Jun 26, 2009

தேர்வு ரத்து: இருளை நோக்கி முதல் படி.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதற்காக ஆலோசனைகளை துவக்கியிருக்கிறது மத்திய அரசு. பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களின், மன நெருக்கடியை குறைப்பதாக காரணம் சொல்லி இதனை பரிசீலனை செய்கிறார்கள்.

பதினைந்து வயது மாணவனால் தேர்வெழுத முடியவில்லை என்பதும் அதனால் அவன் மனநெருக்கடிக்கு ஆளாகிறான் என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. படித்து முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் இந்திய மாணவர்களோடு மட்டும் போட்டியிடுவதில்லை. உலகம் அவர்களுக்கான கதவுகளை திறந்து வைத்துக் காத்திருக்கிறது. அங்கு சீனர்களும், அமெரிக்கர்களும் இன்னும் பலரும் முஷ்டியை மடக்கிக் கொண்டு தயாராகவே இருக்கிறார்கள். இந்திய மாணவர்கள் அவர்களோடு போட்டியிட்டுத்தான் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ஒபாமா அவரது நாட்டு மக்களிடம் சொல்கிறார். "அமெரிக்கர்களே! உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் இடத்தைப் பிடிக்க சீன, இந்திய மாணவர்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்- விரைவாக, மிக விரைவாக".

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நண்பன், நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் இருக்கிறான். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட அந்நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்க பணிகள் அனைத்தும் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்டு இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள். மென்பொருளின் தரப் பரிசோதனை(டெஸ்டிங்) மட்டுமே இந்தியாவில் மேற்கொள்கிறார்கள்.

இப்பொழுது நிறுவனத்தின் அமெரிக்க அலுவலகத்திலிருந்து இந்தியப் பணியாளர்களை உந்துகிறார்கள். "ரஷ்யாவில் பணிபுரிபவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் இந்தியர்களைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம். ரஷ்யர்களிடம் இருந்து பணிகளை எடுத்து நீங்கள் செய்ய வேண்டும். இது ஓராண்டுக்குள் முடிவடைய வேண்டும்". பத்தாண்டுகளாக ரஷ்யர்கள் செய்து வரும் வேலையை ஓராண்டில் முற்றிலுமாக இந்தியாவிற்கு நகர்த்தத் தேவைப்படும், இந்தியர்களின் உழைப்பை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. ரஷ்யர்களும் தங்களின் பணிகளை இந்தியர்களுக்கு விட்டுக் கொடுக்கப்போவதில்லை. போட்டி மிகக் கடுமையானதாக இருக்கும். வெல்பவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்.

மென்பொருள் மட்டுமல்ல, பொறியியல், மருத்துவம், ஆராய்ச்சி, விண்வெளித் துறை என்ற பல துறைகளிலும் இந்தியர்களுக்கான போட்டி மிகக் கடுமையானதாகவும், உலகளவிலானதாகவும் இருக்கிறது. இந்த கடும் போட்டிக்கு வளரும் தலைமுறையை தயார்படுத்த பதினைந்து வயது(பத்தாம் வகுப்பு) என்பது சரியான வயதாகவே இருக்க முடியும்.

இன்றைய இளந்தலைமுறை இந்தியர்கள் உலகளவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சிறுவயதிலேயே அவர்களுக்குள்ளாக உருவாக்கப்படும் போட்டித் தன்மை காரணமாக இருக்கிறது. தேர்வுகளுக்கு இந்தியர்களின் இந்த போட்டி மனநிலை உருவாக்கத்தில் பெரும் பங்கு இருக்கிறது.

தேர்வு என்பது வெறும் பத்திகளை மனனம் செய்வதும், மூன்று மணி நேரம் எழுதுவதுமே என்றிருப்பதால் வறண்ட தன்மையானதாகவும், மாணாக்கர்களை மனநெருக்கடிக்குள்ளாக்குவதாக இருக்கிறது.

இந்த நிலையில் தேர்வினை ரத்து செய்வதை விடவும், கல்வித் திட்டத்தை மாற்றியமைப்பதும், பாடங்களை நெறிப்படுத்துவதுமே அரசாங்கம் செய்யக் கூடிய பணியாக இருக்க முடியும். பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுமானால், மாணவனின் போட்டி மனப்பான்மை அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. வேறொன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யும் பட்சத்தில், மாணவன் தனது பதினேழாவது வயதில் எழுதும், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுதான் வெளியுலகத்தோடு போராடும் முதல் போட்டியாக அமையும். பதினேழு வருடங்கள் கவலையில்லாமல் இருந்த மாணவன், தீடிரென்று போட்டி உலகிற்குள் பிரவேசிக்கும் இந்தத் தருணம்தான்,அவனுக்கும்,அவனது பெற்றோருக்கும் உண்மையான நெருக்கடியாக அமையும்.

இன்றைய சூழலில் தேர்வு ரத்து என்ற பெயரில், நேரடியாக கண்ணில் தெரியும் தமிழக அரசின் தவறு ஒன்றைக் குறிப்பிட வேண்டுமானால், அது நுழைவுத் தேர்வு ரத்து.

பொதுத் தேர்வில் 1200க்கு 1111 மதிப்பெண்கள் பெற்ற மாணவனொருவனின், கட் ஆப் மதிப்பெண் எனப்படும் பாடங்களில் பெறும் மதிப்பெண் இருநூறுக்கு 194 என்றாலும் அவனது ரேங்க் அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில் அவனுக்கு இடம் கிடைக்கப் போவதில்லை.தொண்ணூறு சதவீத மதிப்பெண் பெற்ற மாணவன் சராசரிக்கும் குறைவானவனாக இருக்க முடியாது. ஆனால் அவனது ரேங்க் குறைந்து போயிருக்கிறது. இது அவனை மன நெருக்கடிக்கு உள்ளாக்கும்.

பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி எவ்வளவு சிரத்தையற்று செய்யப்படுகிறது என்பதை ஆசிரியர்களிடம் பேசித் தெரிந்து கொள்ளலாம். ஒரு மாணவனின் எதிர்காலம் விடைத்தாளை திருத்தும் ஆசிரியரின் மனநிலையை பொறுத்து ஊசலாடுகிறது. நுழைவுத் தேர்வு கணிணி மூலம் திருத்தப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதோடு ஒப்பிட்டால் பல மடங்கு சிறப்பானது. நுழைவுத் தேர்வும் இருக்குமானால், மாணவன் ஆசிரியரின் கரங்களில் சிக்கிக் கொள்ளாமல் அவனது திறனை வைத்து நல்ல ரேங்க் வாங்கி விட முடியும்.

தேர்வுகளை ரத்து செய்வதால் மட்டுமே மாணவர்களின் மன நெருக்கடியை குறைத்துவிட முடியாது என்பதற்கான உதாரணமாக நுழைவுத் தேர்வு ரத்தினை குறிப்பிட முடியும். இதனை யாரேனும் மறுத்தால் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.

தேர்வுகளை ரத்து செய்யும் முன்பாக அரசாங்கம் கல்வித் துறையில் செய்ய வேண்டிய பெரும்பணிகள் இருக்கின்றன.

செய்முறைக்கல்வித் திட்டத்தை உயர் கல்வி வரைக்கும் கொண்டு வர வேண்டும். வெறும் பாடத்தோடு இல்லாமல் மாணவர்களுக்கு தாங்கள் என்ன படிக்கிறோம் என்பதும், அது நடைமுறையில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதும் புரிய வைக்கப்பட வேண்டும். தேர்வுகள் இந்தப் புரிதல் திறனை சோதிப்பதாக இருக்கலாம்.

மெட்ரிக், சிபிஎஸ்சி, மாநில வாரிய(ஸ்டேட் போர்ட்) என்ற பல பிரிவுகள் இருக்கத் தேவையில்லை. சீர்படுத்தப்பட்ட ஒரே கல்வி முறை சிபிஎஸ்சி தரத்துடன் நாடு முழுவதும் அமலாக்கப்பட வேண்டும். இந்த சமச்சீர் திட்டத்தை அமல்படுத்துவதில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட வேண்டும். உதாரணமாக சிபிஎஸ்சி தரத்தை கிராமப் பள்ளிகளில் கொண்டுவருவதற்கான தகுதி ஆசிரியர்களுக்கு இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்குத் தகுந்த பயிற்சியளிக்கப்பட வேண்டும்.

கிராமப்புற அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வித்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், அதனை கண்காணிக்க மத்திய அரசின் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

கணினிகள் நாடு முழுவதுமான பள்ளிகளில் பரவலாக்கப்பட வேண்டும்.

அதைவிட மிக முக்கியமாக, கிராமப்புற மாணவர்கள் குடும்பச் சூழலை மீறி பள்ளி வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். செஸ் எனப்படும் கல்வி வரி மூலம் வரும் வருவாய், கிராமப்புற கல்வி வளர்ச்சிக்கு எந்த அளவில் பயன்படுத்தலாம் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்.

அதே சமயம், தேர்வுகளை ரத்து செய்யாமல், தேர்வு முறை எளிதாக்கப்பட்டு, உபயோகமான கல்வி முறை பள்ளிகளில் அமல்படுத்தப் பட வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்யாமல், வெறும் தேர்வு ரத்து என்பது மக்களை கவரும் இலவச திட்டங்களை போன்று Populist திட்டமாக அமைந்துவிடுவதோடு, அடுத்த தலைமுறையின் திறனை வெளிக்கொணர்வதற்கு பதிலாக அவர்களை பின் தள்ளிவிடும் பணியை செவ்வனே செய்துவிடும்.

8 எதிர் சப்தங்கள்:

Chellamuthu Kuppusamy said...

தேர்வை ரத்து செய்யும் அறிவிப்பு, ஏற்கனவே தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட நுழைவுத் தேர்வு ஆகியவற்றை உங்களோடு சேர்ந்து எதிர்க்கிறேன். அதே நேரம் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பதை நான் வன்மையாக மறுக்கிறேன். எதிர்க்கிறேன்.

அப்படி நடக்குமானால் நமது வரலாற்றுப் பாடங்களில் கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும் காணாமல் போவார்கள். நேதாஜிக்கு இணையாக சாவர்க்கர் வந்து சேருவார்.

Vaa.Manikandan said...

குப்புசாமி, நல்ல கருத்து. நன்றி. வரலாறு பாடத்தை பொறுத்த வரைக்கும் இந்த அபாயம் நிச்சயம் உண்டு. தாய்மொழிப்பாடமும், வரலாறும் கவனிக்கப்பட வேண்டியவை.

Unknown said...

இவர்கள் வெளிநாட்டு பாணியை பின்பற்றவேண்டும் என நினைத்து அரசு அறை வேக்காடாக திட்டம் வகுத்திருக்கிறது என்பது என் கருத்து.

அவுஸ்திரேலியாவில் என்னதான் மிக விளையாட்டுப் போக்கில் பாடங்கள் நடந்தாலும், ஆறாம் வகுப்புலேயே குழந்தைகளின் மென்னியைப் பிடிக்கிறது அரசு. அதாவது அப்பொழுதே பொதுத் தேர்வு நடத்தி குழந்தைகளை தரம் பிரித்து விடுகிறது. மிக விரைவாக படிக்கும் குழந்தைகளுக்கு"selective school" என்று தனிப்பள்ளிகள் அமைத்து படிப்பு மட்டுமே தாரக மந்திரமாக வைத்து அவர்களை தயார் செய்கிறது.
சுமாரான குழந்தைகளுக்கு சிறிது இலகுவான படிப்பும், விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு மிக இலகுவான படிப்பைத் தந்து விளையாட்டுப் பயிற்சி தருகிறார்கள்.

நமது நாட்டில் உள்ள படிப்பின் முறை எந்த மந்தமான குழந்தையும் பாஸ் பண்ண வேண்டும் என்ற முறையில் வகைப்படுத்தி விடுகிறது. இதில் விரைவாக படிக்கும் குழந்தைகள் அதை முடித்துவிட்டு தொலைக்காட்சி பார்ப்பதில் மற்றும் வெவ்வேறு காரியங்களில் மனம் ஈடுபடவைக்கிறது.

சிலரை நாம் கேள்விபட்டிருப்போம் நல்லா படிக்கிறவன் இப்படி தகாத செயலில் ஈடுபட்டுவிட்டானே என. சுமாராக படித்தவன் எல்லாம் நல்ல வேலையில் இருப்பான். நன்றாகப் படித்த பலபேர் சுமாரான வேலையில் இருப்பான். இதற்க்கு முதற்காரணம் இவர்கள் தன்னை சிரமப்படுத்திக்கொண்டு சில விஷயங்கள் செய்யாததல்தான்.

அறிவு ஜீவிகளுக்கு நன்முறையில் பயன்படுத்த அரசு முற்படவேண்டும்.

நீங்கள் கூறியது போல் இந்த பொதுத் தேர்வும் எடுத்துவிட்டால் இன்னும் இருட்டில் தான் மாணவர்களைக் கொண்டு செல்கிறது எதிர்காலம்.

Unknown said...

இவர்கள் வெளிநாட்டு பாணியை பின்பற்றவேண்டும் என நினைத்து அரசு அறை வேக்காடாக திட்டம் வகுத்திருக்கிறது என்பது என் கருத்து.

அவுஸ்திரேலியாவில் என்னதான் மிக விளையாட்டுப் போக்கில் பாடங்கள் நடந்தாலும், ஆறாம் வகுப்புலேயே குழந்தைகளின் மென்னியைப் பிடிக்கிறது அரசு. அதாவது அப்பொழுதே பொதுத் தேர்வு நடத்தி குழந்தைகளை தரம் பிரித்து விடுகிறது. மிக விரைவாக படிக்கும் குழந்தைகளுக்கு"selective school" என்று தனிப்பள்ளிகள் அமைத்து படிப்பு மட்டுமே தாரக மந்திரமாக வைத்து அவர்களை தயார் செய்கிறது.
சுமாரான குழந்தைகளுக்கு சிறிது இலகுவான படிப்பும், விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு மிக இலகுவான படிப்பைத் தந்து விளையாட்டுப் பயிற்சி தருகிறார்கள்.

நமது நாட்டில் உள்ள படிப்பின் முறை எந்த மந்தமான குழந்தையும் பாஸ் பண்ண வேண்டும் என்ற முறையில் வகைப்படுத்தி விடுகிறது. இதில் விரைவாக படிக்கும் குழந்தைகள் அதை முடித்துவிட்டு தொலைக்காட்சி பார்ப்பதில் மற்றும் வெவ்வேறு காரியங்களில் மனம் ஈடுபடவைக்கிறது.

சிலரை நாம் கேள்விபட்டிருப்போம் நல்லா படிக்கிறவன் இப்படி தகாத செயலில் ஈடுபட்டுவிட்டானே என. சுமாராக படித்தவன் எல்லாம் நல்ல வேலையில் இருப்பான். நன்றாகப் படித்த பலபேர் சுமாரான வேலையில் இருப்பான். இதற்க்கு முதற்காரணம் இவர்கள் தன்னை சிரமப்படுத்திக்கொண்டு சில விஷயங்கள் செய்யாததல்தான்.

அறிவு ஜீவிகளுக்கு நன்முறையில் பயன்படுத்த அரசு முற்படவேண்டும்.

நீங்கள் கூறியது போல் இந்த பொதுத் தேர்வும் எடுத்துவிட்டால் இன்னும் இருட்டில் தான் மாணவர்களைக் கொண்டு செல்கிறது எதிர்காலம்.

Unknown said...

what your going to do with the past . there are many thing to know in this world. to learn to do. we need to know them but not like an exams.

Vaa.Manikandan said...

நண்பரொருவரின் மடல்.
=========================

வணக்கம் திரு வா மணிகண்டன்

பத்தாம் வகுப்பு தேர்வு நீக்கம் குறித்த தங்களின் பதிவை படித்தேன் . மிக நன்றாக எழுதி இருந்திர்கள்
நிறைய பட்டைய படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு என்பது அடிப்படை கல்வியாக உள்ளது. மேலும் மேல்நிலை கல்வியில் பல்வேறு பாடபிரிவுகளுக்கு சேர்கை பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடை பெறுகிறது.
மேலும் சம சீர் கல்வி என்பது கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்றது அல்ல. தற்போது கிராம பகுதியில் பணிபுரியும் ஆசிரியரும் நகர் புற ஆசிரியருக்கு இணையாகவே உள்ளார் . எனவே ஆசிரியருக்கு எவ்வித கடினமும் இல்லை. ஆனால் மாணவர்களுக்கு அப்பாட திட்டம் மிக கடினமாக அமையும். பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள்களும் மிகுந்த கவனதுடனே திருதப்படுகின்றன (அறிவியல் மற்றும் கணிதம் ). விடை தாள் நகல்களும் வழங்க படுகின்றன ,

நன்றி
ராஜா

சாணக்கியன் said...

நல்ல கட்டுரை... உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்...

குசும்பன் said...

//இன்றைய சூழலில் தேர்வு ரத்து என்ற பெயரில், நேரடியாக கண்ணில் தெரியும் தமிழக அரசின் தவறு ஒன்றைக் குறிப்பிட வேண்டுமானால், அது நுழைவுத் தேர்வு ரத்து. //

அண்ணே எங்க ஊரு கிராம பகுதியில் இதுவரை டாக்டர் ஆனவங்க யாரும் இல்லை, ஆனால் போனவருடம் ஒருவர் தேனீ மாவட்ட மருத்துவகல்லூரில்யில் இடம் கிடைத்தது, காரணம் வேற ஒன்னும் பெருசா இல்லீங்க நுழைவு தேர்வு ரத்து!

நுழைவு தேர்வில் இதுவரை கிராமத்து மாணவர்களால் பெரும் வெற்றி பெறமுடியவில்லைங்க, காரணம் நகர்புறமாணவர்களுக்கு கிடைக்கும் கோச்சிங், இந்த கோச்சிங்குக்காக எவ்வளோ செலவு செய்வார்கள் தெரியுமா? கிராமத்து ஆட்களால் செய்யமுடியாது அதுற்கான வசதியும் கிடையாது.

ஒருவருடம் படிச்சதை வெச்சு இடம் கிடைப்பது என்பது சரியான முடிவுதான் என்பது என் கருத்து!