்து கொண்டிருந்தார்.

இடையில் பெங்களூரில் அருகில் இருக்கும் தமிழ் நான்கைந்து குடும்பங்களுக்கு ஒரு விருந்து கொடுப்பதாக ஏற்பாடு. மாலை இந்திரா நகரில் இருக்கும் அண்ணாச்சி செட்டிநாடு ரெஸ்டாரண்டில் வைத்துக் கொள்ளலாம் என்றிருந்தோம். சிலர் கீழே இருக்கும் கடையில் பீடா நன்றாக இருக்கும் என்றும், அருகில் நல்ல ஐஸ்கிரீம் கடை இல்லை என்றும் வேறு சிலரும் விவாதித்தார்கள்.

அவர்களுடன் பேசிவிட்டு மதிய உணவு முடித்து விட்டு திரும்பி வந்தேன்.ஸ்ரீராம் தனது கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு இரு முழங்கைகளையும் டேபிள் மீது குத்தி கண்களை தேய்த்துக் கொண்டிருந்தார்.'மணி ஆர் யூ பிஸி' என்ற போது வழக்கமாகச் சொல்வது போல 'நோ டெல் மீ' என்றேன். நல்ல மனநிலையில் இருக்கும் போது 'செப்பண்டி' என்பதுண்டு.

"இறப்பு நிகழ்ந்துவிட்டது. எல்லாம் முடிந்து விட்டது" என்றார்.

அதிர்ச்சியில் சடாரென்று திரும்பியதில் டேபிள் மீது இருந்த ஹெல்மெட் கீழே வீழ்ந்து அதன் கண்ணாடி நொறுங்கிவிட்டது. அவரது மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது.

குழந்தை என்பது ஒரு கனவு.பத்து மாதங்களாகவோ அல்லது அதற்கும் முன்னதாகவோ இருந்து கற்பனை செய்திருப்பார். நான் இறப்பு பற்றி மேலே எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு கிளம்புங்கள், எல்லோரிடமும் நான் சொல்லிக் கொள்கிறேன் என்றேன். பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் அலைவுறுவதாகத் தோன்றியது.

மாலையில் விருந்துக்கு உடன் வரும் குடும்பங்களுக்கு ஸ்ரீராம் பற்றித் தெரியாது. எனவே விருந்தை தவிர்க்க முடியவில்லை. அவர்களோடு உண்ணும் போது ஏதோ பசியை மறித்தது. சாப்பிடாமல் அமர்ந்திருந்தேன். "பில் அதிகம் ஆகாது, சாப்பிடுங்க" என்று சிரித்தார் ஒரு நண்பர்.

இரவில் சில புத்தகங்களை அங்கொன்றுமிங்கொன்றுமாக வாசித்துக் கொண்டிருந்தேன். காலையில் ஏழு மணிக்கு ஸ்ரீராமுடன் பேசினேன். விஜயவாடா போய்ச் சேர்ந்திருந்தார்.

குழந்தை வயிற்றுக்குள் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டதாம்.இப்பொழுது அறுவை சிகிச்சையில் வெளியில் எடுத்துவிட்டார்கள். மனைவிக்கு எதுவும் பாதிப்பில்லை என்றார். கடைசி வரி கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் துக்கத்தினூடான ஒரு ஆறுதல்.
---
துக்கம் எப்பொழுதும் நம்மை ஆக்கிரமிக்கிறது, அதிலிருந்து சிறு கீற்றுக்களாகவே சந்தோஷங்கள் வெளிப்படுகின்றன.

பழையன கழிதலில் நாம் விரும்பாதவை நம்மைத் தொடரக்கூடாது என்று விரும்புகிறோம், பிரார்த்திக்கிறோம், ஆழ்ந்து நம்புகிறோம். அந்த நம்பிக்கை முன்னகர்வதற்கான தெம்பைத் தருகிறது. அந்தத் தெம்பில் மகிழ்ச்சிக்கான தேடல் பயணம் தொடர்கிறது. துவண்டுவிடாத தேடல்தானே வாழ்க்கையின் மையப்புள்ளி.

இந்த ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக அமையட்டும். வாழ்த்துக்கள்.

7 எதிர் சப்தங்கள்:

தர்ஷன் said...

மனதை கனக்கச் செய்து விட்டீர்கள்

sathishsangkavi.blogspot.com said...

மனதை நெருடும் சம்பவம்........

2010 ஸ்ரீராமிற்கு மகிழ்சியாக அமைய வேண்டுகிறேன்....

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மணி...............

anujanya said...

மேலே நண்பர்கள் சொல்வதுதான். புது வருடம் உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்.

அனுஜன்யா

நேசமித்ரன் said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

செந்தில் நாதன் Senthil Nathan said...

நெஞ்சை தொட்டது..

புது வருடம் உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்.

KPR said...

மிக அருமை நண்பரே ! வெகு அழகாய் வார்த்தைகள் வருகின்றன உமக்கு ..... வாழ்த்துக்கள்

அன்புடன்
ரவி