Sep 12, 2006

மு.மேத்தாவுக்கு ஒரு கடிதம்

மு.மேத்தா அவர்களின் பேட்டியின் ஒரு பகுதி இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. முழுமையான பேட்டி புதிய காற்று இணையதளத்தில் இருக்கின்றது.
**************************
கவிஞர் மு.மேத்தா, தான் பழைய காலத்து மனிதர் என்பதனை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறீர். இன்றைய பல கவிஞர்கள் தங்களின் கவிதைத் தொகுப்பைப் படித்துதான் கவிதையை நுகர ஆரம்பித்திருப்பார்கள். "கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்" தொகுப்புதான் நான் வென்ற பேச்சுப் போட்டிகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கின்றன.

தங்களின் கருத்துக்களுக்கு எதிராக எழுதுவேன் என்றெல்லாம் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் தவிர்க்க இயலவில்லை.
***************
மொத்தமாக நவீனகவிதைகளைப் புறக்கணிக்க வேண்டுமென மட்டுமல்லாமல், அவைகளுக்கு எதிரான போர்முறை ஒன்றை என அறைகூவல் விடுத்திருப்பதுதான் என் இந்த எதிர்வினைக்கான காரணி. மனித சமூகத்தின் முன்னேற்றம் என்று சொல்லி வறட்டுக் கூச்சலிடும் கரகோஷக் கவிதைகள்(வானம்பாடிக் கவிதைகளை அப்படித்தான் என்னால் சொல்ல முடியும்), சமூகத்தில் கொண்டுவருவதாகச் சொல்லப்படும் மாற்றங்களை விட, அதிக மாற்றங்களை தனி மனித மனநிலையைப் புரிந்து கொள்ளுதல் என்னும் உயர்ந்த நோக்கில் செயல்படும் "கசடதபற", "எழுத்து" வகையான நவீன கவிதைகளால் கொண்டு வர இயலும்.

யாரும் சமூகத்தை ஒட்டு மொத்தமாகப் புரட்டிப் போட வேண்டிய அவசியமில்லை. மனிதன் தன்னை நோக்கிய பயணத்தை எப்பொழுதோ ஆரம்பித்து விட்டான். தனிமனித வாழ்வியலைப் புரிதல் என்பது தத்துவ நோக்கு. தமிழகத்தில் பிரச்சாரங்களையும், வறட்டுக் கூச்சல்களையும் நம்பியே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த திராவிட இயக்கங்களின் வீழ்ச்சியும், அவைகளின் செயல்பாட்டு முறையில் உணரப்படுகின்ற மாற்றங்களுமே 'சமூக மாற்றத்தைக் கொண்டு வருகிறேன்' என்ற பிரச்சார யுக்திகள் செயல்படாத அம்சங்களாகிவிட்டன என்பதற்கான சான்றுகள்.

70களின் வாக்கில் பிரச்சாரங்கள், கோஷங்கள் மூலம் ஆட்சியினைப் பிடிக்க இயலும் என்ற நகர்விலிருந்த திராவிட இயக்கங்களையொட்டி உருவாக்கப்பட்ட 'வானம்பாடி'க் கவிதைகள் அங்கீகாரத்தைப் பெற்றன என்பது மறுக்கவியலாத உண்மை. அதற்கான காரணம் அவைகளின் இலக்கியம் சார்ந்த மதிப்பீடுகளும், நகர்வும் திராவிட இயக்கங்களில் இருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதாக இருக்கவில்லை.

முப்பது வருடங்களுக்கு முன்னதாகப் படிப்பறிவு குறைந்திருந்த சமயத்தில் இந்த வகையான பிரச்சார வகை எழுத்துக்கள் எடுபட்டிருக்கலாம். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் கூறுகளை நுணுக்கமாக புரிந்துணரும் சமயத்தில் இவ்வகையான எழுத்துக்கள் மட்டுமே செயலூக்கம் மிகுந்தவை என்பதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள இயலும்?

தன்னை அறிதல் என்னும் நோக்கத்தில் இருக்கும் இன்றைய சமூகத்தில் 1970களின் நடைமுறைகளும் வழக்கங்களும் புறந்தள்ளப்படுபவை ஆன விஷயங்கள். இனியும் சமூகக் குப்பைகளை என் பேனா முனையால் எரிக்கப் போகிறேன் என்றால் நகைப்பவர்கள்தான் அதிகம். நவீன வாழ்வியலும், அது மனிதன் மீதும், சமூகத்தின் மீதும் தொடுக்கும் போர்முறைகள், எழும் வினாக்கள், உமிழப்படும் கசப்புகள் போன்றவற்றை உணர்த்தும் இலக்கியங்கள் அரங்கிலேறும் போது, அவற்றின் விளைவால் மனித மனதில் நிகழும் மாற்றங்கள், அவனை "தன்னை உணர்ந்தவ"னாக்குகிறது. தனிமனித மாற்றங்கள் தான் Civilised சமூகத்தை உருவாக்குமே தவிர முழுமையான சமூகத்தையும் மேற்புறமாக இருந்து மாற்ற முயல்கிறேன் என்னும் கோஷம் என்பது உள்ளுக்குள் கிடக்கும் இருள் குறித்து அறிந்து கொள்ள முடியாத தன்மையையே தரும். அது வெறுமையான இயக்கம் ஆகிவிடும்.

கவிஞர் குறிப்பிடுவது போல மனங்களின் சூழ்நிலை குறித்து நகரும் கவிதைகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. வாழ்வின் போராட்டச் சக்கரத்தில் நசுங்கிக் கொண்டிருப்பவன் தன்னை, தன் வலியை உணரட்டும்... சொல்லப்படாத அழகியலை உணரட்டும்.... நடைமுறை வாழ்வின் போராட்டங்களை அவன் வெல்லும் போதே, சமூகத்தில் மாற்றம் உணரப்படும்.

நவீனத்துவக் கருத்துக்கள் என்பது, மேற்கத்திய அறிஞர்கள் முன்வைத்த கருத்துக்கள் எனச் சொல்வதும் ஏற்றுக் கொள்ளப் படவியலாத விஷயம். நடைமுறைகளும் நவீனத்துவமும் வேண்டுமானால் மேற்கத்திய சாயலைக் கொண்டிருக்கலாமே தவிர, நவீனத்துவத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் இங்கு வைக்கப்பட்டிருக்கும் மரபுகளிலிருந்தும், மரபுகளின் முரண்களைக் கேள்வி கேட்பதிலிருந்துமே துவங்குகின்றன.
**********************************
தலித்திய, பெண்ணியக் கவிதைகள் குறித்தான கருத்திலும் முரண்பாடு உண்டு. யார் வேண்டுமானாலும் தலித்தியம், பெண்ணியம் குறித்து எழுதலாம் என்பதில் துளியும் ஒப்புதலில்லை எனக்கு. பாதிக்கப்பட்ட சமூகத்தின் உறுப்பாக இருப்பவன்தான் அவனது வலியை செயற்கைத் தனமின்றி உணர்த்த முடியுமே தவிர, வெளியே நின்று வேடிக்கை பார்ப்பவன் பாதிக்கப்பட்டவனின் மனநிலையை இலக்கியத்தில் கொணர்தல் சற்றும் இயலாத காரியம்.

பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதியினரின் அதிகாரம்தான் இன்னும் தமிழகத்தின் பல பகுதிகளில் வீச்சுப் பெற்றிருக்கிறது. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி மட்டுமே ஊடகங்களால் காண்பிக்கப்பட்ட அவலங்கள். இது போன்றே ஊடகத்தின் வெளிச்சம் படாத கிராமங்கள் இன்னும் தமிழகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மலம் தின்ன வைத்தலும், தேர்தலில் போட்டியிடாமல் செய்வதையும் தாண்டிய ஊசிகள் தலித்துகளின் கண்களில் இறங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக சமூகம், சமூகம் என மாரடிக்கும் கவிதைகள் எத்தனை இந்த விவாகரங்களைப் பேசி இருக்கின்றன. மேற்புறமாக "சாதி ஒரு தீ" என எழுதிவிட்டுச் செல்லும் இலக்கிய இயக்கம் என்ன மாறுதலைக் கொண்டு வந்திருக்கிறது? நூறு சதவிகித சாதியுணர்வற்ற மனிதன் என எத்தனை பேரை தமிழகத்தில் கொண்டு வந்து நிறுத்த இயலும்?

இவன் எழுத்துக்களில் எப்படி சக்கிலி, பறையன், பள்ளனின் குரல் ஒலிக்கும்?

பெண்ணின் வலியை ஐம்பதாண்டு காலமாகச் சொல்வதாகச் சொல்லிக்கொள்ளும் ஆண்களால் எத்தனை பெண்களின் துக்கத்தை, கண்ணீரைச் சொல்ல முடிந்திருக்கிறது என்பதும், ஆணாதிக்க மனநிலையின்றி எழுதவும் செயல்படவும் முடிந்திருக்கிறது என்பதும் விவாதிக்கப் பட வேண்டிய ஒன்று. பெண்கள் தங்களின் உடலியல் சார்ந்த வலிகளைச் திரையின்றி சொல்லும் போது கூட இவ்வளவு நாட்களாக கட்டமைக்கப் பட்டிருந்த சமூக அமைப்பும், பெண் எப்படி தன் உடல் குறித்துப் பாடலாம் என்பதுமான ஆணாதிக்கக் குரல்தான் வெளிப்பட்டிருக்கிறது.(பெண்ணின் உடல் ஆணின் சொத்து என்ற கட்டுமானம்).

குட்டிரேவதியால், சுகிர்தராணியால் இன்னும் வேறு பெண்கவிஞர்களால் சொல்லப்படும் பெண்ணின் வலிகளை அப்படியே சொல்ல எத்தனை ஆண்கவிஞர்களால் முடிந்திருக்கிறது? வேறுபடுத்தி வகைப்படுத்தி நீங்கள் பார்க்க வேண்டியதில்லை. அவற்றை அவர்களால் மட்டும்தான் சொல்ல இயலும். அவற்றை அப்படியே பாருங்கள்.
************************
இதில் தமிழன் எங்கும் நகர்ந்து விடமாட்டான். நீங்கள் கட்டி வைத்த மரபுகளை அவனுக்கு ஒவ்வாதெனினும் பாராட்ட வேண்டுமென்ற மனநிலையிலிருந்து விடுபடுங்கள். போருக்கான அறைகூவல் எதுவும் தேவையில்லை. மாற்றம் ஒன்றுதான் மாறாத நியதி என்பதை அறிந்திருப்பீர்கள்.

நவீனத்துவக் கவிதைகள் வீச்சுப் பெற ஆரம்பித்திருக்கின்றன எனில் காரணம் என்னவென்பது ஆய்வுக்குரிய கருத்து. அந்த சமூகத்தின் அன்றைய மனநிலையைப் பிரதிபலிக்கும் இலக்கியங்களே வெற்றிபெறும். இன்றைய சூழலில் தனிமனித வாழ்வியல் முன்னிலைப்படுத்தப்படும் பரப்பில், நவீன கவிதைகள் தனக்கான இடங்களைப் பிடிக்க ஆரம்பிக்கின்றன என்பது தவிர்க்கவியலாத ஒன்று.
***************
பேட்டியின் ஒரு பகுதி:

கேள்வி : சமகால கவிதையின் போக்குகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்றைய நவீன கவிதை என்பதும் நவீன எழுத்து என்பதும் தமிழ்ச் சமூகத்தினுடைய மனசாட்சியின் மீது தொடுக்கப்பட்ட போர் என்று நான் கருதுகிறேன். அறிவு ஜீவிகள் என்று சொல்கிற சிலபேருடைய அடாவடித்தனம் தமிழ் இலக்கிய உலகத்திலே இப்பொழுது நிகழ்ந்து வருகிறது. இன்றைய நவீன கவிதை 'எழுத்து' காலகட்ட 'கசடதபற' கால கட்ட கவிதையைப் போல போய்விட்டதோ என்று தோன்றுகிற விதத்திலே கவிதையின் வடிவ வெளிப்பாடுகள், உத்தி முறைகள், உணர்வுகளின் வெளிப்பாடுகள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் மனித சமூகத்தின் மேன்மையை நோக்கி நடக்க வேண்டிய கலையை மனங்களினுடைய சூழ்நிலையை நோக்கி தள்ளிக்கொண்டு போகிறார்களோ என்று நான் கவலையோடு இந்தச் சூழலை கவனித்துக் கொண்டுள்ளேன். ஆனாலும் நம்பிக்கையுள்ள இளங்கவிஞர்கள், சமூகத்தின் மனச்சாட்சியாக இருக்கக் கூடிய கவிஞர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமூக அக்கறையுள்ள கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிறிய வட்டம் அந்த வட்டத்திற்குள் பேசுகிற விசயத்தையே பெரிதுபடுத்திப் பேசி, பதிவு பண்ணி, இவர்களின் படைப்புகள் தான் கவிதை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நவீன படைப்பாளிகள் தமிழ் பாரம்பரிய மரபுகளைக் கேலி செய்கிறார்கள். தமிழர்களுக்கு என்று இருக்கின்ற உணர்வுகளுடைய முன்னோட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள். தமிழை விட்டு தமிழர்களை நகர்த்தப் பார்க்கிறார்கள். இதை எதிர்த்து நம்முடைய போர் தொடர வேண்டிய கால கட்டம் இது.

கேள்வி : சமகால கவிதைகளில் பெண்மொழி, தலித் மொழி என்றெல்லாம் சொல்வது பற்றி உங்கள் கருத்து என்ன?

கவிதை ஒரு மொழி. கவிதையில் பெண்மொழி, கவிதையில் தலித் மொழி என்றெல்லாம் பகுத்துப் பார்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருவள்ளுவன் சொன்னதை தலித்தின் குரல் என்று சொல்வீர்களா? 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்; பரந்து கெடுக உலகு இயற்றியான்'ஒருவன் பிச்சை எடுத்துக் கூட வாழ வேண்டும் என்ற நிலை இந்த சமூகத்தில் இருக்குமானால் இந்த சமூகத்தினுடைய படைப்பாக்கங்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்கிற அந்த ஆவேசக் குரல்; அவன் ஒரு 'கம்யூனிஷ்டா'. எந்த விதத்திலே அவனை பிரிப்பீர்கள். பெண்களுக்காக ஆண்களே நிறையப் பேசி இருக்கிறார்கள். ஆண்களுடைய மொழியும் பெண்மொழிதான். பெண்களுக்காக மொழியப்பட்ட மொழியெல்லாம் பெண்மொழிதான். அதே மாதிரி தலித்துகளுக்காக தலித்துகளே எழுத வேண்டும் என்கிற அவசியமில்லை. தலித்துகளுக்காக மற்றவர்கள் எழுதி இருக்கிறார்கள். பாரதி எழுதலையா தலித்துகளுக்காக? 'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே வெள்ளை பரங்கியை துரையென்ற காலமும் போச்சே', 'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கு இருப்பவரன்றோ' 'உங்களால் ஈனப்பறையரென்று சொல்லப்படுபவர் அவர் எம்மோடு வாழ்ந்திங்கு இருப்பவர்'. 'சீனத்தவராய் விடுவாரோ' என்று கேட்கவில்லையா? அவன். தலித் பாரதி என்று சொல்லிக் கொண்டா அவன் எழுதினான். இதற்கெல்லாம் அப்பப்ப ஒரு புது போஸ்டர்கள் அடிக்க வேண்டியதிருக்கிறது. புதிய கொடிகளை காட்ட வேண்டி இருக்கிறது. அப்ப தலித் பாரதி என்று சொல்லிக் கொண்டா அவன் எழுதினான். தகழி சிவசங்கரன் பிள்ளையினுடைய எழுத்தில் தலித்தியம் இல்லையா? வேறுபடுத்தி வகைப்படுத்தி பார்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
****************************

8 எதிர் சப்தங்கள்:

கார்த்திக் பிரபு said...

Good post.wishes.

மு. சுந்தரமூர்த்தி said...

//இன்றைய பல கவிஞர்கள் தங்களின் கவிதைத் தொகுப்பைப் படித்துதான் கவிதையை நுகர ஆரம்பித்திருப்பார்கள். "கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்" தொகுப்புதான் நான் வென்ற பேச்சுப் போட்டிகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கின்றன.//

மணிகண்டன்,

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் மறைந்த மீராவின் நூல். நீங்கள் குறிப்பிட விரும்பிய மு.மேத்தாவின் கவிதை நூல் "கண்ணீர் பூக்கள்" ஆக இருக்கலாம்.

Vaa.Manikandan said...

நன்றி கார்த்திக் பிரபு & சுந்தர மூர்த்தி.

தவறுக்கு மன்னிக்கவும். சரி பார்க்காமல் எழுதிவிட்டேன்.

Anonymous said...

ஒரு நல்ல கவிதை தொகுப்புக்கு அருமையான அறிமுக வரிகள் போன்று உள்ளது உங்கள் பதிவு. சமுதாய மாற்றத்தை எதிர்பார்த்து,எதிர்பார்த்து, ஏமாற்றமடைந்த ஒரு கவிஞனுக்கு ஏற்படுகிற தார்மீகமான கோபங்கள்தான் இப்பதிவு.
"பேனாவை அழுத்தமாக அசைத்தால் மட்டுமே சமூக கொடுமைகள் கிழிக்கப்பட்டுவிடும் என்று நானும் நம்பவில்லை. ஆனால் கொடுமைகளுக்கு எதிராக கிளம்பும் எத்தனையோ சக்திகளுள் பேனாவும் ஒன்று என்று நம்புகிறேன். அந்த வகையில் பெரும்பாலான கவிஞர்களுக்கு தாங்கள் பிடித்துள்ள ஆயுதம் பற்றிய பிரக்ஞை இருக்கிறது"

என்பார் கவிஞர் இன்குலாப்.

சமுதாய மாறுதலுக்காக ஒரு கவிஞனோ, எழுத்தாளனோ, அரசியல் தலைவனோ சிந்திப்பதைக் காட்டிலும் , தனி மனிதன் சிந்திக்க வேண்டும்.

கொழுவி said...

சம்பந்தமில்லாத ஒரு கேள்வி.

குஸ்பு விவகாரம் நடந்த போது தமிழ்க்கலாச்சாரம் பற்றிப் பேசிய நீங்கள் இந்தப் பதிவை எழுதியிருக்கிறீர்கள். (அதன்பின் வந்த பல பதிவுகள் எதிர்மறையாகவே இருந்தன.)

பார்வைகள் மாறியதா? அல்லது இப்போதும் அப்பதிவுதான் உங்கள் நிலைப்பாடா?


;-)

கொழுவி said...

மு.மேத்தா தற்போதைய கவிதைகள் குறித்துச் சொல்வது மட்டில் எனக்கும் விமர்சனமுண்டு.
அதேநேரம் கவிக்கோ அப்துல் ரகுமான், "மரபு என்னும் மாட்டு வண்டி" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் மரபை முற்றாகத் தூக்கியெறிய வேண்டும் என்று எழுதுவது மட்டில் கடும் கோபமுமுண்டு.
அவையவை அவற்றின் வழியே போகட்டும்.

Vaa.Manikandan said...

நண்ப‌ர்களின் க‌ருத்துக்களுக்கு நன்றி.

கொழுவி,
தங்களின் கேள்விக்கு என்னால் தெளிவான விளக்கம் த‌ர முடியுமா என்று தெரியவில்லை.

என் பார்வைகள் தொட‌ர்ச்சியாக மாறிக்கொண்டேதான் வந்திருக்கின்றன. ஆனால் என் பழைய பார்வையிலிருந்து எதிலும் முற்றாக விடுபட்டதாகத் தெரியவில்லை. மணலில் அம‌ர்ந்து எழுந்ததைப் போல மண்துகள்கள் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. முழுமையாக விடுபட இயலுமா என்று தெரியவில்லை. நானும் அதற்காக முயல்வதுமில்லை.

கார்திக்வேலு said...

மணி ,
தங்கள் ஆதங்கம் புரிகிறது ,பெரும்பாலான கருத்துகளில் நானும் உடன்படுகிறேன்.
தனிமனித தளம் சார்ந்து இயங்கும் இலக்கியம் எந்த விதத்திலும் வலுகுறைந்தது அல்ல ,யோசித்துப் பார்க்கையில் சமுதாயம் என்பதே ஒரு புனைவுதான்.
---------------------------

//யார் வேண்டுமானாலும் தலித்தியம், பெண்ணியம் குறித்து எழுதலாம் என்பதில் துளியும் ஒப்புதலில்லை எனக்கு.//

தலித்திய / பெண்ணிய எழுத்து என்று வகைப்படுத்துதல்
அந்த வகை எழுத்துக்களை குவிக்கவும் [channelise] ஒரு வலுவற்ற குழுவின்மீது ஒரு வலுவுள்ள குழு தனது நம்பிக்கைகள் மற்றும் மதிப்பீடுகளை திணிப்பதையும் தடுக்க ஏதுவாகும்.

ஆனால் இந்த வகை எழுத்தை இவர்கள் (தலித்துகள்/பெண்கள்) மட்டும் தான் எழுத வேண்டும் என்று வரையறை செய்ய வேண்டியதில்லை என்பது என் கருத்து.இந்த isolationist exclusivity ஆரம்பத்தில் தளையறுக்க உதவினாலும் பிற்காலத்தில் அவர்கள் பார்வையை நிறைய குறுக்கிவிடும் வாய்ப்புகளும் அதிகம்.

நம்மைப்பற்றிய நம் பார்வையும் ,நம்மைப்பற்றி நம் எதிரே நிற்பவர் பார்வையும் வேறானது இந்த இரண்டும் கலந்தே ஒரு முழுமையான
உருவத்தை பார்க்க இயலும்
-------------