Feb 16, 2010

வன்முறை- சமூக உளவியலின் சிக்கல்கள்


மழை பெய்து ஓய்ந்திருந்த முன்னிரவில் திருப்பூரின் நெரிசல் மிகுந்த சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி இரண்டு பேர் சண்டையிட்டிருக்கிறார்கள். சண்டையை களைப்பதற்காக தனது காரிலிருந்து கீழே இறங்கிய முத்துச்சாமி என்ற நடுத்தர வயதுக்காரர் இரண்டு தரப்பையும் திட்டிவிட்டு கிளம்பியிருக்கிறார். அடுத்த இரண்டாவது தெருவிலிருக்கும் தன் வீட்டின் முன்னால் காரை நிறுத்திவிட்டு வீட்டின் கதவைத் திறப்பதற்காக கீழே இறங்கியவரை பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள். கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கும் இந்தச் செய்தி தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கும் வன்முறை மனதின் வெறும் 'சாம்பிள்' மட்டுமே.

இறப்பவனின் குடும்பம், அவனை நம்பியிருப்பவர்கள் என்ற எந்தச் சிந்தனையும் இல்லாமல் வாழை மரத்தை வெட்டுவதைப் போல ஆளை வீழ்த்திச் செல்லும் சமூகத்தில் வாழ்கிறோம் என்பதனை நினைக்கவே திகிலாக இருக்கிறது. கொல்பவர்கள் இறப்பவனைப் பற்றி நினைக்கிறார்களா என்பதனைக் கூட விட்டுவிடலாம், அடுத்தவனைக் கொல்லும் முன்பாக, கொலைக்குப் பிறகாக தனக்கு இந்த நீதியமைப்பு அளிக்கப்போகும் தண்டனை, சமூகத்தில் கொலையாளி என தனக்குக் குத்தப்படும் முத்திரை என்பனவற்றைக் கூட கொலை செய்பவர்கள் நினைப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. ரூபாய்த் தாள்களும், தான் ஒரு ரவுடி என்பதனை நிலைநாட்டுவதற்கான ஒருவனின் எத்தனமும் எந்தத் தயக்கமுமில்லாமல் அவனை ஆயுதம் ஏந்தச் செய்கின்றன. வீரம் என்ற பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறை அக்கிரமங்கள் அதிகாரத்தின் நிழலுக்குள் பதுங்கி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட முடிகிறது என்பதால், இந்தச் சில்லரைத்தனங்களை செய்பவனுக்கு தன் வீரம் குறித்தான மிதப்பு இயல்பாகவே வந்துவிடுகிறது. ரவுடித்தனத்தின் மூலமாக சமூகம் தன்னைக் குறித்தான பயங்கொள்ளச் செய்ய முடியும் என்றும் ஆழமாக நம்புகிறார்கள். ரவுடித்தனத்தையே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டு அதிகாரத்தோடு கோலோச்சுகிறார்கள்.

தமிழர்களின் முக்கியமான பண்புகளில் ஒன்று வீரம், தமிழன் என்பவன் வீரன், தமிழ் மண் வீரத்தின் விளைநிலம் என்றெல்லாம் பழம்பெரும் இலக்கியங்களாலும் வாய்வழிக் கதைகளாலும் பிம்பமாக்கப்பட்டிருந்தவை உருமாறி, வேறு வடிவமெடுத்து வன்மம், குரூரம், வன்முறை என்ற இடத்துக்கு வந்துவிட்டதாக தோன்றுகிறது.

மாண்புமிகு மந்திரிகள் செல்லும் பாதையில் நாட்டு வெடிகுண்டுகளின் தாக்குதலால் கால் சிதறிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் காவல்துறையின் துணை ஆய்வாளரை வெட்டிச் செல்லும் கும்பல் மட்டுமே வன்முறையின் பிரதிநிதிகள் இல்லை. முன்னாள் மந்திரியொருவர் காலை நேரத்தில் நடைப்பயிற்சியில் இருக்கும் போது கொன்று தீர்ப்பவர்கள் மட்டும் வன்முறையாளர்கள் இல்லை. மட்டரக ஜீன்ஸ் துணியை அணிந்து கொண்டு நகருக்குள் சுற்றும் தினக் கூலியில் தொடங்கி, நகரின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நகரப் பேருந்தில் தொங்கியவாறு சென்று வரும் நடுத்தர வர்க்கப் பணியாளர் வழியாக, பன்னாட்டு நிறுவனத்தில் ஆறு இலக்க சம்பளம் பெறுபவன் வரை வன்முறையையும், கோபத்தையும், அடுத்தவன் மீதான வெறுப்பையும் குலச் சொத்தாக தூக்கித் திரிபவர்களைத் திரும்பிய திசைகளில் எல்லாம் பார்க்க முடிகிறது.

அற்பமான பிரச்சினைக்களுக்காக அடுத்தவனின் சட்டையை பிடித்து இழுத்து அவனது ஈகோவை சுண்டிப் பார்க்கிறோம். பைசா பெறாத விஷயங்களில் மற்றவனை முறைத்து அவனது கோபத்தை தூண்டிவிடுகிறோம். கோபமும், அடுத்தவன் மீதாக நிகழ்த்தும் வன்முறையும் நமக்குள் படிந்து கிடக்கும் ஆழ்மனக் கசடின் வெவ்வேறு வடிவங்கள்தான். இந்தச் சமூகம் நமக்கு கற்றுத் தந்து கொண்டிருப்பதை ரத்தமும் சதையுமாக சமூகத்துக்கு திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அமைச்சராக இருந்தவர் ஆள்கடத்தலில் ஈடுபட்டு பதவியிழக்கிறார் என்பதையும், கொலை, களவுகளில் ஈடுபடுபவன் தான் முக்கியமான அதிகார மையத்திற்கு வேண்டப்பட்டவன் என்று சொல்லி காவல்துறையை மிரட்டுவதையும் மிகச் சாதாரணமான நிகழ்வாகவே நாம் எதிர்கொள்கிறோம். இத்தகைய செய்திகளால் நமக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படுவதில்லை மாறாக இவையெல்லாம் இயல்பான ஒன்றுதான் என்பதை ஏற்றுக் கொள்ள மனதை பழக்கியிருக்கிறோம்.

"நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட" என்று நடிகர் விஜய் தன் ஹீரோயிஸத்தை காட்டுகிறார். இதே ரவுடித்தனம்தான் தங்களின் அடையாளம் என்று காட்டிக் கொள்வதில் எந்தக் கதாநாயகனும் வெட்கப்படுவதில்லை. வெட்டுவதும், ரத்தம் பார்ப்பதும், எதிரியை நசுக்குவதும்தான் கதாநாயகனுக்கான தகுதிகள் என்பதனை அச்சு பிசகாமல் ஒவ்வொரு இயக்குநர்களும் தங்கள் படங்களில் காட்டுகிறார்கள். கதாநாயகன் இரண்டரை மணி நேரப் படத்தில் எழுபது அல்லது எண்பது பேர்களை வெட்டியும் சுட்டும் கொன்று தன் பராக்கிரமத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இந்த ஒவ்வொரு கொலையும் படத்தில் மிக வக்கிரமாக காட்டப்படுவதைத்தான் படவிரும்பிகள் ரசிக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். தலை விரி கோலமாக, அதிரடி இசை முழங்க ஹீரோ வெட்டிச் சாய்க்க வில்லன் படைகள் வீழ்ந்து கிடக்கும் போது விடப்படும் இடைவேளையின் போது எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட தன் கரங்களை முறுக்கேற்றிக் கொண்டு யாரையாவது மூக்கின் மேல் குத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கிறான்.

திரைப்படங்கள் மட்டும்தான் ரவுடியிஸத்துக்கும் வன்முறைக்குமான அடிப்படைக் காரணம் என்று சொல்ல முடிவதில்லை. இந்தச் சமூகம் வன்முறையை நோக்கி தனது பார்வையை திருப்பி நீண்ட நாட்களாகிவிட்டது. உலகமயமாக்கலின் விளைவாக உருவாகியிருக்கும் வாய்ப்புகளும், இந்தத் தலைமுறையிடையே உருவாக்கப்பட்டிருக்கும் போட்டிகளும் வன்முறைக்கான வித்துகளாக மாறியிருக்கின்றன. போட்டிகள் என்பது வெறும் போட்டிகளாக மட்டும் இருப்பதில்லை. அது பொறாமையை திரை போட்டு மூடி வைத்திருக்கிறது. இந்தப் பொறாமை அடுத்தவனின் மீதான வக்கிரத்திற்கும் வன்முறைக்கும் ஊற்றுக்காலாக இருக்கிறது. அறிமுகமில்லாத வேறொருவரிடம் கூட தன் கோபத்தை ஒருவரால் எந்தத் தயக்கமும் இல்லாமல் காட்டிவிட முடிகிறது.

சாலையில் தன் பாதையில் குறுக்கே வருபவன் மீது உக்கிரமான வார்த்தைகளை பிரயோகித்து அவனது வன்முறையை மிக இலாகவகமாக தூண்டிவிட முடிகிறது. பேருந்து நடத்துனரால் பயணியை எந்தவித தயக்கமும் இல்லாமல் திட்ட முடிகிறது. தன் வீரத்தைக் காட்ட நடத்துனரை பயணியால் வசை பாட முடிகிறது. தன் காதலுக்கு தடையாக இருக்கும் கணவனை/மனைவியை கொல்வதற்கான திட்டமிடுதல் எந்த விதமான அறவுணர்வுகளும் இல்லாமல் மிக இயல்பாகவே நடத்தப்படுகிறது. உறவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் கொச்சைச் சொற்களை பொதுவிடத்தில், வேறொருவனின் மீது பயன்படுத்துவதில் எந்தக் குற்றவுணர்வும் இருப்பதில்லை. தமிழ் பாரம்பரியம் என்று சொல்லிக் கட்டப்பட்டிருந்த ஒழுக்கவியல் நெறிமுறைகள் யாவும் தங்களது செதில்களை உதிர்த்துவிட்டு இப்படியாக பல்லிளிக்கின்றன.

பாலியல் அத்துமீறல்கள் தமிழ்ச் சமூகத்தில் நிகழும் அதே அளவிற்கு அல்லது அதைவிடவும் அதிகமாக வன்முறைக் களியாட்டங்கள் அரங்கேறுகின்றன. இவை யாவுமே முன்காலத்திலும் இருந்தவைதான். ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளில் சமூக உளவியலில் உருவாகியிருக்கும் இத்தகைய சிக்கல்களும், இந்தப் பிரச்சினைகளின் பரிமாணங்களும் உச்சத்தில் இருக்கின்றன. இந்தச் சிக்கல்கள் அவிழ்க்க முடியாத புதிர்த்தன்மை கொண்டிருக்கின்றன. இவைகளுக்கான தீர்வுகள் என்ன என்பதற்கு யாரிடமும் திட்டவட்டமான பதிலில்லை. பரிந்துரைக்கப்படும் ஓரிரு தீர்வுகளையும் அமுல்படுத்துவதில் இருக்கும் பிரச்சினைகளும் பூதாகரமானவை.

அலுவலகத்தில் மன அழுத்தத்துடன் பணிகளை முடித்து வரும் ஒருவன் தனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமிடத்தில் அடுத்தவர்களிடம் கோபத்தை காட்டுவதை பொதுவான சட்டங்களால் அல்லது அற நெறிமுறைகளால் கட்டுப்படுத்த முடியப் போவதில்லை. இந்த சமூக வன்முறை தனிமனித கட்டுப்பாடு சார்ந்திருக்கிறது. தனிமனித கட்டுப்பாடு என்பது கற்பித்தலின் மூலமாகவே துவங்கப்பட வேண்டும். பள்ளிகளில் தனிமனித கட்டுப்பாடு அல்லது ஒழுக்க நெறிமுறை சொல்லித் தரப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்படும் பள்ளிகளில் மதிப்பெண்கள் மட்டுமே பிரதானமாக்கப் பட்டுவிட்ட சூழல் நிலவுகிறது. பாடங்களை மனனம் செய்து தேர்வறையில் கக்குவது மட்டுமே மாணவர்கள் முன்பாக இருக்கும் பணி. இந்தப் பணி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உற்றார்கள் ஆகியோர்களின் கடும் அழுத்தங்களின் மூலமாக நிறைவேற்றப்படுகிறது. பக்கத்துவீட்டு மாணவர், உடன் பயில்பவர் என யாரோ ஒருவரோடு ஒப்பிடப்பட்டு போட்டி என்பது பொறாமை கலந்ததாகவே மாற்றப்படுகிறது. இந்தப் பொறாமை எதிர்காலத்தில் எடுக்கப் போகும் வடிவங்களின் ஆபத்தை உணராமல் தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நள்ளிரவு தாண்டிய பஸ் பயணத்தில் கிருஷ்ணகிரிக்கு முன்பாக இருக்கும் ஒரு உணவு விடுதியில் பேருந்தை நிறுத்தியிருந்தார்கள். கிளுகிளுப்பான பாடல் சத்தத்தில் பாப்கார்ன் கடையில் கொஞ்சம் பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். கடைக்காரர் அடித்துவிடுவதற்கான அத்தனை முஸ்தீபுகளிலும் இறங்கியிருந்தார். விசாரித்ததில் பத்து ரூபாய்க்கு வாங்கிய பாப்கார்ன் அளவு மற்றவர்களை விட ஒரு சிறுவனுக்கு குறைவாக இருந்ததாம். பாப்கார்னை வாங்கிய சிறுவன் கோபம் அதிகமானதில் கடைக்காரரை 'தேவிடியா பையன்' என்று திட்டிவிட்டான். கடைக்காரர் அந்த சிறுவனை அடிக்க வரும் போது பேருந்தில் பையனுடன் வந்தவர்கள் இணைந்து கொண்டதால் சண்டை பெரிதாகியிருக்கிறது. பையனை பார்த்தேன். அனேகமாக பத்து வயது இருக்கும். அவன் உபயோகப்படுத்திய வார்த்தைக்கு அவனுக்கு அர்த்தம் தெரியுமா என்று அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அந்தப் பையனிடம் கேட்டபோது, ' நானே டென்ஷனா இருக்கேன் உனக்கு இன்னாத்துக்கு' என்றவன் வேறொரு வார்த்தையை எனக்கு அர்ச்சனையாக்கினான். நுணலும் தன் வாயால் கெடும்.

இன்றைக்கு பரம்பரைகள் தாண்டி தொடரும் பகைமை வேண்டியதில்லை, தலைமுறைக்கும் நீண்டு வரும் வரப்புத் தகராறு தேவையில்லை. முட்டுச் சந்தில் உதிர்க்கும் சில சொற்கள் ஒருவனின் உயிரை எடுப்பதற்கான அனைத்துவிதமான சாத்தியங்களையும் உருவாக்கும் காலகட்டத்தில் நம் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.

7 எதிர் சப்தங்கள்:

Unknown said...

================================================
உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதில்
enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஓட்டளிப்புப் பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

================================================

Marimuthu Murugan said...

//கோபமும், அடுத்தவன் மீதாக நிகழ்த்தும் வன்முறையும் நமக்குள் படிந்து கிடக்கும் ஆழ்மனக் கசடின் வெவ்வேறு வடிவங்கள்தான். //
//பள்ளிகளில் தனிமனித கட்டுப்பாடு அல்லது ஒழுக்க நெறிமுறை சொல்லித் தரப்படுகிறதா//

மற்றும் நிறைவுரை...

இது போன்ற கருத்துக்கள் என்னை வெகுவாக ஈர்த்தன...
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் தேவையான பதிவு..
தொடர வாழ்த்துக்கள்...

PPattian said...

நல்ல கட்டுரை.. வன்முறையை பிரயோகிக்காதவன் ஏமாளியாகவும், கோழையாகவும், ஆண்மையில்லாதவனாகவும் பார்க்கப்படுகிறான்.

நான் சரியான பாதையில் செல்லும்போதும் தவறாக வந்து என் வண்டியை இடித்தவன் கூட என்னைப் பார்த்து "ஏய்!" என்று முறைத்து விட்டுப் போகிறான்..

//எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட தன் கரங்களை முறுக்கேற்றிக் கொண்டு யாரையாவது மூக்கின் மேல் குத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கிறான்//

கவலையளிக்கிறது ஆனால் நிதர்சனம்..

Anonymous said...

உயிர்மையின் புத்தக பட்டியலில் 'சைபர் சாத்தான்கள்' என்ற புத்தக விளம்பரம் பாத்தேன். எப்போது இந்த புத்தகம் வரும்?

- குமார்

Vaa.Manikandan said...

நன்றி மாரிமுத்து,புபட்டியன்.

குமார்,

தங்களின் ஆர்வம் மகிழ்ச்சியளிக்கிறது.

எனக்கும் ஆர்வமாக இருக்கிறது. ஆனால் எப்பொழுது வெளிவரும் என்று தெரியவில்லை. வந்தவுடன் நிச்சயம் இங்கு அறிவிக்கிறேன்.

ஆர். அபிலாஷ் said...

மணி இது அருமையான கட்டுரை. தமிழ் மனவியலின் முக்கியமான கூறை பேசியிருக்கிறீர்கள். இதை ஒரு பத்திரிகையில் பிரசுரித்திருக்கலாமே!

ஆர். அபிலாஷ் said...

மணிகண்டனின் நூல் முன் அட்டை தயாரி வந்திருப்பதை பார்த்தேன். விரைவில் எதிர்பார்க்கலா. நிறைய புதிய விசயங்களை கொண்ட நூல் என்பது என் அனுமானம்.