Nov 19, 2007

வண்ணக் கைகுட்டை விற்பவன்-தக்கை கவிதைகள்

வண்ணக் கைகுட்டை விற்பவன்
எதேச்சையாக உதறிக் காட்டினான்.

துணியிலிருந்து
வண்ணப் பூக்கள் உதிர்ந்தன.
சிறகை அசைக்கப் பழகிய குருவிகள்தடுமாறிப் பறந்தன.
மலை உருண்டு விழவும்
நதியொன்று அவ்விடத்தைக் க‌ட‌ந்தது.

சில தலைவர்கள் முழங்கத் துவங்கினார்கள்
நடிகர்களையும்
சில‌ ந‌டிகைகளையும் உதிர‌ச் செய்து
புதிய‌ உல‌க‌ம் ப‌டைக்கத் துவங்கினான்.

நினைவு வந்தவனாய்
கைக்குட்டைகளை கவனிக்கையில்
நிறமிழந்து
வெளுப்பாகியிருந்தன அவை.

உதறுவதை நிறுத்தி
விம்ம‌த் துவ‌ங்கினான்.

ஆயிரம் ஆண்டுகளாக
அவ‌ன் விம்முவ‌தாக‌
இந்த ஓவிய‌த்தைப் பார்ப்பவர்கள்
சொல்லிச் செல்கிறார்க‌ள்.
----
மழை ஓய்ந்த இரவின் அமைதியை
யாரும் கொண்டாடுவதில்லை.

மழை ஓய்ந்த இரவில் கதைகள் தோன்றுகின்றன‌
மழை ஓய்ந்த இரவில் கவிதைகள் எழுதுகிறார்கள்
மழை ஓய்ந்த இரவில் சாராயம் அர்த்தம் கொள்கிறது

நகரம் தன்னை கழுவிக் கொள்ளும்
இந்த இரவின் வெறுமையில்
இந்த இரவின் நிசப்தத்தில்
இந்த‌ இர‌வின் அகால‌த்தில்

மரணத்தைக் கடக்கிறார்கள்.

கொண்டாட வேண்டிய‌ ம‌ர‌ண‌த்தை.

நன்றி: தக்கை, நவம்பர் 2007.

2 எதிர் சப்தங்கள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றாக வந்திருக்கின்றன கவிதைகள். பாராட்டுக்கள், நண்பரே.

LakshmanaRaja said...

//ஆயிரம் ஆண்டுகளாக
அவ‌ன் விம்முவ‌தாக‌
இந்த ஓவிய‌த்தைப் பார்ப்பவர்கள்
சொல்லிச் செல்கிறார்க‌ள்//

மிக நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.