Jan 14, 2009

ஓரு இரவின் அகாலத்தில் அந்த மரணம் நிகழ்ந்தது



ஓரு இரவின் அகாலத்தில்
அந்த மரணம் நிகழ்ந்தது

தூரப் ப‌றவை ஒன்று
உலகிற்கு அறிவித்த
அந்த மரணத்திற்கான‌
மெல்லிசை-
ஓய்ந்த மழையின்
சொட்டுதலில் இருந்தது.

அருகில் இருந்த‌வ‌ன் சப்த‌மிட்டுக் க‌தறினான்
சற்று த‌ள்ளி இருந்த‌வ‌ன் விசும்பினான்
தூரமாய் இருந்தவ‌ன் கணம் மெள‌ன‌மானான்.

கருகிய வாடையின்
ஈரச் சோகம்‍
க‌ட‌லில் க‌ரைந்த‌
இர‌வின் அகால‌த்தில்
அந்த‌ ம‌ரண‌ம் நிக‌ழ்ந்த‌து

நீர்த்தாரையில்-
நடந்த குழந்தையின்
கால்தடமாய் மறைந்த‌
ம‌ர‌ண‌ பிம்ப‌த்தின் க‌தையை
வெயிலின் புழுதிப் புய‌ல்
த‌னித்து புல‌ம்பிய‌து.

நாங்க‌ள்
பேசி
குடித்து
நடிகர்களின்
அந்தரங்கம் நினைத்து
நித்திரை கொண்டோம்.

சித‌றிக் கிட‌க்கும்
அன்பின் க‌ற்க‌ள்
நொறுங்க‌த் துவ‌ங்கும்
ஒரு இர‌வின் அகால‌த்தில்
இந்த‌ ம‌ர‌ண‌ம் நிக‌ழ்ந்த‌து.

நாளையும் நிக‌ழும்
நாளை ம‌று நாளும் நிக‌ழும்.

நாம்
ம‌ர‌ண‌க் க‌ண‌க்கை எழுதலாம்
கொஞ்ச‌ம் பேச‌லாம்
முடிந்தால்
மெள‌ன‌மாய் விச‌ன‌ப்ப‌டலாம்

எதுவுமில்லையென்றால்
___________ கொள்வோம்

பிற‌ந்த‌வ‌னுக்கு
தெரியாதா
சாவ‌தற்கும்
சாவ‌த‌ற்காய் வாழ்வ‌த‌ற்கும்.



[த‌மிழ‌னின் வ‌யிறு கிழிக்க‌ப்ப‌ட்டு, த‌மிழ‌ச்சிக‌ளின் நிர்வாண‌ங்க‌ள் சூறையாட‌ப்ப‌டும் இந்த‌ த‌ருண‌த்தில் நாற்ப‌து வ‌ரிக‌ளில் க‌விதை எழுதுவதைத் த‌விர‌ என்னால் வேறெதுவும் செய்ய இய‌ல‌வில்லை என்னும் வெட்க‌த்துட‌ன் ப‌திவு செய்கிறேன்]

7 எதிர் சப்தங்கள்:

இராம்/Raam said...

ஹ்ம்ம்ம்ம்.... கவிதை அருமை மணி...

தமிழ் said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

விசனப் படுவதுகூட மௌனமாய்த்தான் படவேண்டும் போல :(

M.Rishan Shareef said...

வலியில் பிறந்திருக்கும் வரிகளைக் கொண்டு கவிதை அருமை..! ஆதங்கம் புரிகிறது..என்ன செய்ய..? விதிக்கப்பட்டிருக்கிறோம் :(

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
சுட்டி இதோ!
http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_26.html

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
சுட்டி இதோ!
http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_26.html

குடந்தை அன்புமணி said...

ஈழம் பற்றிய தங்களின் கவிதை வரிகள் நெஞ்சை ஆழமாகவே தைக்கிறது. கையாலாகத அரசின் கீழ் கைகட்டி நிற்கிறோம்...