Nov 22, 2006

கொங்குச் சொற்கள்: நான்காம் பட்டியல்

கொங்கு நாட்டு மொழிவழக்கின் நான்காவது பட்டியல் இது. சொற்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

இந்த வாரம் ஊருக்குச் செல்கிறேன். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு. :) சேகரித்து வர இயலும் என எண்ணுகிறேன். 'சேகரித்து' என்பதனைக் காட்டிலும் 'நினைவு படுத்திக் கொண்டு வருதல்' என்பது சரியாக இருக்கும்.

நான் பேசிய சொற்கள், என்னிடம் புழங்கிய மொழியை தொலைத்துக் கொண்டிருக்கிறேன். மீட்டெடுக்க வேண்டும்.

1. மொனவாத - முணுமுணுக்காத

2. மூஞ்சு போச்சு - தீர்ந்து விட்டது.

3. சாடை பேசுறான் - மறைமுகமாக தாக்கிப் பேசுகிறான்
நமக்கு புரியற மாதிரி சொல்லணும்னா உள்குத்து :)

4. மம்மானையா - மென்மேலும்

5. இண்டம் புடிச்சவன் - கஞ்சன்

6. பொங்கான் பொசுக்கான் - வலிமையற்று
அவனே பாவம்! பொங்கான் பொசுக்கான்னு இருக்குறான். அவனப் போயி ஏண்டா நோண்டுற?

7. மொன்னை - முனை மழுங்கியது/ ரோசம் இல்லாதவன்.

8. சுளுவா - சுலபமாக

9. வெட்ருப்பு - கடுகடுப்பு
அந்தப் பொம்பள ரொம்ப வெட்ருப்பானவ. பார்த்துப் பேசிட்டு வா.

10. சிலுவாடு - சிறு சேமிப்பு
உங்க அமத்தா பூ வித்த காச சிலுவாடு சேத்தியே ஒரு வெள்ளாடு வாங்கிருச்சு.

11. தலைக்கு வாத்துடு - தலையோடு சேர்த்துக் குளி

12. மேலுக்கு வாத்துட்டு வா - உடம்புக்கு மட்டும் குளிச்சுட்டு வா.
டேய் நோம்பி நாளும் அதுவுமா என்னடா மேலுக்கு மட்டும் வாத்துட்டு வந்து நிக்குற? போயி தலைக்கு வாத்துட்டு வா.

13. மாதாரி - சக்கிலி.

14. வெறுமானம் - அமாவாசைக்கும் மூன்றாம் பிறைக்கும் இடைப்பட்ட நாள்.
வெறும் வானம்.
அமாவாசையை, நெறஞ்ச அமாவாசை என்று குறிப்பிடுவார்கள். வெறுமானம் அன்று எந்த காரியமும் செய்யமாட்டார்கள்.

15. புண்ணியார்ச்சனை - புதுமனை புகுவிழா

16. கருப்பு - கருமாதி

17. அடப்பு - இறந்த நேரத்தை ஜோஸியர்களிடம் கொடுத்துப் பார்ப்பார்கள். சில குறிப்பிட்ட நேரத்தில் இறந்திருந்தால், சில தினங்களுக்கு அடப்பு வைக்க வேண்டும் என்று சொல்வார். அந்த நாட்களுக்கு தொடர்ச்சியாக விளக்கு எரிந்து கொண்டிருக்கும். மனைவி இருந்தால் வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்து இருப்பார். இன்னு ம் பல சடங்குகளும் இருக்கும்.

18. ஒளப்பிக்காத - குழப்பிக்காத.
கண்ட கண்டதுக்கெல்லாம் மனசப் போட்டு ஒளப்பிக்காத. நடக்குற போது பாத்துக்கலாம்.

19. மதுக்கான் - சுறுசுறுப்பற்றவன்

20. சோப்பலாங்கி - சோம்பேறி/ சுணங்கி இருப்பவன்

21. நோக்காடு - நோய்
அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்னைக்கு வரக் காணோம்.

22. கதுமை - கூர்மை
கத்தி பயங்கரக் கதுமை.

23. கட்டுச்சோறு - புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்ற வகையறா.
பெண் கர்ப்பமாக இருக்கும் போது ஐந்து அல்லது ஏழு வகையான சோறு செய்து விருந்து(வளை காப்பு) நடக்கும். அவ்விருந்தின் பெயரே கட்டுச் சோத்து விருந்துதான்.

24. பலகாரம் - பெயரில் காரம் மட்டும் இருந்தாலும் பலவகையான இனிப்பும், காரமும் கலந்த கலவை.

25. ஒடக்கா - ஓணான்

26. தவுட்டு பலாக்கா - சீதாப்பழம்

27. அழுகுவண்ணாங்குருவி - மைனா
அழகு வண்ணக் குருவி தான் அழுகுவண்ணாங்குருவி ஆகிவிட்டது என்று யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

28. தோப்பட்டை - பெரியது
உன்ர சட்டை என்னடா தோப்பட்டையாட்ட இருக்குது? கெழவன் சட்டை போட்ட மாதிரி.

29. சால் - தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரம். அண்டா மாதிரியும் இல்லாமல், குடத்தை விட சற்றே பெரியதாக இருக்கும்.

30. நாளாண்ணிக்கு - நாளை மறுநாள்.

31. சோமாரம் - திங்கட்கிழமை.

32. வாதிக்காத - வதைக்காதே.

8 எதிர் சப்தங்கள்:

Udhayakumar said...

எனக்கு தெரிஞ்சு புழக்காட்டதுல இருக்குற வார்த்தைகளை ரோசனை பண்ணி எழுதிருக்கிறேன். ஏற்கனவே போட்டிருந்தீங்கன்னா மறுக்காலும் போட வேண்டாம். ரவுசு பண்ணீராதீங்கண்ணா...

புழங்கிய - புழக்காட்டத்துல
யோசனை- ரோசனை
மறுபடியும் - மறுக்காலும் (மைக்காலும்)
ரகளை - ரவுசு

Sud Gopal said...

உங்களது பயணம் புத்துணர்ச்சியூட்டுவதாய் இருக்க வாழ்த்துகள்.

சோமாரம் - தெலுங்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

Chellamuthu Kuppusamy said...

ஒரே பெருமாள் முருகன் எஃபெக்ட் தான் :-)

Swamy Srinivasan aka Kittu Mama said...

haha super kongu

Anonymous said...

This post brought so many memories for me.

Thank you.

Raja

Sivabalan said...

//பொங்கான் பொசுக்கான் //

//சிலுவாடு //


எங்க பாட்டி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.. இப்ப அவங்க உயிரோடு இல்லை..

பழைய நினைவுகளை தூண்டிவிட்டது..

நன்றி

Anonymous said...

மொனவாத என்ற சொல்லை யாழ்ப்பாணத்தில் முணகாதை என்றும் சொல்வோம்

மூஞ்சு போச்சு - முடிஞ்சிட்டு (முடிந்து போய்விட்டது)

சாடை பேசுறான் - சாடாதை, சாடுறான் (அவன் தேவையில்லாம என்னைச் சாடுறான்)

தலைக்கு வாத்துடு - லைக்கு வார் (இதை ஊரிலை தோயுறேன் என்பார்கள்... அப்டின்னா தலையை நீரில் தோய்த்து நீராடுவது)

மேலுக்கு வாத்துட்டு வா - மேலுக்கு வார், மேலைக் கழுவு (குறிக்கிறது, மேல்கழுவுதல் என்று சொன்னால் குறைந்த நிமிடக் குளியலை அநேகமாகக் குறிக்கும்)

பலகாரம் - இது பெரும்பாலும் பல தமிழர்களால் பாவிக்கப்படும் சொல்

தோப்பட்டை - தோப்பிளாசு (தொய்வான, பெரிய சட்டை), என்னடா தோப்பிளாசுச் சட்டை போட்டிருக்காய்

நாளாண்ணிக்கு - நாளாண்ணிக்கு, நாளண்டைக்கு

ரகலை, தனவுதல் போன்ற சொற்கள் கொங்கில் இருக்கோ தெரியாது, அவற்றின் கருத்து வீண் சண்டைக்கு ஒருத்தரை வலிய இழுத்தல்.

செல்வநாயகி said...

///தோப்பட்டை - பெரியது
உன்ர சட்டை என்னடா தோப்பட்டையாட்ட இருக்குது? கெழவன் சட்டை போட்ட மாதிரி.////

மணிகண்டன்,

இது "தோப்பரை" அல்லவா?