Jul 21, 2009

சுனாமி வந்த தினம்

வாழ்நாளில் நான் எதிர்கொண்ட மிகப் பெரிய அச்சம் சுனாமியை எதிர்கொண்ட நாள்தான். கடற்கரையை நோக்கிய சாலையில் நான் என் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு சென்ற அந்தக் காலைவேளையில் திடீரென ஒரு ஜனக் கூட்டம்கடல் துரத்திட்டு வருது... ஓடுங்கஎன்று சொல்லிக் கொண்டே ஓடிவருவதைப் பார்த்தேன். அப்போது நான் அடைந்த உணர்ச்சிக்கு நிகரான ஒரு உணர்ச்சியை வேறு எப்போதும் அடைந்ததில்லை. அது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இப்போதும் நான் கனவில் அந்தக் காட்சியைப் பார்க்கிறேன். துரத்தி வரும் கடல் என்ற படிமத்திலிருந்து நான் ஒருபோதும் விடுபடமுடியாது. ’

*****


குங்குமத்தில் வெளிவந்த மனுஷ்ய புத்திரனின் இந்தப் பதிலைப் படிக்கும் போது எனக்கு சுனாமி தினத்தின் ஞாபகம் வருகிறது.

2004 ஆம் ஆண்டு முதுகலை படிப்பின் ப்ராஜக்ட் பணிக்காக சென்னையில் இருந்தேன். ஆரம்ப நாட்களில் பள்ளிக்கரனைக்குப் பக்கமாக நாராயணபுரத்தில் நண்பர்களோடு தங்கி இருந்தேன். அந்தப் பகுதி ஊருக்கு மிகத் தள்ளி இருப்பதாக உணர்ந்ததால், கொஞ்ச நாட்களில் எல்லாம் அடையாறில் ..டி க்கு அருகில் இருந்த ஒரு சந்தில் தனியாக வீடு எடுத்துக் கொண்டேன். அதை வீடு என்று சொல்ல முடியாது. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த ஒற்றை அறை. காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்து தண்ணீர் அடித்தால்தான் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், இன்ன பிறவற்றிற்கும். ஆயிரம் ரூபாயில் நகருக்குள் அதை விட மேலான அறை கிடைப்பது மிகச் சிரமம் என்பதால் தங்கிக் கொண்டேன்.

சனி, ஞாயிறு போன்ற தினங்களில் விடுமுறை என்று அறையில் உறங்க முடியாது, ஆஸ்பெஸ்டாஸ் வழியாக இறங்கும் வெப்பம் ஆளை உருக்கிவிடும். காலையில் குளித்துவிட்டு கடையில் ஏதாவது- அதிகபட்சமாக ஒரு மசால் தோசை, உண்டுவிட்டு அருகில் இருக்கும் காந்தி மண்டபத்தில் படிப்பதோ வேடிக்கை பார்ப்பதோ என்றிருப்பேன். மதிய உணவுக்குப் பின் மீண்டும் மண்டபத்தில் உறங்கிவிடுவது வாடிக்கையாகியிருந்தது.

என்னைப் போன்று பலருக்கும் காந்தி மண்டபம் தற்காலிக வீடாக இருந்ததை உணர்ந்திருக்கிறேன். பூங்கா- காதலருக்கும், இன்னும் பிறரின் பொழுதுபோக்குக்கும் மட்டுமே என்ற என் மனப்பிம்பம் சிதைந்தது அந்தச் சமயத்தில்தான். சென்னை போன்ற பெருநகரங்களில் போக்கிடம் அற்ற, வாழ்வின் கசப்புகளை அசைபோட அல்லது மறக்க, தவிர்க்கவேவியலாத துன்பங்களைச் சுமந்து கொண்டு முகத்தில் வேதனையின் கோடுகளைப் படரவிடும் எண்ணற்ற நபர்களுக்குப் பூங்காக்கள்தான் இடம் தருகின்றன. சிலீரிடும் பூங்காவின் காற்றில் கணநேரமாவது வாழ்வின் வசந்தத்தை ஸ்பரிசித்துவிடுகிறார்கள்.

நான் தங்கியிருந்த அறைக்கு அருகில் அதே மாதிரியான ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் இன்னொரு குடும்பம் வாடகைக்கு இருந்தார்கள். அடையாறில் இருந்த புற்று நோய் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க வந்திருந்த பெண்ணும், பெண்ணின் தாயாரும் அந்தக் கூரையில் தங்கியிருந்தார்கள். அந்தப் பெண்ணைப் பார்க்க எனக்குக் கொஞ்சம் பயமாயிருந்தது. அந்தப் பெண்ணுக்கு முடியைக் கத்தரித்து விட்டிருந்தார்கள். புத்தி பேதலித்த ஒரு பார்வையை நான் எதிர்ப்படும் ஒவ்வொரு சமயமும் என் மீது நேர்கோட்டில் செலுத்துவாள். ஒரு சமயத்திலும் கூட அந்தக் கண்களை என்னால் நேருக்கு நேர் பார்க்க முடிந்ததில்லை.

கழிவறை எனக்கும் அந்தக் குடும்பத்துக்கும் வேறு என்றாலும் குளியலறை ஒன்றுதான். காலையில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை எடுத்துப் போய் சிக்கனமாக உபயோகப்படுத்த வேண்டும். ஐந்தரை மணிக்கு எழுந்து தண்ணீர் பிடித்தவுடன் குளித்து ஆறரை மணிக்கு எல்லாம் அறையைப் பூட்டிவிடுவேன். அந்த அறையில் எவ்வளவுக்கு எவ்வளவு தங்க முடியாமல் இருக்க முடியும் என்று பார்த்துக் கொள்வேன்.

இந்தச் சமயத்தில் உயிர்மை அலுவலகத்துக்குச் சென்று வர ஆரம்பித்தேன். நல்ல இலக்கியங்களை வாசிக்கத் துவங்கியதும் அப்பொழுதுதான். எனக்கு சென்னை அயல் மண்ணாக இருந்தது. இதற்கு முன்பாக சேலத்திலும், வேலூரிலும் இருந்தாலும் கல்லூரி விடுதியை விட்டு அதிகம் வெளியில் வந்ததில்லை. நண்பர்கள் உடனிருந்தார்கள். இருவாரத்திற்கு ஒரு முறை ஊருக்குப் போக வெளியில் வருவதுதான் அதிகபட்சம். சென்னையில் தனிமை என்னை நசுக்கத் துவங்கியிருந்தது. நான் எழுதுவதற்கும், படிப்பதற்கும் ஒரு பற்றுக்கோல் தேவைப்பட்டது. உயிர்மை அதைத் தந்து கொண்டிருந்தது. உயிர்மை அலுவலகத்தில் தமிழின் பிரபலமான படைப்பாளிகளை 'பார்க்கத்' துவங்கிய பருவம் அது. அந்தச் சமயத்தில் படைப்பாளிகள் யாரிடமும் பேசியதில்லை. வருபவர்கள் மனுஷ்ய புத்திரனோடு பேசிக் கொண்டிருப்பார்கள். நான் ஏதாவது இதழ் ஒன்றைப் புரட்டிக் கொண்டு அதே அறையில் இருப்பேன்.

பல சமயங்களில் இரவு ஒன்பதரை மணி தாண்டிய பிறகு பஸ் டிக்கெட் மிச்சம் ஆகும் என்பதால் அபிராமபுரத்திலிருந்து கோட்டூர் புரம் வழியாக அடையாற்றுக்கு நடந்து வருவேன். இதை இப்பொழுது நம்புவதற்கு எனக்குமே கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் வறுமை என்றில்லை. ஐடி துறை கொடி கட்டத்துவங்கிய காலம் அது. உடன் படித்த நண்பர்கள் இருபதாயிரம் ரூபாயை ஒவ்வொரு மாதமும் கண்ணில் பார்க்கத் துவங்கியிருந்தார்கள். நான் பி.. முடித்தவுடன் வேலைக்கு எதுவும் முயற்சி செய்யாமல் எம்.டெக் படித்தாக வேண்டுமென்று, வீட்டில் மாதம் இரண்டாயிரம் வாங்கிக் கொண்டிருந்தேன். போதாதற்கு வீட்டு ஓனர் தன் மகன் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பதாகவும், படிக்கும் போதே அங்கிருந்து பணம் அனுப்புவதாகவும் என்னைக் கிளறிக் கொண்டிருந்தார். ஏதோ அடையாளம் இல்லாத குற்ற உணர்ச்சி என்னை அரிக்க ஆரம்பித்திருந்தது.

கடல் கொந்தளித்த டிசம்பர் 26 விடுமுறையாயிருந்தது. நண்பனொருவன் தன் தோழியைப் பார்க்க பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்தான். இருவரும் காதலித்துக் கொண்டிருந்தார்கள். அவனோடு சேர்ந்து கொண்டு அவளது திருவான்மியூர் விடுதிக்குச் சென்று கொண்டிருந்தோம். வழியில் எதிர்ப்படுவோர் எல்லாம் கடல் கொந்தளிப்பு பற்றியே பேசினார்கள். திருவான்மியூருக்குள் கடல் புகுந்துவிட்டதாகவும் சொன்னார்கள். பயத்தில் அவன் அவளை போனில் அழைத்து எதுவுமாகவில்லையே என்றான். அவள் ஜெயந்தி தியேட்டருக்கு முன்பாக நின்று கொண்டிருப்பதாகச் சொன்னாள். எங்களுக்கு நிகழ்ந்துவிட்டதன் வீரியம் தெரியாமல் இருந்தது. அவர்கள் இருவருக்கும் ஊர் சுற்ற வேண்டும் என்று ஆசை, எனக்குக் கடலைப் பார்க்க ஆசை.

காதலர்களோடு தனித்த ஒருவன் இருப்பது நாகரிகமல்ல என்பதால், எனக்கு வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். கூவத்தில் நீர் மட்டம் அதிகமாயிருந்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் அதைப் பற்றி மட்டுமே பேசினார்கள். ராயப்பேட்டைக்குச் சென்றேன். அரசு மருத்துவமனையில் பிணங்களை குவியல் குவியலாகக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். பிணத்தை அடையாளம் பார்ப்பதாக இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தார்கள். மருத்துவமனையின் வெளியில் ஒருவர் தானும் கடலால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கையில் ஏதோ அகப்பட்டதை இறுகப்பிடித்து தப்பித்தாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதை நம்பிக் கொண்டேன். இப்பொழுது யோசித்தால் அது இயலக் கூடிய விஷயமா என்று சந்தேகமாயிருக்கிறது.

என் வாழ்நாளில் அத்தனை பிணங்களைப் பார்த்ததில்லை. இனியும் பார்க்க விருப்பமில்லை. மனம் முழுவதும் விரக்தியின் கசப்பு பரவத் துவங்கியது. இனி நின்று கொண்டிருந்தால் உருவாகும் மன அழுத்தத்தையும் பயத்தையும் தாங்க முடியாது என்பதால் மனுஷ்ய புத்திரனைப் பார்க்கச் செல்ல முடிவு செய்தேன்.

அபிராமபுரத்தில் இறங்கி நடந்த போது பசிக்கத் துவங்கியது. அங்கு ஒரு தள்ளுவண்டிக்கடையில் கறிக்குழம்போடு சோறு தருவார்கள். விலையும் சல்லிசு. வெளியில் சாப்பிட்டேன், அதுவும் அபிராமபுரத்திலேயே சாப்பிட்டேன் என்று சொன்னால் மனுஷ்ய புத்திரனிடம் திட்டு வாங்க வேண்டும் என்பதால் எப்பொழுதும் என் வீட்டருகிலேயே சாப்பிட்டதாகச் சொல்லி விடுவேன். இப்பொழுது உணவை வாங்கினாலும் இரண்டு வாய்க்கு மேலாக உண்ண முடியவில்லை. மருத்துவ மனைக் காட்சிகள் நிழலாடின. வயிறு குமட்டியது. காசு கொடுத்த போது, "சாப்பாடு சரியில்லையா பா?" என்ற கடைக்காரரின் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.

உயிர்மை அலுவலகத்தில் அனைவரும் தைரியமாக இருந்ததாகத் தோன்றியது. மனுஷ்ய புத்திரனைத் தவிர. அவர் அச்சத்தின் பிடிக்குள் இருந்தார். கடல் ஊருக்குள் வந்தால் எப்படித் தப்பிப்பது என்ற வினாவைச் சுழற்றிக் கொண்டிருந்தார். செய்தி சேனல்களில் திகிலூட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சுனாமி என்ற பெயர் அறிமுகமாகவில்லை. செய்தியாளர்கள் 'டிசுனாமி' என்றே உச்சரித்தார்கள். இன்னும் சில நாட்களுக்கு நாளிதழ்களிலும் 'ட்சுனாமி' அல்லது 'டிசுனாமி' என்று எழுதினார்கள். செய்திகளில் வரும் பிணங்களையும், அழுபவர்களையும் பார்க்க முடியாமல் வாசலில் அமர்ந்து கொண்டிருந்தோம்.அப்பொழுது நான் அமர்ந்திருந்த திண்ணையில் இப்பொழுது குருவிகளுக்கான கூடும் அதில் கொஞ்சம் குருவிகளும் இருக்கின்றன.

மனுஷ்ய புத்திரனுக்கும், எனக்கும் பயம் விலகாத முகங்கள். லல்லி, ஏதேனும் நிகழ்ந்தால் மொட்டை மாடிக்குச் சென்றுவிடலாம் என்றார். அந்தச் சமயத்திலும் எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. பொங்கி வரும் கடல் பதினைந்தடி உயர மாடியை மட்டுமா விட்டு வைக்கும். ஒரு காரை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டின் உட்புறமாகச் சென்றுவிடுங்கள் என்று சொன்னேன். எல்லோரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எனது தொலைபேசி ஒலிக்கத் துவங்கியது. சித்தப்பா பேசினார். கிளம்பி வரும்படி உத்தரவு. நான் ஏதோ சமாதானம் சொல்லி வைத்துவிட்டேன். அடுத்ததாக அம்மா பேசினார். புறப்படச் சொல்லி அழுதார். அழுகை என்றால் சாதாரணமாக இல்லை. தேம்பித் தேம்பி. நான் புதிதாக புத்தகங்களின் மூலம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயல்பவன் அல்லவா? "போக வேண்டும் என்றிருந்தால் எப்படியும் போய்விடுவோம். கடல்கிட்ட இருந்து தப்பிக்க ஊருக்கு வரும் போது பஸ்ஸில் அடிபட்டால் என்ன ஆவது" என்றேன். அவ்வளவுதான். அம்மா கதறியதில் ஊரே இரண்டு பட்டிருக்க வேண்டும். அடுத்தாக அப்பா. "அம்மாவுக்கு ஏதும் ஆகக் கூடாது என்றால், இப்பொழுதே கிளம்பு". இனியும் என்னால் ஊருக்குப் போவதைத் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை.

"நான் கிளம்புகிறேன் சார்" என்றேன் .பு விடம். "அடப்பாவி! எங்களை எல்லாம் மட்டும் இங்கையே விட்டுவிட்டா?" என்றார் விளையாட்டாக. பெரிதாக எந்தப் பதிலும் நான் சொல்லவில்லை. அடையாறில் அறையைத் திறந்து சான்றிதழ்களை மட்டும் எடுத்துக் கொண்டேன். நாற்பது நிமிடங்களுக்குள் கோயம்பேடு சென்று சேர்ந்திருப்பேன். தாம்பரம் வருவதற்குள் நான் சென்னையைக் கடந்துவிட்டேனா என்று கேட்டு வீட்டிலிருந்து மூன்று அழைப்புகள். பொய் சொன்னாலாவது அமைதியாக இருப்பார்கள் என்று தாம்பரம் தாண்டும் போது விழுப்புரத்தைத் தாண்டப் போவதாகச் சொன்னேன். வீட்டில் நான் சுனாமியைத் தாண்டிவிட்டதாக நினைத்துக் கொண்டார்கள்.

vaamanikandan@gmail.com

நன்றி: உயிரோசை' 20-07-2009

4 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Interesting post...

JesusJoseph said...

என் வாழ்நாளில் அத்தனை பிணங்களைப் பார்த்ததில்லை. இனியும் பார்க்க விருப்பமில்லை.

JesusJoseph said...

என் வாழ்நாளில் அத்தனை பிணங்களைப் பார்த்ததில்லை. இனியும் பார்க்க விருப்பமில்லை.
//
ஆம் இனி யாரும் பார்க்க வேண்டாம்

ny said...

வணக்கம்..
உங்களின் பின் நவீனத்துவப் பதிவுகள் தேன்!!

இந்தக் கட்டுரையின் இறுதி வரிகளில் உறைந்து விட்டேன்!!
தொடர்கிறேன் :)