Apr 25, 2007

வலம்புரி: பாலைவனச் சிற்றோடை.

வலம்புரி சிறுபத்திரிக்கை இரண்டு மாதங்களாக மின்னஞ்சல் மூலமாகக் கிடைக்கிறது. குவைத் நாட்டின் பாலைக்குயில்கள் என்ற தமிழர் அமைப்பு நடத்தும் பத்திரிக்கை.

சிறு பத்திரிக்கைக்கென கட்டுக்களும், இறுக்கமான மொழியமைவும் தேவையென்ற கூற்றுக்களில் எனக்கு நம்பிக்கையில்லை. சிறுபத்திரிக்கை காட்டாற்று வெள்ளம். எப்படி வேண்டுமானாலும் அதன் திசை இருக்கலாம். படைப்பாளியின் சுதந்திர வெளி அது. இந்த அந்தர வெளியில் வாசகன், படைப்பவனின் மனநிலையில் ஒன்றியும் பயணிக்கலாம் முற்றாக எதிராகவும் நிற்கலாம். ஏன் அது இல்லை. இது ஏன் இப்படி இருக்கிறது என்றால், தயங்காமல் சொல்லுவான் சிறுபத்திரிக்கைக் காரன். "இது இப்படித்தான். விருப்பம் என்றால் படி" என.

படைப்பாளியைத் தாண்டி படைப்புக்கான முக்கியத்துவம் தருகின்ற இந்த'கெத்து' வலம்புரிக்கு வரவேண்டும் என்பது என் விருப்பம். பதினாறு பக்கங்களில் சில பகுதிகளை மிக முக்கியமானவைகளாக‌க் கருதுகிறேன். தேவதேவனின் கவிதைகளும், வைக்கம் பஷீரின் சிறுகதை மொழிபெயர்ப்பும் என் பார்வையில் மிக‌ப் பாராட்ட‌த்த‌க்க‌ன‌.

புறநானூற்றுப் பாடல் ஒன்றும் பொருளோடு வந்திருக்கிறது. பெண்மொழி பகுதியும் குறிப்பிட வேண்டிய பகுதி. என் கருத்தாக இங்கு ஒன்றைச் சொல்லவேண்டுமானால், இன்னமும் அழுத்தமான பெண்மொழிக்கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

குறையாகச் குறிப்பிட்டால், எழுத்துப் பிழைகள். இரண்டு இதழ்களே வந்த நிலையில் குறைகளை பிரம்மாண்டப் படுத்த வேண்டியதில்லை. ஆனால், குறைந்த பக்கங்கள் மட்டுமே இருப்பதனால், எழுத்துப் பிழைகளில் நண்பர்கள் கவனமோடு இருக்கலாம்.

க‌விதையின் சொற்கள் குறையும் போது, கவிதையின் செறிவு கூடுவது, நல்ல கவிதையின் அடையாளங்களில் ஒன்று. மிகக் குறைந்த பக்கங்களில் வரும் பத்திரிக்கை மிகச்செறிவானதாக வருவது, நல்ல பத்திரிக்கையின் அடையாளங்களில் ஒன்று. அதனை வலம்புரி நெருங்கி இருப்பதாக உணர்கிறேன்.

தூரப் பிரதேசத்தில், சிறு குழுவால், எவ்வித பொருள் சார்ந்த பலனும் எதிர்பாராமல் தொடங்கப்பட்ட இம்முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவர்கள் வெற்றிகரமாக தொடர்ந்து இயங்குவதற்கான வலிமையையும், உற்சாகத்தையும் தமிழும், வாசகர்களும் தருவார்கள் என நம்புகிறேன்.

த‌மிழ்ச் சிறுப‌த்திரிக்கை ஒன்று, மின்ன‌ஞ்ச‌லில் உல‌வுவ‌து, அனேக‌மாக‌ இதுவாக‌த்தான் இருக்கும். இன்னும் செறிவான‌ ப‌டைப்புக‌ளோடு இவ‌ர்க‌ள் அடைவ‌த‌ற்கான‌ வாச‌க‌ர் கூட்ட‌ம் மிக‌ப் பெரிதாக‌ இருக்கிற‌து.

வாழ்த்துக்க‌ள்.

7 எதிர் சப்தங்கள்:

விழியன் said...

வலம்புரிக்கு வாழ்த்துக்கள்.

வெற்றி said...

மணி,
பதிவுக்கு மிக்க நன்றி.

/* மின்னஞ்சல் மூலமாகக் கிடைக்கிறது.*/

நான் எப்படி இச் சிறுபத்திரிகையைப் பெற்றுக் கொள்ளலாம்? அவர்களின் தொடர் விபரங்கள் எங்கே பெறலாம்?

/* இவர்கள் வெற்றிகரமாக தொடர்ந்து இயங்குவதற்கான வலிமையையும், உற்சாகத்தையும் தமிழும், வாசகர்களும் தருவார்கள் என நம்புகிறேன். */

நிச்சயமாக. நல்ல படைப்புக்களை வரவேற்று ஊக்கமளிக்க வேண்டியது எமது தார்மீகக் கடமை.

Vaa.Manikandan said...

பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் வெற்றி.

valampurimagazine@gmail.com

வெற்றி said...

மணி,
மிக்க நன்றி.

Anonymous said...

இது எல்லாம் இங்கு சொல்லாதீர்கள்.

இடம்புரி என்று போட்டிக்குன்னே ஆரம்பிப்பாய்ங்க..... குதர்க்கமானவீய்ங்க..... :)

பார்ப்பன, பெரியார் மேட்டருதான் வேலைக்கு ஆவும்...

Anonymous said...

வலம்புரியைப் பற்றிய கட்டுரைக்கு நன்றி மணிகண்டன்.

Ayyanar Viswanath said...

டேங்க்ஸ் மணி

:)