Dec 23, 2007

மோடி விட்ட குத்து அன்டோனியோ மொய்னோ கொஞ்சம் பாவம்தான்!

இந்திய‌ ஊடக‌ங்க‌ளுக்கு ராட்ச‌ச‌னாக‌ காட்சிய‌ளிக்கும் மோடி ப‌ட்டாசு வெடித்து ப‌ட்டையைக் கிள‌ப்பியிருக்கிறார். மொத்த‌முள்ள 182 தொகுதிக‌ளில் 117 தொகுதிக‌ள் மோடியின் ச‌ட்டைப் பைக்குள் விழுந்திருக்கின்ற‌ன‌.

அம்மாவும் ம‌க‌னும் சேர்ந்து மோடியை கொலைக‌ளின் வியாபாரி என்று ஊர் ஊராக‌ச் சொல்லித் திரிந்த‌து எடுபடாம‌ல் போயிருக்கிற‌து. ஆனால் இர‌ண்டு பேரும் க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌து முற்றாக‌ வீண் என்று சொல்ல‌ முடியாது. சென்ற‌ முறையை விட‌ ப‌த்துத் தொகுதிக‌ள் அதிக‌ம் பெற்றிருக்கிறார்க‌ள். ராகுல்ஜிதான் காங்கிர‌ஸைக் காப்பாற்ற வந்திருக்கும் ஆபத்பாந்தவன் என்று காங்கிரஸார் தைரியமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

பிரிய‌ங்காவையும் சேர்த்திருந்தால் இன்ன‌மும் இர‌ண்டு, மூன்று தொகுதிக‌ளும் அவ‌ர‌து ம‌கனையும் சேர்த்திருந்தால் கூடுத‌லாக‌ ஓரிர‌ண்டு தொகுதிகளும் கிடைத்திருக்க‌லாம். பேசாம‌ல் ராகுல் திரும‌ண‌ம் செய்து கொள்வ‌தும் உசித‌ம்.

மோடி உத்த‌மனா என்றால் நான் இல்லையென்றுதான் சொல்வேன். உத்த‌ம‌னில்லைதான். ஆனால் அர‌சிய‌லில் த‌னிம‌னித‌ அர‌சிய‌லை முன்னெடுக்கும் மோடி போன்ற‌வ‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டுவ‌த‌ற்கு ம‌த்தியில் அர‌சாங்க‌த்தை கையில் வைத்திருக்கும் குடும்ப‌ம் த‌ங்க‌ளின் சாத‌னைக‌ளையோ, கொள்கைக‌ளையோ முன்னிறுத்துவ‌த‌ற்கு இலாய‌க‌ற்று தனி ஒருவ‌னின் ப‌ல‌வீன‌ங்க‌ளை ம‌ட்டுமே சாடுவ‌து என்ப‌த‌ன் முடிவு இதுவாக‌த்தான் இருக்க‌விய‌லும்.

பெரும்பான்மை ம‌க்க‌ளை த‌ன‌து ஜால‌ங்க‌ளால் க‌ட்டி வைக்க‌த் தெரிந்த‌ மோடிக்கு இந்துதுவா கொள‌கையை முன்னெடுக்க‌ ந‌ல்ல‌ வாய்ப்பினை எடுத்துக் கொடுத்த‌தே சோனியாவும் ராகுலும்தான். எனக்கு ஒரு பெரிய டவுட் இருக்குங்க. ராகுல் என்ன அத்தனை பெரிய அரசியல் வித்தகரா? நூறு வருடக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவதற்கு?அவுங்க‌ உட்க‌ட்சி விடுங்க‌.

ம‌த‌த்தை முன்வைத்து அர‌சிய‌ல் செய்யும் காங்கிர‌ஸின் திட்ட‌ம் இன்னொருமுறை ப‌ல்லிளித்திருக்கிற‌து. தேசிய‌வாத‌ம், தீவிர‌வாத‌ம் போன்ற‌ மேம்போக்கான‌, ம‌க்க‌ளை கிள‌ர்ந்தெழ‌ச் செய்ய‌க்கூடிய‌ வித்தைக‌ளை மோடி ம‌ஸ்தான் அழ‌காக‌ அர‌ங்கேற்றியிருக்கிறார்.

குஜ‌ராத் எப்பொழுதுமே ப‌டித்த‌வ‌ர்க‌ளும் வ‌ச‌தியான‌வ‌ர்க‌ளும் நிறைந்த‌ மாநில‌ம்தான். அது வீழ்ச்சியில் இருந்ததில்லை. "குஜ‌ராத் முன்னேறுகிற‌து" என்ற‌ பாஜ‌கவின் வாத‌த்தை காங்கிர‌ஸ் திட்ட‌மிட்டிருந்தால் நொறுக்கியிருக்க‌ இய‌லும்.

நேரு குடும்ப‌ம் இல்லையென்றால் கட்சியில்லை என்ப‌வ‌ர்க‌ள் தங்கள் ஜால்ராவை தொட‌ர்ந்து கொண்டேயிருக்க‌ட்டும்.

ராஜ‌ஸ்தான்,குஜ‌ராத் ஆகிய‌ மாநில‌ங்க‌ளில் பாஜ‌க‌வையும், மேற்கு வ‌ங்காள‌ம்,கேரளாவில் 'தோழ‌ர்'களையும், த‌மிழ‌க‌த்தில் 'திராவிட'ர்க‌ளையும் அசைக்க‌க் கூட‌ முடியாது.

ந‌ல்ல‌வ‌னோ கெட்ட‌வ‌னோ மோடியை அரியாச‌ன‌த்தில் ஏற்றியிருக்கிறார்க‌ள் குஜ‌ராத்திக‌ள். அவ‌ர‌து அடுத்த‌ குறி எதுவாக‌ இருக்கும் என்ப‌து எல்லோருக்குமே தெரிந்த‌ ஒன்றுதான். அத்வானிக்கு இந்நேர‌ம் ஜுரக் காய்ச்ச‌ல் வ‌ந்திருந்தால் கூட‌ ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ ஒன்றுமில்லை.

6 எதிர் சப்தங்கள்:

dondu(#11168674346665545885) said...

பார்க்க: http://dondu.blogspot.com/2007/12/blog-post_23.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வெளிநாட்டு சக்தி குறிப்பாக பாகிஸ்த்தான் ஆதரவு இஸ்லாமிய தீவிரவாதிகள் தலையெடுக்கும்போது இந்தியாவில் தேசியவாத சக்தி வளர்வதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. தேசியவாத சக்திகள் தலையெடுக்கவில்லை என்றால் எங்கேயோ ஒரு குறை உள்ளது எனக் கருதலாம்.

புள்ளிராஜா

Voice on Wings said...

2002ஆம் வருடப் படுகொலைகளை ஒரு சாதனையாக / வெற்றியாகப் பார்க்கும் மாநிலத்தில் அத்தகைய சாதனையை நிகழ்த்தியவர் வெற்றி பெற்றது ஒரு வியப்பான செய்தியல்ல. இந்த தெஹல்கா வகையறாக்களின் வெளியீடுகளின் விளைவாகக் கூட அவ்வெற்றியைக் கருத முடியும். குஜராத் மக்களுக்கு தங்கள் சாதனையாளரை நினைவூட்டியதற்காக தெஹல்காவிற்கு பாஜக மானசீக நன்றியைத் தெரிவித்துக் கொண்டாலும் வியப்பதற்கில்லை.

Anonymous said...

சோனியா மட்டுமா பாவம்?, நம்ம பதிவுலகத்துல பலர் தங்களது புனித பிம்ப முகத்துக்காக மோடி/அத்வானி/பாஜக எதிர்ப்பு பண்ணிக்கிட்டு இருக்காங்க....அவங்களுக்கு இது ஒரு அடிதான்.

M Poovannan said...

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
அதர்மம் மறுபடி வெல்லும் அல்ல வென்றது

Anonymous said...

///நேரு குடும்ப‌ம் இல்லையென்றால் கட்சியில்லை என்ப‌வ‌ர்க‌ள் தங்கள் ஜால்ராவை தொட‌ர்ந்து கொண்டேயிருக்க‌ட்டும்.///

சரியான கேள்வி ஆனா யாரு இருக்கா? அதையும் சொல்லுங்களேன்.மற்ற யாரையும் நம்ப பக்கம் இருக்கும் பாமர மக்களுக்கு தெரியாதே! அவர்களுக்கு ராஜீவ்காந்தி மகன், மகள் என்றால் தெரியும் அளவுக்கு வேறு யாரையும் தெரியாது!!!