Jan 24, 2008

ஜெயமோகனோடு ஐந்து நிமிடங்கள்

புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகன் அவர்களை இந்த முறை சந்தித்தது இரண்டாவது முறை. முதல் முறை சந்தித்தது 2005 ஆம் ஆண்டு கண்காட்சியில். அந்தச் சமயம் இன்றிருப்பதை விட நான் பொடியனாக இருந்த காரணத்தால் ஓரமாக நின்று கொண்டேன்.

இவ்வாண்டு கொஞ்ச‌ம் தைரிய‌ம் வ‌ந்திருந்த‌து. ந‌ண்ப‌ர் வெங்க‌ட்டிட‌ம் 'சிங்க‌ம் வ‌ந்திருக்கு...போய் பேசுவோமா?'என்றேன்.


ஜெயமோகனோடு நணபர் வெங்கட்.

சில‌ரிட‌ம் ந‌ம்முடைய‌ வீர‌ பிர‌தாப‌ங்க‌ளை நாசூக்காக‌ சொல்லிவிட‌ முடியும். ஜெ.விட‌ம் அது ப‌லிக்காது. அதனால் 'பிலாக் எழுதறது உண்டு சார்' என்பதோடு நிறுத்திக் கொண்டேன்.

'அப்படியா..நல்ல விஷயம்...ஆனா பிலாக்ல‌ எழுத‌ற‌து எல்லாம் ந‌ம் எழுத்தை கூராக்கும்ன்னு சொல்ல‌ முடியாது. இப்போ ஒரு கதை/கட்டுரை உயிர்மைக்கு அனுப்ப‌றீங்க. மனுஷ்ய புத்திரன் ப‌ப்ளிஷ் ப‌ண்ண‌லைன்னா நம்ம எழுத்துல ஏதோ மிஸ் ஆகுதுன்னு யோசிப்போம். பிலாக்கில் அதுக்கு வாய்ப்பே இல்லை.இல்லையா?' என்று சொல்லிவிட்டு க‌ண்க‌ளை உற்று நோக்கினார்.

இந்த‌ அள‌வுக்கு க‌ண்க‌ளை நேருக்கு நேராக‌ பார்த்து பேசும் ம‌னித‌ரை நான் இதுவரை ச‌ந்தித்த‌தில்லை என்ப‌தால் க‌ண்களை பார்க்கும் தைரியமில்லாதவனாய்‌ த‌லையை அடிக்க‌டி குனிந்து கொண்டேன்.இந்தக் கண்களுக்கு கத்தி தேவலாம்.

'தொகுப்பு எப்போ வ‌ருது‌'

'இந்த‌ புக்பேர்ல‌ வ‌ந்துடும் சார்'

'ஆமாம்...க‌விதை அங்க‌ ஒண்ணு இங்க‌ ஒண்ணு வ‌ந்தா பெரிசா தெரியாது. தொகுப்பு ஒரு ந‌ல்ல‌ பிரேக் த‌ரும். க‌வ‌னம் கிடைக்கும்'.சிரித்துக் கொண்டு த‌லையை குனிந்து கொண்டேன்.

'உங்க கூட பேசியிருக்கேன்.முன்னாடி'.

'இப்போ எல்லாம் லெட்ட‌ர்ஸ், போன்க்கு எல்லாம் ச‌ரியா ப‌தில் சொல்ல‌ முடிய‌ற‌தில்ல‌...அசோக‌ வ‌ன‌ம்ன்னு ஒரு நாவ‌ல் எழுதிட்டு இருக்கேன்..3000 ப‌க்க‌ம்...'

அத‌ற்குள் ஷாஜி ஏதோ ஜெ.விட‌ம் பேசினார்.


ஷாஜி(வலப்பக்கம் நிற்பவர்)

'இவர் ஷாஜி...பெரிய இசை விமரிசகர்...'

'தெரியுமே சார்..சொல்லில் அடங்காத இசை ஷாஜி..டைம்ஸ் ஆப் இந்தியால ஒரு கட்டுரை ரீசண்ட்டா பார்த்தேன்' என்றேன்.

'ஆமா இளையராஜாவை பத்தி...பயந்துட்டே எழுதியிருக்கார்' என்று சிரித்தார்.

மூன்றாயிர‌ம் என்ற‌ வார்த்தை எங்க‌ளுக்குள் ஒரு பேர‌திர்வை உண்டாக்கியிருந்த‌து. ஏழு நாட்கள், பதினான்கு நாட்களில் மிக‌ பிர‌மாதாமான‌ நாவல்களை முடிப்பவர்,இதனை வருடக்கணக்கில் எழுதுகிறார்.

'காடு' நாவ‌லை ப‌டித்து முடிக்க‌ என‌க்கு முப்ப‌த்தைந்து நாட்க‌ள் தேவைப்ப‌ட்ட‌து. மூன்றாயிர‌ம் ப‌க்க‌த்தை ப‌டிக்க‌ வேண்டுமானால் மூன்று வ‌ருட‌ங்க‌ளாவ‌து ஆக‌லாம். இதை எழுதுகிறார் என்று நினைக்கும் போது சிங்க‌ம் என்ற‌ ப‌டிம‌ம் டைனோச‌ராக‌ மாறிய‌து.

நான் சில‌ரிட‌ம் க‌வ‌னித்திருக்கிறேன். அவ‌ர்க‌ளாக‌ சொல்லியும் இருக்கிறார்க‌ள். த‌ன்னுடைய‌ தொகுப்பு த‌மிழ் இல‌க்கிய‌ வ‌ட்ட‌த்தில் பெரும் ச‌ல‌ன‌த்தை உண்டாக்கியிருப்ப‌தாக‌. அவர்களாக‌ச் சொல்லும் வ‌ரை என‌க்கு அப்ப‌டி ஒரு புத்த‌க‌ம் இருப்ப‌தே தெரியாது. சில‌ ம‌ணித்துளிக‌ளில் த‌ங்க‌ளுடைய‌ அறிவுரையையும் கொடுக்க‌ ஆர‌ம்பித்துவிடுவார்க‌ள். த‌ங்க‌ளுக்குத் தாங்க‌ளே ஒரு ஒளிவ‌ட்ட‌ம் பொருத்திக் கொண்டு.

ஆனால் எழுத்தை தவமாக நிகழ்த்தும், மொழியை தன் கட்டுப்பாட்டில் வைத்து ராஜபாட்டை நடத்தும் ஜெயமோகனால் எந்த‌‌ ப‌ந்தாவும் இல்லாம‌ல் இர‌ண்டு 'சொங்கி'பைய‌ன்க‌ளிட‌ம் எப்ப‌டி இவ்வ‌ள‌வு பொறுமையாக‌வும் அதே சமயம கவனத்தை தன் பேச்சில் வைத்தும் பேச‌ முடிகிற‌து என்று வியப்பாக‌ இருந்த‌து.

'மேன்ம‌க்க‌ள் மேன்ம‌க்க‌ள்தான்யா...'

18 எதிர் சப்தங்கள்:

Ayyanar Viswanath said...

மணி இந்த கட்டுரையை எதிர்பார்க்க வில்லை....நம்மிடம் / தமிழர்களிடம் இருக்கும் ஒரு பெரும்பான்மை குணம் எல்லாரையும் பீடத்தில் ஏற்றிவைத்துவிட்டு வாழ்த்துக் கவிதைகள் படிப்பதுதான்..ஜெயமோகனோ சுஜாதாவோ அல்லது எந்த மகானுபாவர்களாக இருந்தாலும் அதீத புகழ்ச்சி, தனிமனித துதி என்பதெல்லாம் படு அபத்தமகத்தான் தோன்றுகிரது.3000 பக்கங்கள் எழுதுவதால் அவரை டைனோசர், சிங்கம் என்றெல்லாம் விளிப்பது சிரிப்பையே வரவைத்தது..நமெல்லாரும் மனிதர்கள்தான் மணி..தனக்கு பிடித்தவர்களை சிலாகிப்பது என்பது இயல்புதான் என்றாலும் இன்றைய சூழலில் இக்குறுகிய வட்டங்களிலிருந்து வெளிவர வேண்டியது மிகவும் அவசியமென எனக்குப் படுகிறது.

நீ எழுதும் கவிதைகளைப் போல நீ பதிவிக்கும் வாழ்க்கையைப் போல பிறர் தன்னுடையதை தன் புத்திசாலித்தனங்களை ஏதோ ஒரு வடிவில் பொதுவில் வைக்கிறார்கள் இதற்கு இத்தனை முக்கியத்துவம் அவசியமா..ஜெயமோகனை ஜெயமோகன் என்றே விளியுங்கள்..சார் மோர் என்பதெல்லாமே அடிமைத் தனத்தின் அல்லது தன் பற்றிய அடிப்படை நம்பிக்கைகள் குறைவானவற்றின் வெளிப்பாடே.. மிகுந்த கர்வத்தோடு இருக்கக்கூடாதுதான் அதற்காக அடிப்படை நம்பிக்கைகளை இழக்க வேண்டிய அவசியமில்லை.

ஜெயமோகன் உங்களைப் போல இன்னொரு படைப்பாளி

Anonymous said...

அய்யனார்

வெவரம் புரியாத ஆளா இருப்ப போலிருக்கே.

மணிகண்டன் ஜெமோவை மனுச ஜென்மமாவே பார்க்கலை. அதைத்தான் சூசகமா சொல்லியிருக்காரு.

இருண்மையை விட்டு வெளிய வாங்கய்யா

சாத்தான்குளத்தான்

Vaa.Manikandan said...

அன்பின் அய்யனார்,

க‌ருத்துக்க‌ளுக்கு ந‌ன்றி.

மூன்றாயிர‌ம் ப‌க்க‌ங்க‌ளை எழுதுகிறார் என்ப‌த‌ற்காக‌ பீட‌த்தில் வைப்ப‌தெல்லாம் ஒன்றுமில்லை. சுஜாதாவை தாங்க‌ள் குறிப்பிட்டிருப்ப‌து, என‌து க‌விதை நூலினை வெளியிட்டார் என்ப‌த‌ற்காக‌வா?.
அப்ப‌டியெனில் ந‌ன்றி.

என்னைப் பொறுத்த‌ வ‌ரைக்கும் த‌மிழ் எழுத்துல‌கில் மிக‌ முக்கிய‌மான‌ ப‌டைப்பாளியென்று ஜெய‌மோக‌னைச் சொல்வேன். தொண்ணூறுகளுக்குப் பிறகான‌ புனைவுலகில் ஜெயமோகன் ஒரு தவிர்க்கவியலாத சக்தியாக வெளிப்படுகிறார். மூன்றரைப் பக்கங்களை மூச்சுத் திணறி எழுதிவிட்டுத் தன்னைப் பெரும் படைப்பாளி என்று சொல்லித் திரிகிறவர்கள் மத்தியில் ஆற்று நீர் ஓடுவது போல சொற்களை கோர்வையாக்கி தடையில்லாமல் நகரும் எழுத்துக்குச் சொந்தக்காரரான ஜெயமோகன் எனக்கு எழுத்துலகின் சிங்கமாகத் தெரிகிறார். சிங்க‌ம் க‌தை எழுதுமாய்யா என்று லாஜிக்க‌லாக‌ கேட்க‌ மாட்டீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன்.

இப்பதிவை வைத்து என்னை வட்டத்தை விட்டு வெளியே வரச் சொல்வீர்களேயானால் என்னைச் சுற்றிலும் வட்டம் பெரிதாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்னும் சுஜாதா, சாரு நிவேதிதா, மனுஷ்ய புத்திரன், திலீப்குமார், மனோஜ், தேவதேவன், பிரான்சிஸ் கிருபா என்று நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள்.

இது ஜெயமோகன் என்ற தனிமனிதருக்காகவோ அல்லது அவருக்கு 'பவர்' எதுவும் இருப்பதாகவோ நினைத்து எழுதவில்லை. அவரின் ஆளுமை ஐந்து நிமிடங்களில் என் எண்ணத்தின் மீதாக உருவாக்கிய அதிர்வுகளைச் சொல்வதற்காக எழுதப்பட்டது. தனிமனித துதிக்காகவோ அல்லது வேறு பலனுக்காகவோ எழுதுவ‌தாக‌ இருந்தால் நான் ஜெய‌மோக‌னுக்கு ப‌திலாக‌ வேறு ஒருவரை,அதிகாரமிக்கவராக ஒருவரை தேர்ந்தெடுத்திருப்பேன்.

ஜெய‌மோக‌னை 'சார்' என்று விளிப்ப‌தில் த‌வ‌றொன்றுமிருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை அய்ய‌னார். நான் பிற‌ந்த‌ 1982 ஆம் ஆண்டிற்கும் முன்பாகவே ஜெய‌மோக‌ன் எழுத‌த் துவங்கியிருக்க‌க் கூடும்.

சார் என்ப‌து ம‌ரியாதையின் வெளிப்பாடேய‌ன்றி நீங்கள் குறிப்பிட்டது போல அடிமைத்த‌ன‌மில்லை. நீங்க‌ள் என் முன் நின்றால் அய்ய‌னார் என்று விளிப்பேன். ஆனால் சாத்தான் குள‌த்தார் நின்றால் அவ‌ர் வ‌ய‌துக்குத் த‌குந்த‌ப‌டி 'சார்' என்றுதான் விளிப்பேன். :)

ஆம். ஜெய‌மோக‌னும் ஒரு ப‌டைப்பாளிதான். ம‌க‌த்தான ப‌டைப்பாளி.

manjoorraja said...

மணிகண்டனுக்கு ஜெயமோகனை பிடித்திருக்கிறது நல்ல ஒரு எழுத்தாளராக கருதுகிறார். மேலும் அவரது வயதுக்கு தகுந்து அவரை சார் அல்லது அய்யா என விளிக்கிறார். இதில் தவறேதும் இல்லையே அய்யனார். பெரியவர்களை மரியாதையாக குறிப்பிடுவதில் தவறு இருப்பதாக கருதுவது சரியல்ல. இதை அடிமைத்தனம் என்று கூறுவது சரியா என்பதை யோசிக்கவும். மேலும் அடிப்படை நம்பிக்கைக்கும் ஒருவரை மரியாதையாக விளிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

தான் ஒரு படைப்பாளி என்ற கர்வமில்லாமல் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களுடன் சரிசமமாக ஜெயமோகன் பேசியிருப்பதனாலெயே அவர் மணிகண்டனுக்கு மரியாதை ஏற்பட்டிருக்கலாம்.

மேலும் தனக்கு பிடித்த எழுத்தாளர்களை பற்றி சிலாகிப்பது குறுகிய வட்டத்திற்குள் இருந்து என்பதும் ஏற்கக்கூடியதல்ல.

Anonymous said...

நான் சில‌ரிட‌ம் க‌வ‌னித்திருக்கிறேன். அவ‌ர்க‌ளாக‌ சொல்லியும் இருக்கிறார்க‌ள். த‌ன்னுடைய‌ தொகுப்பு த‌மிழ் இல‌க்கிய‌ வ‌ட்ட‌த்தில் பெரும் ச‌ல‌ன‌த்தை உண்டாக்கியிருப்ப‌தாக‌. அவர்களாக‌ச் சொல்லும் வ‌ரை என‌க்கு அப்ப‌டி ஒரு புத்த‌க‌ம் இருப்ப‌தே தெரியாது. சில‌ ம‌ணித்துளிக‌ளில் த‌ங்க‌ளுடைய‌ அறிவுரையையும் கொடுக்க‌ ஆர‌ம்பித்துவிடுவார்க‌ள். த‌ங்க‌ளுக்குத் தாங்க‌ளே ஒரு ஒளிவ‌ட்ட‌ம் பொருத்திக் கொண்டு.

:)))))))))))))))

Ayyanar Viswanath said...

மணி இந்த வரிகள் தான் எனக்கு மேற்கண்ட பின்னூட்டத்தை எழுதத் தூண்டியது

/எந்த‌‌ ப‌ந்தாவும் இல்லாம‌ல் இர‌ண்டு 'சொங்கி'பைய‌ன்க‌ளிட‌ம் எப்ப‌டி இவ்வ‌ள‌வு பொறுமையாக‌வும் அதே சமயம கவனத்தை தன் பேச்சில் வைத்தும் பேச‌ முடிகிற‌து என்று வியப்பாக‌ இருந்த‌து.

'மேன்ம‌க்க‌ள் மேன்ம‌க்க‌ள்தான்யா...'/

/'சிங்க‌ம் வ‌ந்திருக்கு...போய் பேசுவோமா?'என்றேன்./

/சில‌ரிட‌ம் ந‌ம்முடைய‌ வீர‌ பிர‌தாப‌ங்க‌ளை நாசூக்காக‌ சொல்லிவிட‌ முடியும். ஜெ.விட‌ம் அது ப‌லிக்காது/

/ என்று சொல்லிவிட்டு க‌ண்க‌ளை உற்று நோக்கினார்./

/இந்தக் கண்களுக்கு கத்தி தேவலாம்./

Anonymous said...

அசோக‌ வ‌ன‌ம்ன்னு ஒரு நாவ‌ல் எழுதிட்டு இருக்கேன்..3000 ப‌க்க‌ம்

That is a big pillow, will the publisher/book seller give a bed also with the book :).

Vaa.Manikandan said...

அனானிமஸ் அண்ணாச்சி,

3000 பக்கமும் ஒரே பொஸ்தகமா செய்ய முடியாதுங்க... 2,3 பாகமாத்தானே வரும்??? எதுக்கும் உங்க அட்ரஸ் கொடுத்தீங்கன்னா வெசாரிச்சு சொல்லிடுறேன். :)

அய்யனார்,

மேற்கண்ட‌ வரிகளில் என்ன தவறாக இருக்கிறது?

ஜெயமோகன் எங்களிடம் மிக‌ எளிமையாக‌ பேசினார். இர‌ண்டு க‌ட்டுரைக‌ளைப் பிர‌சுர‌ம் செய்த‌வ‌ர்க‌ளே த‌ங்க‌ளை பெரிய‌ ஜாம்ப‌வான்க‌ளாக‌ நினைத்துத் திரிகையில், அவ‌ர் எளிமையாக‌ இருந்த‌து என‌க்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து உண்மைதான்.

'சிங்க'த்துக்கு ப‌தில் சொல்லியாகிவிட்ட‌து.

க‌ண்ணைப்பார்த்து பேசினார் என்று சொன்ன‌தில் என்ன‌ய்யா குறை க‌ண்டுபிடித்தீர்? பார்வை அவ்வ‌ள‌வு தீர்க்க‌மாக‌ இருந்த‌து என்று சொல்வ‌து வ‌ழ‌க்க‌த்தில் உள்ள‌ ஒன்றுதானே....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

3000 பக்கம் எழுதுவதெல்லாம் ஒரு விஷயமா.? நீள வாக்கில் எழுதிப் பழக்கப் பட்டவர்கள் சிலர் உண்டு (அதைத் தன்னெழுச்சி எழுத்து என்று அவரே சொல்லிக் கொள்வார்). இது ஒரு புறம் இருக்க, நம்ப ராஜேஷ் குமாரை விடவா அதிகம் எழுதியிருக்கப் போகிறார் ஜெமோ.?

உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் சரி. உங்கள் பார்வையில் மகத்தான படைப்பாளியாகவே இருக்கட்டும். ஆனாலும் நீங்கள் எழுதியிருப்பது கொஞ்சம் அதிகம் என்று தான் தோன்றுகிறது.

Anonymous said...

உங்களுக்கு பிடித்தவரை 'நீங்கள்' புகழ்வதில் தப்பில்லைன்னு நினைக்கிறேன்...

ஆனால் எழுத்து வியாபாரிகளை ( People who write for living) எழுத்து வியாபாரிகளாகவே பார்ப்பது மிகுந்த பலன் தரும் ( சில நேரங்களில் சில மனிதர்கள் ஹி ஹி )

Vaa.Manikandan said...

சுந்தர் என்ன இப்படி சொல்லீட்டீங்க...ஜெயமோகன் எழுத்தும் ராஜேஷ் குமார் எழுத்தும் ஒண்ணா? அடக்கடவுளே.

எழுத்தைப் படிக்காமல் அது தன்னெழுச்சி எழுத்து என்று வகைப்படுத்துவது சரியல்ல.

மறுபடி ஒரு 'அடக்கடவுளே'..இது ரவிக்காக.

Boston Bala said...

நன்றி மணிகண்டன்

லக்கிலுக் said...

ஜெமோ ஒரு சிங்கம் தான் என்பதை நானும் உணருகிறேன். ஆனால் அவர் மீது அதிக பக்தி வந்துவிட்டால் நீ இந்துத்துவவாதி ஆகிவிடுவாய் என்று ஒரு நண்பர் என்னை தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.

ஹரன்பிரசன்னா said...

வாம, ஜெயமோகன் எப்போதுமே எதிராளிகளிடம் எளிதாகப் பேசுபவர். இது உங்களுக்கு முதல்முறை என்பதாலும் அவரது எழுத்துகளைப் படித்து அவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிம்பம் காரணமாகவும் நீங்கள் இப்பதிவை எழுதியிருக்கிறீர்கள் என புரிந்துகொள்ளமுடிகிறது. முதல்முறை ஜெயமோகனிடன் பேசும்போது இதே மனநிலையை நானும் அடைந்தேன். இதை தனிமனிதத் துதி என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. நான்கைந்து முறை பேசிவிட்டால், அடுத்த பேச்சிலேயே, ஸார் இது எனக்குப் பிடிக்கலை என்று அவரிடமே நீங்கள் சொல்லக்கூடும். அப்படியானால் அது தனிமனித வெறுப்பாகும் என்றுணர்ந்து, யோசித்துச் செய்யவும். :)

ஸார் என்று அழைப்பது தமிழ்நாட்டில் இயல்பானது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், திலீப்குமார் எல்லாருடனும் நேரில் பேசும்போது ஸார் என்றே அழைக்கிறேன். நான் உங்களைப் போலவே தமிழடிமையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. :) என்ன, தமிழ் ஆர்வலர்கள் ஐயா என்றழைக்கிறார்கள். அப்துல் ரஹ்மான் என்ன பாட்டு எழுதியிருக்கீங்க என்றோ அறிவுமதி என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க இப்போ என்றோ வைரமுத்து டீ சாப்பிடுறீங்களா என்றோ, என்ன இராமகி அன்னைக்கு அப்படி எழுதிட்டீங்க என்றோ நேர்ப்பேச்சிலும் வயதில் பெரியவர்களை உங்கள்/என் வயதொத்தவர்கள் பேசுவார்கள் என்று யாரேனும் சொல்வார்களானால் அதை நிஜமாகவே நம்பிவிட்டேன். சிரிக்காமல் சீரியஸாக படிக்கவும். எனக்குச் சரியாகத் தெரியாத தமிழின் படி ஸார் = ஐயா. அப்படிப் ஸார் மோர், ஐயா கொய்யா சேர்த்துப் பேசாமல் ஜெயமோகன் என்றழைத்துப் பேசுவதே சரியானது என்றாலும் இயல்பான நேர்ப்பேச்சில் இது சாத்தியமானதாக இல்லை என்பதை நானும் உணர்கிறேன். எழுதும்போது பிரச்சினை வருவதில்லை. சுபவீ ஐயாவாக இருந்தாலும் சுஜாதா ஸாராக இருந்தாலும் சபவீதான், சுஜாதாதான். ஆனால் நாளை நேரில் பேசினால் சுஜாதா ஸார்தான், சுபவீ ஐயாதான். சரியா ஸார்?

கொண்டோடி said...

மிக நல்ல, அருமையான பதிவு.
பல முக்கிய விவாதங்களைத் தொடக்கி வைத்திருக்கிறீர்கள். இங்கே கருத்தாட எனக்கு எந்தக் கருத்துமில்லை.

மதன் திரைப்பார்வை நூறாவது நாள் நிகழ்ச்சியில் சத்யராஜ் சொன்னது நினைவுக்கு வருகிறது.

"அட! அஞ்சறிவு சிங்கத்தைப் போய் ஹீரோவுக்கு ஒப்பிடுறது ஏன்னு புரியல. ஆடு மாடச் சொன்னாலாவது பரவாயில்ல.
அட, அவசரத்துக்கு அடிச்சு கொழம்பு வைக்க முடியாது இந்த சிங்கத்தை வைச்சு. ஒண்ணுக்குமே பிரயோசனமில்லாத சிங்கத்தை ஒப்பிடுறது ரொம்ப தப்புங்க."

டைனோசரைப் பற்றியும் சத்யராஜ் இதைத்தான் சொல்லியிருப்பாரோ?

இன்று எம்மால் காணமுடியாத டைனோசரை, கடவுளுக்கு உருவகமாகச் சொன்னீர்களோ?

கவிஞர்களின் உரைநடைகள்கூட ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லும். எனக்கேன் வம்பு.

Anonymous said...

//மேலும் அவரது வயதுக்கு தகுந்து அவரை சார் அல்லது அய்யா என விளிக்கிறார். இதில் தவறேதும் இல்லையே அய்யனார். பெரியவர்களை மரியாதையாக குறிப்பிடுவதில் தவறு இருப்பதாக கருதுவது சரியல்ல. இதை அடிமைத்தனம் என்று கூறுவது சரியா என்பதை யோசிக்கவும். மேலும் அடிப்படை நம்பிக்கைக்கும் ஒருவரை மரியாதையாக விளிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.//

The use of 'sir' (as saar) in India and and abroad is different and in different contexts. I believe, in abroad, it is treated as practicing the legacy of british 'aandaan-adimai' culture. Probably addressing as Mr. Jayamohan would've been appropriate.

காயத்ரி சித்தார்த் said...

//ஆனால் எழுத்தை தவமாக நிகழ்த்தும், மொழியை தன் கட்டுப்பாட்டில் வைத்து ராஜபாட்டை நடத்தும் ஜெயமோகனால் //

உண்மை மணிகண்டன். இந்த கட்டுரையில் தவறோ மிகையோ இருப்பதாய் எனக்கும் தோன்றவில்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தீராநதியில் எஸ்.ரா. ரஜினியை ரஜினி சார் என்று எழுதியதை சு.ரா. கிண்டல் செய்து எழுதியிருந்தது ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது.!

ஆனால், சிங்கம் டைனோசரையெல்லாம் யாராவது சார் போட்டு அழைப்பார்களா என்ன.? :)