Jul 28, 2006

பற வீரன்

பறையன் என சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்திற்கு நிகழ்ந்த கொடூரம் ஒன்றினை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் பழமலய்யின் இக்கவிதை கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

பொதுவாக பழமலய் அவர்களின் கவிதைகளில் காணப்படும் சமூகக் கண்ணோட்டம் என்னைக் கவர்ந்திருந்தாலும், கவிதை என என் மனச்சித்திரத்தில் கொண்டுள்ள வடிவத்திற்கு பொருந்தாமல், இவரின் கவிதைகள் துருத்தி நிற்கும் ஒன்றாக உணர்ந்திருக்கிறேன்.

இக்கவிதை விதிவிலக்கு. தனக்குள் கதை ஒன்றினை சுமந்து கொண்டிருப்பதும், இயல்பாக வெளிப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் சப்தமற்ற அழுகையும், அதனைக் கண்டு வெளிப்படும் கோபமும், இறுதியில்-கவிதைசொல்லி உதிர்க்கும் வாக்கியமும் மிக முக்கியமானவை.

வட்டார வழக்கிலும் மிக அற்புதமான கவிதைகளைக் கொணர இயலும் என்பதற்கு நல்ல உதாரணம் இக்கவிதை. சில இடங்களில் வட்டார வழக்கினை சரியாக புரிந்து கொள்ள திரும்பப் படிக்க வேண்டி இருக்கிறது.


என் ஆர்வங்கள் அறிந்து,
(பண்ணுருட்டி அருகே சோமக் கோட்டை.
ஆசியாவின் பெரிய சுடுமண் குதிரைகள்.
இந்திரன் சொல்லியிருந்தார்.
மெனக்கெட்டு போய்ப் பார்த்தேன்.
நான்கு குதிரைகளில் இரண்டும்
ஒரு யானையும் நிற்கின்றன.
மரங்களின் வேர்கள் கிளப்பி, விரைவிலேயே
இவையும் காற்றோடு பறந்து விடலாம்)

கண்மணி குணசேகரன் கடிதம் எழுதியிருந்தார்.
'மணக்கொல்லைக்கு' அழைத்திருந்தார்.

ஒரு முற்பகலில்
ஊரைச் சுற்றிக் காட்டினார்.

ரெட்டியார் கிராமம்.
பத்து பன்னிரெண்டு போலத்
தோட்டமும் வீடுமாகப் பெரிய ஓட்டு வீடுகள்.
இடையிடையே சில இடிந்து கிடந்தன.
எருக்கு முளைத்திருந்தது.

"சாபம் அய்யா-
கழுத விழுந்து பொரளணும்!
குடியத்துப் போவணும்!"

இதான் பறவீரன் கோயில்.
அது பறவீரன் குளம்.
அந்த வீடு இந்த வீடு இன்னு
சில ரெட்டியாருங்க வந்து கும்புடுவாங்க.
இங்க நின்ன ஒரு அழிஞ்சி மரத்துலதான்
தல கீழா தொங்கவுட்டு
வைக்கோலப் போட்டு கொளுத்துனாங்களாம்

இதான் அந்த நெலம்
அந்தப் பஞ்சத்துலயும் இந்தக் கொல்லையில
அப்புடி கம்பு வெளஞ்சிருந்துதாம்.
தோ, புலியூரு
அந்தப் பக்கத்துல இருந்து வந்துதான்
ஒரு ராத்திரி கம்ப அறுத்துட்டானாம்

கேள்விப் பட்டு வந்த அவன் பொண்டாட்டி
நெறமாத கர்ப்பிணி-
'பசிக்குத் திருட வந்தவன,இப்புடி
பண்ணிப்புட்டீங்களேடா பாவிவோளா'ன்னு
மண்ண வாரிவுட்டு அழுது பெரண்டாளாம்.

அப்ப,
அப்ப அடிச்சி உட்டுடலாமுன்னு தடுத்துவுங்க குடும்பங்க
இப்ப வித்து மாறிகிட்டிருக்குது
கொளுத்னவனுவோ வீடுங்க
எருக்கு மொளச்சி கெடக்குது"

நின்று நினைத்தேன்:
கோயில், அடையாளம் என்று நின்ற வேல்,
நாவாக அசைந்து சொன்னது.
'பறையன்,
பறையனா இருந்தா கொளுத்துவானுங்க.
வேரறுக்கும்
வீரனா இருந்தா கும்புடுவானுங்க'.

4 எதிர் சப்தங்கள்:

சுந்தரவடிவேல் said...

அச்சூழலை அப்படியே காட்சிப்படுத்துகிறது கவிதை; அந்தப் பெண்ணின் வலியும், வார்த்தைகளும் பிசகாமல் இலக்கை அடிக்கின்றன.

வெற்றி said...

மணிகண்டன்,
நல்ல ஒரு கவிதையை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.

//'பறையன்,
பறையனா இருந்தா கொளுத்துவானுங்க.
வேரறுக்கும்
வீரனா இருந்தா கும்புடுவானுங்க'.//

உண்மைதான். குட்டக் குட்ட குனியாமல் நிமிர்ந்தெழுந்தால்தான் இங்கே மனிதனாக வாழலாம். இல்லையேல் காலம் முழுவதும் அடிமை வாழ்வே.

பரத் said...

நல்ல கவிதை
உங்களது எழுத்துநடை நன்றாக உள்ளது

Thangamani said...

மணிகண்டன்,
நல்ல ஒரு கவிதையை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்