Dec 28, 2009

விரவிக் கிடக்கும் வெளியில்.

மதனின் கவிதைகள் "உறங்கி விழிக்கும் வார்த்தைகள்" என்ற பெயரில் தொகுப்பாக அகநாழிகை வெளியீடாக வருவதற்கான ஆயத்த வேலைகள் நடப்பதாக அறிகிறேன். இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் குறித்தான எனது பார்வை.
======

கவிதைக்கு அணிந்துரை எழுதுதல் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. விமர்சனம் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். விமர்சனம் என்பது தனியொருவனின் குறுக்கு வெட்டுப் பார்வை. அது வெறும் பார்வை மட்டுமே;கவிதையின் மீதான மதிப்பீடோ, தீர்ப்போ இல்லை. வெற்று பாவனையும் அலங்காரமும் இல்லாத ஒரு வாசகப் பார்வை கவிதையின் மீதான விவாதத்தை முன் நகர்த்தலாம்.

புறச்சூழலின் அழுத்தங்களும், ஆழ்மன பிளவுகளும், ஸ்தம்பித்த உறவுகளும் சிதைத்து விட்ட மனநிலையை உதறிவிட்டு அகண்ட பெருவெளியில் தனித்த வாசகனாக கவிதையை அணுகும் போது கவிதைக்கான புள்ளி பிடிபடுகிறது. இந்த வரிகளுக்கு நேர்மாறாக- அவன் அவனாகவே, தன் இருண்மைகளோடும், கண்ணீரின் கசப்புகளோடும் ஒரு கவிதையை உள்வாங்க முடியுமானால் அப்பொழுதிலிருந்து அந்தக் கவிதையோடு உடைக்க முடியாத பந்தத்தை அந்த வாசகன் தொடங்குகிறான்.

மதனின் கவிதைகளை அடர்ந்து பெய்யும் பனியில் இன்றைய தினத்தின் பெரும் சுமைகளோடு வாசிக்கத் துவங்குகிறேன்.

மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்துவிட்டுச் செல்லும் பாங்குடன் சில கவிதைகளும், அன்றாட சுகதுக்கங்களின் பிதுங்கலோடு வெளிப்படும் சில கவிதைகளும் இந்தத் தொகுப்பில் என்னைக் கவர்கின்றன. இந்தக் கவிதைகளின் இன்னொரு அம்சம் கவிதைக்குள் வலிந்து புதிர்களையும் சுழல் சொற்களையும் உருவாக்கும் முயற்சி அதிகம் தென்படவில்லை. எளிமையான வரிகள் கவித்துவத்தோடிருக்கின்றன; அந்த வரிகள் அதிகப் பிரயத்தனமில்லாமல் காட்சிகளை உருவாக்குகின்றன.

நம் வாழ்நாளின் பெரும்பாலான கணங்கள் துக்கத்தால் நிரப்பப்படுகின்றன.வாசலில் பெய்யும் மழை கொஞ்சமாக ஜன்னலுக்குள் சிதறுதலைப் போல சந்தோஷங்கள் எப்பொழுதும் சிறு சிதறல்களாகவே இருக்கின்றன. இந்தச் சிதறல்களை தேடி துக்கத்தின் முட்பாதைகளில் நடந்து கொண்டேயிருக்கிறது மனிதமனம். இந்தத் தேடலின் தடுமாற்றத்தில் ஆதரவாகப் பற்றிக் கொள்ள காமத்தையும்,கோபத்தையும் இன்னபிற உணர்ச்சிகளையும் மனம் நாடுகிறது. இந்த சாமானிய மனநிலை மதனின் கவிதைகள் முழுவதுமாக விரவிக்கிடக்கிறது. கவிதைகள் சாதாரணமாக வாசகனோடு உரையாடுகின்றன.

ஒரு கவிதையில், ஒவ்வொரு தினமும் ஏழுமணிக்கு எழ வேண்டிய கட்டாயத்திலிருக்கும் ஒருவன், 6.50க்கு அலாரம் வைத்து அடுத்த பத்து நிமிடம் தூங்கியும் தூங்காமலும் தனக்கான சுதந்திரத்தை அவனாகவே எடுத்துக் கொள்கிறான். கவிதையில் நேரடியாக சொல்லப்படாத இந்தச் சந்தோஷமும் சிறு சுதந்திரமும் நவீன வாழ்வு நகர மனிதன் மீது நிகழ்த்தும் நெருக்கடியான வன்முறையின் அவலத்தை காட்சியாக்குகின்றன.

கவிதைக்கான வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் ஒரு வரையறை இருந்திருக்கிறது. ஒவ்வொரு நிலப்பகுதியிலும் ஒரு வரையறை என்றிருக்கிறது அல்லது ஒவ்வொரு வாசகனும் ஒரு வரையறை வைத்திருக்கிறான். நான் சுதந்திரமாய் உலவி வருவதற்கென அந்தர வெளியை உருவாக்கித் தருவதாக எனக்கான கவிதை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த வெளியில் நான் கவிதைக்கான சில புதிர் கேள்விகளை உருவாக்குவேன். அந்த புதிர்களுக்கான விடைகளை தேடி வர எனக்கான சிறகினை பொருத்திக் கொண்டு அலைந்து திரிவேன். சில விடைகளைக் நான் கண்டறியக் கூடும் ஆனால் அவை எதுவுமே திருப்தியளிக்கப் போவதில்லை. இந்த திருப்தியின்மைதான் கவிதை உருவாக்கி வைத்திருக்கும் அந்தர வெளியின் எல்லையை விரிவாக்குகிறது, மீண்டும் என் தேடல் தொடரும். உருவாக்கிய புதிர்களுக்கும் அதற்கான பதில்களுக்குமான இந்த கண்ணாமூச்சி விளையாட்டான வாசிப்பனுபவமே எனக்கு உச்சபட்ச கவிதானுபவமாக இருந்திருக்கிறது.

இத் தொகுப்பில் இருக்கும் 'என் பங்குக் காதல் கவிதைகளில்' இரண்டாவதாக இருக்கும் "ஒரு அவன் ஒரு அவள்/ஒரு காதல் வந்தது/ஒரு உலகம் காணாமல் போனது" என்ற கவிதை எனக்கு மிகப்பிடித்தமானதாக இருக்கிறது. இந்தக் கவிதை உருவாக்கும் வெற்றிடத்தில் வாசகன் உருவாக்கிக் கொள்ளும் கேள்விகளும் அவன் தேடிச் செல்லும் விடைகளும் கவிதையை வாசகனுக்கு நெருக்கமானதாக்குகின்றன. மதனின் சில கவிதைகளில் இருக்கும் "ஒரு" என்ற சொல் தேவையற்றதாக தொங்கிக் கொண்டிருக்கிறது. அதே "ஒரு" இந்தக் கவிதையில் மிக முக்கியமானதாக இருக்கிறது.ஒவ்வொரு "ஒரு"வும் வினாக்களை உருவாக்குகிறது.

'எல்லோரும் மறந்துவிட்டிருப்பது' என்ற கவிதையை இந்தத் தொகுப்பில் முக்கியமான கவிதையாக குறிப்பிடுவேன். காவ்யா என்பவள் அக்கா ஆகிறாள்; ஆனால் அவள் கவிதையில் தன்னை பொறுத்திக் கொள்ளும் வாசகனின்/ளின் முலையை கிள்ளிவிட்டுச் செல்கிறாள். அவள் செய்யும் இந்தக் காரியம் நம் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் 'அக்கா' என்ற பிம்பத்தை தகர்த்தெறிகிறது. இந்த தகர்ப்பு தரக்கூடிய அதிர்ச்சி மிக இயல்பானது. கவிஞன் வாசகனுக்கு அதிர்ச்சியூட்டுவதற்கான எந்த முயற்சியையும் இந்தக் கவிதையில் செய்வதில்லை. இந்த இயல்புத் தன்மையும், பிம்பத் தகர்ப்பும் இந்தக் கவிதையை முக்கியமானதாக எனக்குக் காட்டுகின்றன.

இன்னொரு கவிதை 'கையலாகாதவனின் காலை'. இந்தக் கவிதை முந்தைய வரிகளில் சொன்ன கவிதையைப் போல அதிர்ச்சி தருவதில்லை, ஆனால் குப்பியில் இருந்து வெளிவரும் உறைந்து போன தேங்காயெண்ணையைப் பார்த்து, முந்தைய இரவில் கையலாகத்தனத்தை ஒரு ஆண்மகன் நினைவு கொள்கிறான் என்பது ஈர்ப்பானதாக இருக்கிறது.

கவிதைக்குள் சிறுகதை இருப்பது பற்றிய ஒரு விவாதம் தொடர்ந்து இலக்கிய உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எளிய வாசகன் இந்த விவாதத்தை நிராகரித்துவிடுகிறான். அவனுக்கு வடிவம் குறித்தான கவலை இருப்பதில்லை. வாசிப்பனுபவம் என்னும் ஒற்றை மையம் அவனை தொடர்ந்து இயங்கவும் வாசிக்கவும் செய்கிறது. மதன் சில கவிதைகளில் சிறுகதைக்கான முடிச்சுகளை வைத்திருக்கிறார். 'மலர் வாதையும் உடன் சில அனிச்சை துரோகங்களும்' கவிதையில் காரிலிருந்து உதிர்ந்து விழும் ரோஜாவைப் பற்றிய கவனம் கவிதையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. இதே கவிதையில் அதன் வடிவத்தில் இறுதியாக முயன்று பார்த்திருக்கும் முயற்சி சுவாரஸியமாக இருக்கிறது.

எப்பொழுதுமே கவிதைகளில் வரும் 'நான்' கவிஞனாக இருப்பதில்லை. அந்த 'நான்' வாசகன். வாசிப்பவன் 'நான்' என்னுமிடத்தில் தன்னைப் பொருத்திக் கொள்கிறான். இந்த இடத்தில் கவிஞன் நகர்ந்து வாசகனுக்கான இடத்தை தர வேண்டும். கவிஞன் நகராமல் இருப்பானேயானால், அந்தக் கவிதையை விட்டு வாசகன் நகர்ந்துவிடுவான். இந்த சூட்சுமத்தை பல கவிதைகளில் லாவகமாக கையாண்டிருக்கும் மதன் சில கவிதைகளில் அப்பட்டமாக "மதனாகவே" இருக்கிறார். "நினைவில் கொள்ளும் கலை" என்றொரு கவிதை. நல்ல கவிதையாக வந்திருக்க வேண்டிய இந்தக் கவிதையின் கடைசி வரிகளில் தன்னை நுழைத்து கவிதையை சிதைத்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் குறைகள் இருக்கின்றன. ஆனால் கவிதைக்கான முயற்சி மதனுக்கு கைகூடியிருக்கிறது. மேலோட்டமான மதிப்பீடுகளையும், கவித்துவங்களையும் நிராகரித்துவிட்டு பாசாங்கில்லாத கவிதை வரிகளை நோக்கி மதன் நகர்வார் என நம்புவதற்கான சாத்தியங்கள் இந்தத் தொகுப்பின் கவிதைகளில் தெரிகிறது.

5 எதிர் சப்தங்கள்:

மதன் said...

மீண்டும் நன்றிகள் மணிகண்டன்!

anujanya said...

ஆஹா, மதன் எனக்கும் பிடித்த கவிஞர். நிறைய எழுதிக் கொண்டிருந்தவர், சமீப காலங்களில் அவ்வளவு எழுதவில்லையா அல்லது நான் சென்று பார்க்கவில்லையா என்று தெரியவில்லை.

கவிதைகளைப் பற்றி இப்படி எல்லாம் எழுதலாமா?

வாழ்த்துகள் மதன். நன்றி மணி.

அனுஜன்யா

Vaa.Manikandan said...

அனுஜன்யா,

//இப்படி எல்லாம்// என்றால் 'எப்படி' எல்லாம்? :)

anujanya said...

அப்படி இல்ல மணி. (எப்படி இல்லன்னு கேக்க கூடாது :) )

கவிதை பிடிச்சிருக்குன்னு பொத்தம் பொதுவா தான் சொல்ல வருகிறது. மனதில் எவ்வளவோ தோன்றினாலும், வார்த்தைகளில் அவற்றைக் கடத்துவது வசப்படவில்லை. உங்களுக்கு இலகுவில் வருகிறதே என்ற மகிழ்ச்சி.

அனுஜன்யா

Vaa.Manikandan said...

ஓ..பாராட்டு பின்னூட்டமா அனு?

நான் விவாதத்திற்காக ஆரம்பிக்கிறீர்கள் என்று சந்தோஷப்பட்டுவிட்டேன் :)

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மணிகண்டன்!