Oct 3, 2006

கொங்கு வட்டார வழக்கு - II

கடந்த பதிவில், கொங்கு வட்டார வழக்கில் உள்ள சில சொற்களைப் பதிவு செய்தால், அதைப் போல இரண்டு மடங்கு சொற்களை நண்பர்கள் கொடுத்தார்கள். உற்சாகத்தில் மேலும் யோசிக்க ஆரம்பித்தால் என் ஊரை விட்டு வெளிவந்த இந்த ஆறு வருடத்தில் பல சொற்கள் என்னை விட்டு வெளியே சென்றிருக்கின்றன. சில சொற்களின் உபயோகம் மிகக் குறைந்திருக்கிறது.

நாகரீகம் என்று கருதி என் முன்னோர் கொடுத்தவற்றை அழித்து வந்திருக்கிறேன். இன்னமும் என் நினைவில் இருக்கும் மிச்ச மீதி சொற்களை எல்லாம் ஏதாவதொரு இடத்தில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

நண்பர் ஒருவரிடம் சொன்னதற்கு, கொங்கு வட்டார சொற்களை மதுரை, சென்னையை சார்ந்தவர்கள் படித்தால் என்ன வரப்போகிறது என்றார். அவரின் இந்த வினாவுக்கு என்னிடம் சரியான பதிலில்லை. இந்த கேள்வி என் வேகத்தை குறைக்கிறதோ என்று தோன்றுகிறது.

செய்வதைச் செய்யலாம்.

1.மோனக்காரர் - விவசாயத்தொழிலுக்கு கூலி ஆட்களை அழைத்து வருபவர். கிட்டத்தட்ட மேஸ்திரி போல்.

2. பண்ணையத்தாளு - ஒரு வருடத்திற்கு இவ்வளவு பணம் என்று பேசி முடிவு செய்திருப்பார்கள். அந்த ஆள் அந்த வருடம் முழுவதும் அந்த விவசாயியிடம் பணியாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்தே பத்து வருடங்களுக்கு முன்பு வரை கூட ஒரு விவசாயியிடம் ஒரு ஆள் தன் வாழ்வின் கடைசிக் கட்டம் வரை இருப்பார். இப்பொழுது இது மிக அரிதாகிக் கொண்டிருக்கிறது.

3. முறைமைக்காரன் - முறைக்கு சொந்தக் காரன்
உதாரணமாக், மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜையின் போது கிடாவெட்டும் உரிமை ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அவர் அந்த நிகழ்வின் முறைமைக்காரர்.

4. தண்ணிவாக்கி - வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுபவர். வயல்களின் உரிமையாளர்கள் கூடி, நீர் பாய்ச்சவென ஒருவரை நியமித்திருப்பர். அவர்தான் சரிசமமாக, கவனமாக தண்ணீர் பாய்ச்சுவார். ஒவ்வொரு போகமும் முடிந்த பின் குறிப்பிட்ட பொதி நெல் வாங்கிக் கொள்வார்.

5. பொதி - மூன்று அல்லது நான்கு மூட்டை நெல் ஒரு பொதி எனப்படும்.

6. கருக்காய் - குறையுள்ள நெல்மணிகள்.

7. கொறத்திக் குஞ்சு - இளம் தவளை. (தலைப்பிரட்டை)
நீர் நிலைகளில் கிட்டத்தட்ட மீன் குஞ்சு போல் இருக்கும். எளிதில் சிக்கிவிடுமாகையால் சிறுவர்கள் இதனைப்பிடித்து வைத்து மீன் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

8. ஒறட்டாங்கை - இடது கை. வலது கையை, சோத்தாங்கை என்பார்கள்.

9. ரோட்டா - நீர்க் குடுவை (டம்ளர்) (Lota என்னும் ஆங்கிலச் சொல்)

10. அங்கராக்கு - சட்டை

11. பாப்பராண்டி - அரணை. (ஊர்வன வகையினைச் சார்ந்தது.)

12. செம்பூத்து - செண்பகப் பறவை

13. கழுமுண்டராயன் -ஆஜானுபாகுவான மனிதன்.
அவனுக்கென்ன கழுமுண்டராயன் மாதிரி இருக்கறான் என்று சொல்வது வழக்கு.

14. புறடை - புரூடா (பொய்)
அங்க போறான் பாரு. அந்த ஆளு செரியான புறட மன்னண்டா.

15. தெல்லவாரி, தேசாபோகம் - ஊதாரித்தனமானவன்.
சொற்றொடர்: இவுனுக்கு தெல்லவாரி, தேசாபோகத்துக் கூடதான் சாவுகாசமே.

16. சாவுகாசம் - சகவாசம்

17. ரவைக்கு - இரவுக்கு
சொற்றொடர்: ரவைக்கு சித்தப்பன காவலுக்கு போவச் சொல்லு.

18. போத்தாலை - புகையிலை.

19. கொழுந்தனார் - கணவனின் தம்பி

20. கொழுந்தியா - மனைவியின் தங்கை

21. நங்கையா - மனைவியின் அக்கா.

22. பொன்னாம்பூச்சி - பொன்வண்டு

23. தொருசு - ஊதாரியாக, பொறுப்பற்று சுற்றுதலைக் குறிக்கும் (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது).
நான் "கடைக்கு போயிட்டு வர்றேன்" என்று சொன்னால், என் அம்மா நக்கலாக, "செருப்புத் தொட்டுட்டு தொருசு கிளம்பிடுச்சு பாரு" என்பார்கள்.

24. தொண்டு - கொங்குப் பகுதியில் குறிப்பாக கோபி வட்டாரத்தில் தொண்டு என்றால், பல பேருடன் தகாத உறவு கொண்டிருப்பதைக் குறிக்கும். (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது)

25. மொளைக்க போடுதல் - முளைக்கப் போடுதல். தொலைத்து விடுதல் என்னும் பொருளில் எடுத்தாளப்படும்.
சொற்றொடர்: அவன்கிட்ட போயி கொடுத்த பாரு. அவன் மொளைக்க போட்டுறுவான்னு உனக்குத் தெரியாதா?

26. கொட்டை போட்டுட்டாரு - இறந்து விட்டார்.
அந்த மனுஷன் எப்பவோ கொட்டை போட்டுட்டாரு.

27. நலங்கு - உடல்நலமற்றுப் போதல்.(குழந்தைகளுக்கு மட்டுமே இச்சொல்லை உபயோகப்படுத்துவார்கள்)
குழந்தை நலங்கி போச்சு

28. கதக்கு - குழந்தை வாந்தி எடுத்தல்
குழந்தை கதக்கி வெச்சுடுச்சு.

29. மோடம், கருக்கல் - மேகம்

30. கும்மாயம் - சமையலறையில் உபயோகப்படுத்தும் கருவி (மத்து)

31. சடஞ்சு - சோர்வடைந்து
மனுஷன் சடஞ்சு போயி வந்தா நச்சாம இருக்க மாட்டயா?

32. நேக்கு - கவனமாக,சரியாக
நேக்கு பாத்து ஒரே போடா போட்டேன். வக்காரோலுது ரெண்டா போயிடுச்சு

33. எச்சா - அதிகமாக
சோறு கொஞ்சமா போனா கூட போச்சாது. பையனுக்கு கறி எச்சா வை.

34. நேசர் பாரு - உளவு, உண்மை நிலை
எதுக்கால ஊட்ல(எதிர் வீடு) போயி சண்டையான்னு நேசர் பாத்துட்டு வா. போ

35. பூலவாக்கு -உண்மை நிலை.
டேய் சும்மா பேசாத. கடன் வாங்கீட்டு போனா எப்படித் தருவ? உன்ற பூல வாக்கு எனக்கு தெரியாதா?

36. பண்டம் பாடி - கால்நடைகள்

37. பீத்து - பெருமை
அவ பையன் பத்தாவதுல நெறயா மார்க்கு வாங்கி தள்ளிட்டானாம். பீத்து பீத்துன்னு பீத்தறாப்பா.

38. பீத்தை - பழைய
அந்த வண்டியவா வாங்குற? அது பீத்த வண்டி டா.

38. சீக்கு- நோய்

39. பிலுக்கு - பந்தா.
அவிய அமத்தா பப்ஸ் வாங்கிட்டு வந்திருக்குதாம். ஒரே பிலுக்கு அவளுக்கு.

40. கொக்காணி - தனக்கு மட்டும் ஒரு பொருள் கிடைக்குமிடத்து கிடைக்காதவரைப் பார்த்து பழிப்பாக செய்யப்படும் செய்கை.

41. பொறந்தவன்/ பொறந்தவள் - சகோதரன்/சகோதரி
என்ன சுப்பாயா...பொறந்தவனூட்டுக்கு கெளம்பீட்டாப்ல இருக்குது?

42. தொண்டுபட்டி - கால்நடைகளை கட்டி வைக்கும் இடம்.

26 எதிர் சப்தங்கள்:

தங்ஸ் said...

ethaachodu list..nallarukku.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//நண்பர் ஒருவரிடம் சொன்னதற்கு, கொங்கு வட்டார சொற்களை மதுரை, சென்னையை சார்ந்தவர்கள் படித்தால் என்ன வரப்போகிறது என்றார். அவரின் இந்த வினாவுக்கு என்னிடம் சரியான பதிலில்லை. இந்த கேள்வி என் வேகத்தை குறைக்கிறதோ என்று தோன்றுகிறது.
//

உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். சென்னை, மதுரையைச் சேர்ந்தவர்கள் என்ன. ஈழத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உங்களுடைய இடுகை மிகவும் சுவாரசியமான விதயம் என்று.

வட்டார வழக்கில் எழுதப் பட்டிருக்கும் புனைவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

கொங்கு வட்டார வழக்கு என்று ஒரு தொடரே இடுங்கள். அப்படியே விக்கிப்பீடியாவிலும் சேர்ந்து விடுங்கள்.

கூடவே ஒரு குரற்பதிவும் கொடுத்தால் இன்னும் விசேஷம்! :)

வசந்தனின் சில இடுகைகள் ஈழத்து வட்டாரத் தமிழை சுவாரசியமாக அலசுகின்றன.

வட்டார வழக்குகள் மிகவும் சுவாரசியமானவை. அலாதியானவை.

இன்னும் நிறைய சொற்களையும் குரற்பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.

-மதி

பெத்தராயுடு said...

கலக்கல்.
சில வார்த்தைகள் பிடிபடல.

Now, scratching my head to recollect other words.

இன்றைக்கு நாம் பல வட்டார வழக்குகளை மறந்துவிட்டாலும், அவற்றை ஆவணப்படுத்துதல் முக்கியம்.

நம்ம 'பேத்து பிதுரெ'ல்லாம் தமிழ் பேசுவாங்களா அப்படிங்கறதே சந்தேகமா இருக்கு.

கார்திக்வேலு said...

பட்டியலாகக் சீர்திருத்தி சேமித்து வைத்தால் கூட போதும் ..பிற்காலத்தில் தேவையிருப்பின் பயன்படுத்தப்படும்.
-------------------
நேக்கு என்பது "knack" என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து
வந்திருக்கலாம்.
[knack = A special way of doing something]

பிஸ்கோத்து -- biscotte (like a biscut) என்ற இத்தாலிய வார்த்தையிலிருந்து
வந்திருக்கலாம். ஆங்கிலேய போர் வீரர்களிடம் மிகப் பிரபலம் .
சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் வீரர்கள் சில பிஸ்கோத்து டப்பாக்களை ரோட்டில் வேடிக்கை பார்க்க நின்றிருக்கும் சிறுவர்களுக்கு
வீசிப் போவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பல வார்த்தைகளின் மூலம் எது என்று ஆராய்ச்சி செய்தால் சுவாரசியமாக இருக்கும்.

கார்திக்வேலு said...

பல வார்த்தைகள் புதிதாக இருக்கின்றன.

//நண்பர் ஒருவரிடம் சொன்னதற்கு, கொங்கு வட்டார சொற்களை மதுரை, சென்னையை சார்ந்தவர்கள் படித்தால் என்ன வரப்போகிறது என்றார்.//
ஒன்றும் வராது :-)
இது மொழியியல், சமூகவியல் சார்ந்த துறையில் மட்டுமே கூட உபயோகமாக ஒரு உள்ளீடாக இருக்கலாம்.மதி கூறியது போல இதை ஒரு வெறும் பட்டியலாகக் சீர்திருத்தி சேமித்து வைத்தால் கூட போதும் ..பிற்காலத்தில் தேவையிருப்பின் பயன்படுத்தப்படும்.
-------------------
நேக்கு என்பது "knack" என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து
வந்திருக்கலாம்.
[knack = A special way of doing something]

பிஸ்கோத்து -- biscotte (like a biscut) என்ற இத்தாலிய வார்த்தையிலிருந்து
வந்திருக்கலாம். ஆங்கிலேய போர் வீரர்களிடம் மிகப் பிரபலம் .
சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் வீரர்கள் சில பிஸ்கோத்து டப்பாக்களை ரோட்டில் வேடிக்கை பாரக்க நின்றிருக்கும் சிறுவர்களுக்கு
வீசிப் போவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பல வார்த்தைகளின் மூலம் எது என்று ஆராய்ச்சி செய்தால் சுவாரசியமாக இருக்கும்.

கைகாட்டி said...

நல்ல பணி.
பாப்பராண்டி=பாம்பராணி (கரூர் பக்கம்)
அங்கராக்கு - இது தெலுங்குச் சொல். மூலனூர்,தாராபுரம் பகுதிகளில் வாழும் நாயக்கர்களிடம் புழங்கும் சொல்.
பண்ணையாடி - பண்ணை முதலாளி
கடவுப் படல் - வேலியிடப்பட்ட காட்டுக்கு நுழைவு வாயில்
கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
பொடக்காலி - புழக்கடை
பட்டி - ஆடுகளை அடைத்து வைக்கும் ஒரு அமைப்பு
கொடாப்பு - கோழிகளை அடைத்து வைக்கும் ஒரு அமைப்பு

பெத்தராயுடு said...

கொட்டலாக்கு/கொட்டலவாக்கு - வெற்றிலை, பாக்கு இடிக்கும் கருவி.

பழம - சொல்?

வேய்க்கானம் - விவரமான

பெத்தராயுடு said...

//கொடாப்பு - கோழிகளை அடைத்து வைக்கும் ஒரு அமைப்பு //

சாக்கு பைய உள்புறமா மடிச்சு மழைக்காலத்தில தலைக்கு போட்டுக்கறதுயும் 'கொடாப்பு'ன்னு சொல்லுவாங்களோ?

Vaa.Manikandan said...

வியக்கானம் என்ற சொல்தான் வேய்க்கானம் என மாறியிருக்கும்?

//சாக்கு பைய உள்புறமா மடிச்சு மழைக்காலத்தில தலைக்கு போட்டுக்கறதுயும் 'கொடாப்பு'ன்னு சொல்லுவாங்களோ? //

அப்படியும் சொல்லுவாங்க. இன்னொரு சொல்லும் இருக்கிறது. இப்பொழுது மறந்துவிட்டது. :( யோசித்துச் சொல்கிறேன். அதற்குள்ளாக வேறெவெரேனும் சொல்லவும் வாய்ப்பிருக்கிறது.

//நம்ம 'பேத்து பிதுரெ'ல்லாம் தமிழ் பேசுவாங்களா அப்படிங்கறதே சந்தேகமா இருக்கு. //

பேசமாட்டங்களா? அடப்பாவமே.

//கூடவே ஒரு குரற்பதிவும் கொடுத்தால் இன்னும் விசேஷம்! :)//

கொஞ்சம் தொழில்நுட்ப பற்றாக்குறை. :( முயன்று பார்க்கிறேன்.

அனைவ‌ருக்கும் நன்றிகள்.

ஒரு அனானி நண்ப‌ர் 'குண்டக்க மண்டக்க' ஒரு கேள்வி கேட்டுள்ளார். ;)

அது கூட கொங்கு மண்டலத்தில் புழங்கும் வழ்க்குதான். மட்டுறுத்திவிட்டேன். திட்டுற மாதிரி இருக்கே தல? :)

பொன்ஸ்~~Poorna said...

//கொங்கு வட்டார சொற்களை மதுரை, சென்னையை சார்ந்தவர்கள் படித்தால் என்ன வரப்போகிறது என்றார்//
ஒன்றும் வராதுதான். ஆனால், வட்டார வழக்குச் சொற்கள் படிக்க நன்றாக உள்ளன. எங்கேனும் இது போன்ற சொற்களாலான படைப்புகளைப் பார்க்க நேர்ந்தாலும், அறிமுகமின்மையால் தாவிப் போயிருக்கிறேன். அது போன்ற கட்டத்தில் இந்தச் சொல்- பொருள் விளக்கம் உதவும்.

பொதுவாகவே, சில நல்ல தமிழ்ச் சொற்களை நம் வட்டார வழக்குகளில் காணலாம்.. "உன்னாண்ட" என்ற சென்னைத் தமிழைக் கொச்சையாகவே வெகுநாட்கள் நினைத்திருந்தேன், அண்டை என்பது அருகில் என்ற தமிழ்ச்சொல் தான் என்று தெரியும் வரை!

கொறத்திக் குஞ்சு - ஹை :) குட்டித் தவளைக்கு எவ்வளவு அழகான பேர்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மணிவண்ணன்!
நீங்கள் குறிப்பிட்டவற்றில் சில சிறு மாற்றத்துடன் ஈழத்தில் உண்டு.
இளம் தவளை-வாற்பேத்தை, ரோட்டா-லோட்டா;புருடா-புலுடா,சாவுகாசம்- சாவாசம்;ரவைக்கு- ராவைக்கு,நேசர்- நேச்சர்(nature) ; பீத்தை-பீத்தல்
என புழக்கத்தில்,இன்று முண்டு.
சில உங்கள் புழக்கங்கள்; மிக வித்யாசமானவை
யோகன் பாரிஸ்

Viji said...

நண்பா கலக்கிட்டிங்க போங்க, நல்ல பதிவுங்க ,என்ற ஊரு பேச்ச பதிவுல படிக்க சந்தோசமாஇருக்குதுங்க, இன்னும் நெறைய பதிவு பன்னுங்க.

Anonymous said...

வக்காரோலுது கெட்டவார்த்தை இல்லையா?

Vaa.Manikandan said...

யோகன்,
எம் பேரு மணிகண்டன்ங்க...நிறைய பேர் மணிவண்ணா, மணிவண்ணான்னு சொல்றாங்க. :(

அனானி,
பகுத்துப் பார்த்தால் ஆபாசமான சொல்தான். ஆனால் மாமன்,மச்சினன் முறைகளுக்குள் இந்தச் சொல் மிக இயல்பான புழக்கத்தில் இருக்கும்.
அதனால்தான் சொற்றொட‌ரிலும் உபயோகப் படுத்தினேன். :(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அடடா!
உங்களுக்கு கழுத்திலதான் மணியா?(மணிகண்டன்); நான் உடம்பொல்லாம் மணி (மணிவண்ணன்) என நினைச்சேன்.
திருத்துறேன்;திருந்துறேன்.
யோகன் பாரிஸ்

aathirai said...

குத்தல் போக்குவரத்து- ஈரோட்டிலிருந்து ஒருவர் சென்னைக்கு
வந்தார். அவருக்கு biles பிரச்சனை இருந்தது. "இந்த
டாக்டர் குடுத்த மருந்து சாப்பிட்டப்புறம் ஒரு குத்தல்
போக்குவரத்து இல்லாம நல்லா இருக்குதுங்க ".
:)

இந்த டயலாக்கை நாங்கள் கிண்டலடித்ததால் மறக்காமல்
நினைவிருக்குது.

Syam said...

ஆகா எங்கூருக்கு போய்டு வந்த எபக்டுங்கோவ்...இருங்க நானும் ரோசன பண்ணிட்டு வந்து இன்னொம் வேற ஏதாவது இருந்தா சொல்றேன் :-)

G.Ragavan said...

அப்பப்பா! பெரிய பட்டியலே போட்டிருக்கீங்க. எங்கூரு பக்கத்துல என்ன சொல்வாங்கன்னு தர்ரேன்.

1.மோனக்காரர் - தெரியலையே.

2. பண்ணையத்தாளு - தெரியலையே.

3. முறைமைக்காரன் - உரிமைக்காரன்னு சொல்லிக் கேட்டிருக்கிறேன். பாத்தியக்காரன்னும் கேட்டிருக்கேன்.

4. தண்ணிவாக்கி - தெரியலையே.

5. பொதி - தெரியலையே.

6. கருக்காய் - இதுக்கு என்னமோ சொல்லுவாங்க....மறந்து போச்சே.....

7. கொறத்திக் குஞ்சு - தலப்பெரட்டதான்

8. ஒறட்டாங்கை - இடது கை அல்லது எடது கையி

9. ரோட்டா - தம்ளரு

10. அங்கராக்கு - சட்டை

11. பாப்பராண்டி - பாம்புராணின்னு இதச் சொல்வோம்

12. செம்பூத்து - இதென்னன்னு தெரியலையே...

13. கழுமுண்டராயன் -யாருங்க இந்தக் கழுமுண்டராயரு?

14. புறடை - புளுகுனி. அதாவது புளுகுறவன்.

15. தெல்லவாரி, தேசாபோகம் - ஊதாரிதான்னுதான் நெனைக்கேன்.

16. சாவுகாசம் - தொடர்பு, பழக்கம், ஒட்டுறவு

17. ரவைக்கு - பொழுது சாய.

18. போத்தாலை - போயில அல்லது புகையில.

19. கொழுந்தனார் - மச்சினரு

20. கொழுந்தியா - மச்சினி

21. நங்கையா - தெரியலையே...மதினிங்குறது அண்ணன் மனைவி

22. பொன்னாம்பூச்சி - பொன்வண்டு

23. தொருசு - ஊர்சுத்தி.

24. தொண்டு - தொடுப்புன்னு சொல்வாங்க. ஆனா தொண்டுக்கு இணைச்சொல் அல்ல.

25. மொளைக்க போடுதல் - வெதைச்சிட்டு வந்துட்டான்னு சொல்லிக் கேட்டிருக்கேன்.

26. கொட்டை போட்டுட்டாரு - மண்டையப் போட்டுட்டாரு.

27. நலங்கு - மேலுக்குச் சேட்டமில்லாமப் போச்சு

28. கதக்கு - கக்கு (கொழந்த கக்கீருச்சி).

29. மோடம், கருக்கல் - மொகிலு, மேகம்

30. கும்மாயம் - மத்துதான்

31. சடஞ்சு - ஆஞ்சு போய் வந்திருக்கான்னு சொல்வாங்க

32. நேக்கு - இது தமிழ்ச் சொல் அல்ல. டம்ளர் போல கடன் வாங்கிய சொல்லே.

33. எச்சா - இதுவும் extra என்பதன் மருவூ என நினைக்கிறேன். கரூரில் இருந்த பொழுது எச்சா எச்சான்னு யாராவது சொன்னாலே எனக்கு ஒரு மாதிரி இருக்கும். கூடக் குடுங்க. கூடக் கொஞ்சம் குடுங்க. நெறைய குடுங்கன்னு நாங்க சொல்வோம்.

34. நேசர் பாரு - இதுக்கு ரெண்டு மூனு விதமாச் சொல்வாங்க. நேரான இணைச்சொல் தெரியவில்லை.

35. பூலவாக்கு - தெரியலை

36. பண்டம் பாடி - மாடு கன்னு நெலம் நீச்சு தோட்டந் துரவு

37. பீத்து - பீத்தல் இங்கும் உண்டு

38. பீத்தை - இத்துப் போனது.

38. சீக்கு- சேட்டமில்லாமக் கெடக்கான், மேலுக்கு வந்துருக்கு என்றெல்லாம் சொல்வார்கள். சீக்கு என்றும் சொல்லிக் கேட்டிருக்கேன்.

39. பிலுக்கு - கும்மாளம்.

40. கொக்காணி - வக்கனம். அவனப் பாத்து ஏம்ல வக்கனம் காட்டுத!

41. பொறந்தவன்/ பொறந்தவள் - ஒடம்பொறப்பு

42. தொண்டுபட்டி - தொழுவம்

எனக்குத் தெரிஞ்சதச் சொல்லீட்டேன்!!!!!!!1

Vaa.Manikandan said...

நன்றி ஆதிரை, ஷ்யாம்.

நன்றி ராகவன். உங்க ஊர் பெய‌ரையும் சொல்லிடுங்க. எனக்கு நீங்க எந்த ஊருன்னு தெரியாது. :)

//செம்பூத்து - இதென்னன்னு தெரியலையே...//
இது செண்பகப் பறவை. நம்ம தமிழ் ஈழத்தின் தேசியப் பறவை இதுதான் என்று நினைக்கிறேன். யாராவது உறுதிப்படுத்துங்கள்.

மச்சினன் என்பது, மனைவியின் இளைய சகோத‌ரன். அழைக்கும் முறை மாப்பிள்ளை என்று.


//பிலுக்கு - கும்மாளம்//

ச‌ரியாக வ‌ராதுங்க. பிலுக்குன்னா ரொம்ப அலட்டிக் கொள்ளுதல்.

Sud Gopal said...

மணீண்ணா....என்ற பங்குக்கு இதோ கொஞ்சம் அள்ளிவுடறேன்

பொட்டாட்டமா இருத்தல் - அமைதியாய் இருத்தல்.

ஒருசந்தி இருத்தல் - ஒரு பொழுது இருத்தல்(ஒக்க பொத்து உண்டேதி)

டப் டிப்புன்னு - விரைவாக (இதைப் பொள்ளாச்சியி பகுதியினைச் சேர்ந்த அன்பர்கள் அதிகம் உபயோகப்படுத்தி கேட்டிருக்கிறேன்)

பட்டண ரவை - வெள்ளை ரவை(அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவது)

மைலா மாவு - மைதா மாவு.

ரவி said...

கலக்குறீங்க...

Syam said...

கட்டீத்தின்னி - இதுக்கு அர்தம் தெரியல எங்க ஆத்தா(அப்பாவோட அம்மா அடிக்கடி எங்கள பார்த்து சொல்வாங்க)

சுடுவான் - ஆட்டு ஈரல் தீயில சுட்டு சாமிக்கு படைக்கறது

நேரமே - சீக்கிரமா

பாம்பேறி - கினற்றுக்குள் இருக்கும் திட்டு

பாவை - பாய்

Anitha(Nikki's mom) said...

இதை ஒரு தொகுப்பாக்கி தனிப்பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

எனக்கு நினைவுக்கு வந்த சில வார்த்தைகள்:
கோசாப்பழம் - தர்பூசணி
குண்டப்பச்சி - பணியாரம்

- அனிதா

Anonymous said...

அன்பு நண்பரே,
பெருமாள் முருகனின் கொங்கு நாட்டு சொல்லகராதி படித்திருப்பீர்கள் தானே.
விடுபடலை மட்டும் பதியலாமே.
ஏனென்றால் கவிதை பற்றிய உங்களது கட்டுரை எளிமையாக நன்றாக வந்திருந்தது.
மணி

Vaa.Manikandan said...

மணி,
தங்களின் க‌ருத்துக்கு நன்றி.

இன்னமும் நான் பெருமாள் முருகனின் "கொங்கு நாட்டு சொல்லக‌ராதி" படிக்கவில்லை. Anyindian.com லும் கிடைக்கவில்லை. அந்த நூலின் பதிப்பகத்தார் குறித்து சொல்ல இயலுமா?

கவிதைகள் குறித்த கட்டுரை மீதான தங்களின் பாராட்டுதலுக்கும் நன்றி. அவற்றை கிட்டத்தட்ட மறந்துவிட்டேன். மீண்டும் எழுத வேண்டும்.

நன்றி.

ராசுக்குட்டி said...

மணி ரொம்ப நல்ல பதிவு, நான் கொங்கு வட்டாரத்திற்கு புதிதாக வந்தப்போ ரொம்ப வேடிக்கையாக இருந்தது. நாங்கள் குடியேறிய முதல் நாள் பக்கத்து வீட்டு அம்மா

"ஏங்கண்ணு தண்ணிவாத்தாச்சா" சொல்லும்போது நான் முழிச்சதையும் "செருப்புத்தொட்டு போ சாமி" ன்னப்போ நான் நிஜமாகவே செருப்பை தொட்டுவிட்டு போனதையும் ரொம்ப நாள் கேலி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இன்னும் நிறைய இருக்கு அப்பப்ப அள்ளி விடுங்க