Jun 24, 2006

கோபிச் செட்டிபாளையம்

இந்த ஊர்ப் பெயரை பேரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கொங்கு மண்டலத்தில்- ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான ஊர். உடனடியாக நினைவுக்கு கொண்டு வர வேண்டுமானால், இன்றிலிருந்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் வந்த கிராமியப் படங்கள் பெரும்பாலானவற்றில் கோபி நடித்திருக்கும். (கோபிச் செட்டிபாளையத்தை சுருக்கி கோபி என்றுதான் சொல்வார்கள்). வயல்வெளி, வாய்க்கால், தூரத்தில் மலைப் பிரதேசம் என்றால் கண்ணை மூடிச் சொல்லலாம் அது கோபி என. மிக அருகாமையில் அமைந்த அல்லது தென்னந்தோப்பு போன்றவை இருந்தால் அது பொள்ளாச்சி.

கோபி பெரிய ஊர் எல்லாம் இல்லை. ஊரின் கிழக்கு முனையில் பயணத்தைத் தொடங்கினால் மேற்கு முனையை அதிக பட்சமாக பன்னிரண்டு நிமிடங்களில் அடைந்துவிடலாம். அதே போலத் தான் வடக்கும் தெற்கும். ஆக கோபி என்று சொல்லும் போது சுற்றியுள்ள ஊர்களையும் எடுத்துக் கொள்வதுதான் சரி. அரசாங்கத்தின் கூற்றுப் படி சொல்ல வேண்டுமானால் சட்டமன்றத்தொகுதி, நாடாளுமன்றத் தொகுதி, கோட்டம், நகராட்சி எனச் சொல்லலாம்.

ஆனால் இந்த அம்சங்கள் யாவும் பொருந்தக் கூடிய வேறு ஊர்களும் இருக்கலாம் என்ற போதும் அவைகளுக்கு இல்லாத தனித் தன்மைதான் கோபியின் சிறப்பு. ஈரோட்டிலிருந்து, சத்தியமங்கலத்தை நோக்கிப் பயணம் துவங்கினால், ஊர் எப்போது வரும் எனக் கவலைப் படாமல் தூங்கலாம். பேருந்தின் ஜன்னலோரத்தில், குளிர்காற்று வீசத் தொடங்கினால் கோபியை நெருங்கி விட்டதாக அர்த்தம். குளிர் காற்றினை மலைப் பிரதேசக் காற்றுடன் ஒப்பிட முடியாது. இது இந்த ஊர் தன்னைச் சுற்றி போர்த்திக் கொண்ட நெற்பயிரின் சுவாசம். முழுமையான குளிர் என்று சொல்ல முடியாத, வெக்கையுடன் கூடிய குளிர்ச்சி. இதனை நீங்கள் மேலும் அனுபவிக்க வேண்டுமானால், கோபிக்கு வடக்கே உள்ள தூக்க நாய்க்கன் பாளையம் என்னும் ஊருக்கு செல்லும் வழியில் பயணிக்க வேண்டும். வயலின் குளிர்ச்சி மெதுவாக-நத்தையின் வேகத்தில் நம் மீது படிவதை உணரலாம். வாய்க்கால்களும் சிறு கொப்புகளும் நரம்புகளைப் போல வயல்களினூடாக ஓடிக் கிடக்கும். சுவாசம், பார்வை என எல்லாவற்றிலும் மஞ்சளும் வெக்கையும் கலந்த பசப்பின் அநுபவம் கிடைக்க வேண்டுமானால், இருசக்கர வாகனப் பயணம் அவசியம். இந்தப் பகுதியில்தான் கொடிவேரி, குண்டேறிப் பள்ளம் போன்ற முக்கியமான சுற்றுலா செல்வதற்கான இடங்கள் இருக்கின்றன. ஒரு நாள் முழுமையாகத் தேவைப்படும் நிறைவாக ரசிக்க.

பாரியூர் என்னும் பெயரில் உள்ள பாரி என்பது கடையெழுவள்ளல் பாரியினைக் குறிக்கும் எனப் படித்திருக்கிறேன். ஆனால் சரியான வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் எனக்குத் தெரியவில்லை. இங்கு உள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவிலும், குண்டத்திருவிழாவும் மிகப் பிரபலம்.கைது அற்புதமான இயற்கைச் சூழல் நிறைந்த இடம். அருகில் உள்ள பச்சைமலை, பவள மலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

மற்ற ஊர்களின் மாரியம்மன் பண்டிகைகளை விட இந்தப் பகுதியின் பண்டிகை மிக வித்தியாசமானது. அது குறித்து தனிப் பதிவே எழுதலாம். பங்குனி, சித்திரையில் வரும் இந்த விழாவின் ஏழு நாட்களும் மிக ரசனையான கொண்டாட்டம்.

கோபிப் பகுதியை சார்ந்தவர்களை, சற்றே தள்ளியிருக்கும் வறட்சி பாய்ந்த மண் காரர்கள் கரவழிக்காரர்கள்(கரை வழிந்து ஓடும் பகுதி) என்று சொல்வது உண்டு. இது பவானி ஆற்றின் புண்ணியம். கோபியில் மழை பெய்ய வேண்டிய அவசியமே இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்தால் போதும், பவானியில் தண்ணீர் வந்துவிடும். அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ் பவானி என நிறைய வாய்க்கால்களை வெட்டி வைத்து தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமற் செய்திருக்கிறார்கள்.

கொங்குத் தமிழ் என்றால் கோபிதான். கோயம்புத்தூர் அந்த மண்டலத்தில் பெரிய ஊர் என்பதாலும், அந்தக் காலத்தில் ஒருங்கிணைந்த ஈரோடு, கோவை மாவட்டங்களுக்குத் தலைநகரம் என்பதாலும் கொங்குத் தமிழை- கோயம்புத்தூர் தமிழ் ஆக்கிவிட்டார்கள். திட்டுவதாக இருந்தால் கூட மரியாதையாகத் தான் திட்டுவார்கள். அதற்காகவாவது ஏதேனும் கிராமப் பகுதி பாட்டியிடம் திட்டு வாங்கலாம்.

கோபிப் பகுதிக்கென சில உணவு வகைகள் உண்டு. எனக்குப் பிடித்த வகை 'அரிசியும் பருப்பும்'. மிக விரைவாக செய்துவிடுவார்கள். நெய் ஊற்றி, ஊறுகாய் வைத்து முதலில் சாப்பிட வேண்டும். அடுத்து கத்தரிக்காய்ப் புளிக் குழம்பு அதன் பின் கெட்டியான, வெண்ணெய் எடுக்காத தயிர் ஊற்றி குழைத்துச் சாப்பிட வேண்டும். எருமைப் பால் தயிராக இருந்தால் இன்னும் தேவலை. இந்தச் சுவையைப் பழகிவிட்டால் வேறு உணவு வகைகள் சற்று தள்ளி நிற்க வேண்டும். நிறைய வெளியூர் நண்பர்கள் இந்தப் பெயரை கேள்விப்பட்டது கூட இல்லை.

பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், நடிகர் ரஞ்சித் போன்ற பிரபலங்களுக்கு கோபியுடன் நெருங்கிய தொடர்புண்டு. கோபியைத் திரைப்படங்களில் பிரபலப் படுத்தியதில் பாக்யராஜ் அவர்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு. 'முந்தானை முடிச்சு' பெரும்பலாலும் கோபியிலேயே எடுக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து கோபியில் 100 நாளைக் கடந்த முதல் படம் அதுவாகத் தான் இருக்கும்.

சில ஆண்டுகள் வரை நிறையக் கல்லூரிகள் இருந்ததில்லை. இப்பொழுது நிறைய உருவாகியிருக்கின்றன. மக்கள் விவசாயம் தாண்டியும் வெளி வரத் தொடங்கியிருக்கிறார்கள். கொஞ்சம் பொறாமை நிறைந்த மக்கள் என எனக்குப் படுகிறது. வதந்திகளுக்கு மிகப் பிரபலம். கண் காது மட்டுமல்ல, நல்ல துணிமணி, நகை எல்லாம் எடுத்துக் கொடுத்து வதந்தியைப் பரப்புவதில் கில்லாடிகள். இந்த விஷயத்தில் கவனம் தேவை.

நகரமும் கிராமமும் கலந்த வாழ்க்கையின் உண்மையான பொருளை கோபியில் அறியலாம்.

முக்கியமான விஷயம் பெரும்பலான கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள். வர்ணிக்க முயலும் போது வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும்.

26 எதிர் சப்தங்கள்:

manasu said...

//கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள்//

அப்புறம் எதுக்கப்பு ஏஞ்ஜலினா ஜோலி???

கார்திக்வேலு said...

'அரிசியும் பருப்பும்' என்றது அம்மச்சி ஞாபகம் தான் வரும்.
சமைக்க எளிய, சுவையான அதே சமயம் சமச்சீரான உணவும் கூட.
"பச்சைப் பருப்பு" "கொள்ளுப் பருப்பு" கூட ..கொங்கு மண்டலம் தவிர வேறு இடங்களில் அவ்வளவாய் சாப்பிடக் கிடைத்ததில்லை


ஈரோட்டு , கோவை , திருப்பூர்,பொள்ளாச்சி பகுதி மக்கள், குறிப்பாகப் பெண்கள் அணியும் உடை , தனித்தன்மையாக இருப்பது போல படும்.

திருப்பூரில் ..பின்னலக முதலாளிகள் , தம் தொழிலாளர்களை ,
"வாங்க" ..."போங்க" என்று விளிப்பதைப் பல முறை கண்டிருக்கிறேன்.
ஆட்டோ ஒட்டுநர்களிடம்...பேசினாலும் இதைக் கண்டுகொள்ளலாம்.

சென்னை ..சேலம் ..போனற இடங்களில் நீங்க வாங்க போட்டு பேசுகையில்
முதல் கேள்வி "எந்த ஊரு ?" என்பதாய்த்தான் இருக்கும்.


//முக்கியமான விஷயம் பெரும்பலான கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள்//
இப்படிச் சொன்னா எப்படி ..படங்காட்டினாத்தான் நம்புவோம். :-)

Vaa.Manikandan said...

மனசு,
கோபிப் பெண்கள் அழகுதான். ஆனால் என் ரேஞ்சுக்கு இருக்கணுமில்ல? ;)
அதான் ஏஞ்சலினா ஜோலி.

உண்மையை உங்களுக்கு மட்டும் சொல்றேன்.
முதல் பிரச்சினை, என்னை ஆண்கள் பள்ளியில் அடைத்துவிட்டார்கள். போதாதற்கு +1,+2 வில் டியூஷன் வேறு. டியூஷன் தான் பொருத்தமான இடம் என்றெல்லாம் தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள். அந்த வாத்தியார் டேபிள் மேல் எல்லாம் எகிறி எகிறி அடிப்பார். இது போன்ற பல தடைகளை மீறி என்னால் ஜெயிக்கவே முடியவில்லை. இது எல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சுதான், ஏஞ்சலினா ஜோலி. எதுவுமே கிடைக்காத போது ஆஇம் ஆவது பெரிய அளவில் வைப்போம் என்றுதான். ;)
(வெளியில சொல்லிடாதீங்க!)

கார்திக்வேலு,
எனக்கே யாரும் படம் தரமாட்டேங்குறாங்க...பின்ன என்ன பண்றதுன்னு சொல்லுங்க!கோபி பக்கம் வாங்க...எல்லாம் பேசிக்கலாம். :)

Anonymous said...

பல முறை கோபிக்கு போயிருந்தாலும், அந்தக் காற்றை அனுபவித்து இருந்தாலும் நீங்க சொல்றப்ப இன்னும் ஒரு முறை போய்வர மனசு ஏங்குகிறது.
அந்த அரிசியும் பருப்பும் சுவையே தனி தான்.

எங்க பக்கம் மழை அடித்தால் உங்க பக்கம் தண்ணிங்க. அட ஆமாமுங்க.

Anonymous said...

வா(வ்) மணிகண்டன்,

கோபியிலிருந்து ஒரு வலைப்பதிவாளரா? நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.

//பேருந்தின் ஜன்னலோரத்தில், குளிர்காற்று வீசத் தொடங்கினால் கோபியை நெருங்கி விட்டதாக அர்த்தம். குளிர் காற்றினை மலைப் பிரதேசக் காற்றுடன் ஒப்பிட முடியாது. இது இந்த ஊர் தன்னைச் சுற்றி போர்த்திக் கொண்ட நெற்பயிரின் சுவாசம்.//

சரியாகச் சொன்னீர்கள். இதை முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால், மேட்டூர் டிராவல்ஸ் பேருந்தில் பொங்கலுக்கு முந்தைய இரண்டு மூன்று வாரங்களில் சென்னை-கோபி வரவேண்டும். அல்லது காலை 6:30 மணிக்கு அந்தியூரிலிருந்து புறப்பட்டு, அத்தாணி வழியாக நெல்வயல்களின் ஊடாக வரும்போது, இருபுறமும் விரியும் கிளிப்பச்சை அழகைக் கண் கொள்ளாது. அதுவும் ஜன்னல் கண்ணாடியைச் சிறிது திறந்து வைத்துக்கொண்டு, பேருந்தில் ஒலிக்கும் அந்த மெல்லிய பக்திப் பாடலைக் கேட்டுக்கொண்டே வந்தால், அடடா! சொர்க்கம் கூட இத்தனை சுகமாக இருக்காது.

//இதனை நீங்கள் மேலும் அனுபவிக்க வேண்டுமானால், கோபிக்கு வடக்கே உள்ள தூக்க நாய்க்கன் பாளையம் என்னும் ஊருக்கு செல்லும் வழியில் பயணிக்க வேண்டும். வயலின் குளிர்ச்சி மெதுவாக-நத்தையின் வேகத்தில் நம் மீது படிவதை உணரலாம். வாய்க்கால்களும் சிறு கொப்புகளும் நரம்புகளைப் போல வயல்களினூடாக ஓடிக் கிடக்கும். சுவாசம், பார்வை என எல்லாவற்றிலும் மஞ்சளும் வெக்கையும் கலந்த பசப்பின் அநுபவம் கிடைக்க வேண்டுமானால், இருசக்கர வாகனப் பயணம் அவசியம்.//

கோபியை அனுபவிக்க இருசக்கர வாகனம்தான் சரியானது. அதுவும் டிவிஎஸ் போன்று கியரைப் பற்றிய கவலை இல்லை என்றால், வயல்வெளிகளுக்குள் புகுந்து வருவதில் உள்ள சுகமே தனி. இதை வெளியூர்க்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், நாட்டாமை படத்தில் வரும் டைட்டில் சாங் பார்க்கலாம். இந்த வழியில்தான் அப்பாடலை எடுத்தார்கள்.

//மற்ற ஊர்களின் மாரியம்மன் பண்டிகைகளை விட இந்தப் பகுதியின் பண்டிகை மிக வித்தியாசமானது. அது குறித்து தனிப் பதிவே எழுதலாம். பங்குனி, சித்திரையில் வரும் இந்த விழாவின் ஏழு நாட்களும் மிக ரசனையான கொண்டாட்டம்.//

ஏப்ரல்/மே மாதங்களில், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வாரம் நடைபெறும். எப்படித்தான் அடுத்த ஊரின் பண்டிகை நாளுடன் Clash ஆகாமல் வைக்கிறார்களோ! பூச்சாட்டில் தொடங்கி, கம்பம் நடுதல், தீர்த்தக்குடம் எடுத்தலில் உச்சத்தை அடைந்து, மஞ்சள் நீராட்டு வரை ஊர்மக்கள் அனைவரும் அனுபவித்து ஈடுபடும் பண்டிகைகள். நம்ம வீட்டுப் பண்டிகை! சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும் என அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். பொங்கலுக்குப்பின் அறுவடை முடிந்து, மக்களின் கையில் பணம் தாராளமாகப் புழங்குவதால், உற்சாகத்துக்குக் குறைவே இருக்காது. இப்போதெல்லாம் இதை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நிச்சயம் தயவுசெய்து இதை விரிவாக எழுதுங்கள். பதிவு செய்யப்பட வேண்டிய உணர்வுகள்.

//கோபிப் பகுதிக்கென சில உணவு வகைகள் உண்டு. எனக்குப் பிடித்த வகை 'அரிசியும் பருப்பும்'. மிக விரைவாக செய்துவிடுவார்கள்.//

இதை 'சோம்பேறி சோறு' என்று கிண்டலாக அழைப்பதும் உண்டு. அம்மாக்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில், இஞ்சி, பூண்டு கொஞ்சம் தூக்கலாகப் போட்டு செய்து விட்டால், குடும்பத்தினர் மறுபேச்சின்றிச் சாப்பிட்டு முடிப்பார்கள். வந்திருக்கும் விருந்தினர்களை இரவு தங்க வைக்கவும் இந்த டெக்னிக்கை பயன்படுத்துவதுண்டு. இரவு அரிசியும் பருப்பும் கத்தரிக்காய்ப் பச்சடியும் எனக்கூறி விட்டால், விருந்தாளி நிச்சயம் தங்கி விடுவார்.

//முக்கியமான விஷயம் பெரும்பலான கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள். வர்ணிக்க முயலும் போது வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும்.//

பாரியூர்த் திருவிழாவில் பாவாடை தாவணியுடன் வளைய வரும் அழகே தனி. இதற்கென்றே ஒரு இளைஞர் பட்டாளம் சுற்றிக்கொண்டிருக்கும். பாரதிராஜா படங்களில் வரும் திருவிழாக்கள் மிக அழகாக இதைப் பிரதிபலிக்கும். ஆனால் இப்போது தாவணிகள் (எண்ணிக்கையில்தான்) குறைந்து வருவதுதான் வருத்தமளிக்கிறது. ஆனால் இன்னும் பேண்ட் சர்ட் கலாச்சாரம் வரவில்லை. இதுவரை பேண்ட் சர்ட் அணிந்து ஒரு பெண்ணைக்கூட கோபியில் பார்த்ததில்லை.

இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.

நகருக்குள் இருக்கும் சத்தி மெயின் ரோடு (சீதா கல்யாண மண்டபம் முதல் முத்துமஹால் வரை) 1992ல் போடப்பட்டது. இன்றுவரை குண்டு குழிகள் ஏற்பட்டு ஒட்டுவேலை செய்யப்பட்டதாக நினைவில்லை. இவ்வளவு தரமான, அகலமான, நீடித்து உழைக்கும் சாலைகள் தமிழ்நாட்டில்/இந்தியாவில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

பாரியூர் பற்றிய பதிவை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

நன்றி
கமல்

மங்கை said...

//திட்டுவதாக இருந்தால் கூட மரியாதையாகத் தான் திட்டுவார்கள். அதற்காகவாவது ஏதேனும் கிராமப் பகுதி பாட்டியிடம் திட்டு வாங்கலாம்//

ஹ்ம்ம்ம்ம்..ஊரு நியாபகம் வந்துருச்சு.. நம்ம தமிழே தமிழ் தான்...

//கோபிப் பகுதிக்கென சில உணவு வகைகள் உண்டு. எனக்குப் பிடித்த வகை 'அரிசியும் பருப்பும்'.//

நாயுடுக்கும் கவுண்டருக்கும் தாங்க இதோட ருசி தெரியும்..வேற யார் செய்தாலும் நம்ம கை பக்குவம் வராது..அப்பலத்தோட சேர்த்து சாப்டா சொர்க்கம் தான்...அதுவும் நம்ம ஊர்ல உக்காந்து சாப்படனும்..
நீங்க சொன்ன மாதிரி வேற ஊர்க்காரங்களூக்கு இது பத்தி ஒன்னும் தெரியாது..

மாரியம்மன் பண்டிகை அப்போ அந்த வேப்பிலை வாசனை,..பச்ச மாவு..கரகாட்டம்..நீர்மோர்..
எத்தனை வயசானாலும் இன்னும் அந்த பலூன பார்த்தா வாங்கனும்னு ஆசை

//முக்கியமான விஷயம் பெரும்பலான கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள். வர்ணிக்க முயலும் போது வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும்//
நம்ம ஊர் பொண்ணுகளுக்கு
நீங்க கொடுத்த certificate..thanks..
(இதுல கோயமுத்தூர் பொண்ணுகளும் இருகாங்க இல்லீங்க...)

ஹ்ம்ம்ம்.... ஊரு நியாபகம் வந்துருச்சு

மங்கை

பெத்தராயுடு said...

//'அரிசியும் பருப்பும்' //

கோபிக்கு மேக்கால, எங்கூருலயும் அதே பேருதான் 'அரிசியும் பருப்புஞ்சோறு', இப்ப *நாகரீகமா* 'பருப்பு சாதம்'.

கூட வாழைபழத்தோட சாப்பிடுவதையும் சேர்த்துக்குங்க.

oosi said...

கலக்கல் பதிவுங்கோவ் .... பாரியூர் picturesque அலாதி ... IRTT காலத்தில் சுற்றுலா சென்ற நண்பர்கள் கொடிவேரியில் முழ்கி இறந்த சோகமும் நினைவில் வருகிறது ...

Chellamuthu Kuppusamy said...

ஞாபகம் வருதா? கொங்கு மண்டலம்..ம்ம்ம்.. பெரு மூச்சு தான் வருது மணி. பவானி ஆற்றை இந்தக் கால கட்டத்தில் நான் பார்த்ததில்லை. அமராவதி போல மணல் கொள்ளை பவானியில் நிகழவில்லை என ஆசைப்படுகிறேன்.

//முக்கியமான விஷயம் பெரும்பலான கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள்// no comments!!

Anonymous said...

Hi,
I am also from Gobi...I am enjoying this article....I am unable to type in Tamil....keep writing...write about mariyaman pandikai..

thankyou.

rajesh

Vaa.Manikandan said...

கமல்,
கோபி குறித்து நீண்ட,தெளிவான கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள் மிக்க நன்றி. பதிவினை முடித்துவிட்டு அத்தாணி சாலை குறித்து எழுதாதது நெருடலாக இருந்தது. இப்பொழுது நீங்கள் குறிப்பிட்டது மகிழ்ச்சி.

நன்றி மஞ்சூர் ராஜா.

ஊசி, நீங்கள் IRTT ஆ? தெரிகிறது...:)

அரிசியும் பருப்புக்கும் வாழைப் பழமா? பெத்தராயுடு நீங்கள் குறிப்பிடுவது வேறு என நினைக்கிறேன். அம்மாவிடம் கேட்டு சமையல் குறிப்பொன்று எழுதுகிறேன். அப்புறமாக தெளிவு படுத்திக் கொள்ளலாம்.

நான் கோயம்புத்தூர் பொண்ணுகளை குறிப்பிடவில்லை. சரி நீங்கள் 'பொக்கு'என்று போய்விடக்கூடாது...சேர்த்துக் கொள்கிறேன். ஆனால் கோபி கோபி தான். :)

நீங்கள் எழுதியதே சந்தோஷம்தான் ராஜேஷ். தமிழில் இருக்க வேண்டுமென அவசியம் எல்லாம் இல்லை.

குப்ஸ்,
என்ன No Comments? அது 100 % உண்மை தல......

Anonymous said...

Yes Mani

Hats off.it's a great Initative.

Firefox doesn't show the tamil words Correctly .send me some suggestions sothat i can also enjoy the Blog

As a Wikipedia member, i can find the link .Plz go through and if possible append your Article. To do this you need wikipedia membership.It's free .just register iT
http://en.wikipedia.org/wiki/Gobichettipalayam

Anonymous said...

Yes Mani

Hats off.it's a great Initative.

Firefox doesn't show the tamil words Correctly .send me some suggestions sothat i can also enjoy the Blog

As a Wikipedia member, i can find the link .Plz go through and if possible append your Article. To do this you need wikipedia membership.It's free .just register iT
http://en.wikipedia.org/wiki/Gobichettipalayam

Anonymous said...

அண்ணன் வீரப்பனைப் பற்றி ஒரு வரி கூடவா இல்லை?????

Anonymous said...

We have this ongoing debate at our home: Erode Vs. Gobi.(En avar is from Erode!)
Thank you for the post.

Another proud Gobi-ite(?!)
Kumutha Selvaraj

aathirai said...

அரிசிம்பருப்பு சாதத்துக்கு உங்க ஊர்ல கத்திரிக்கா பச்சடியா?
எங்கூருல தக்காளி பச்சடி. கொங்கு நாட்டு பேடன் ட் ரெசிபி.

உங்க ஊர்ல தயிர் சாதத்துக்கு மாம்பழம் உண்டா? பொள்ளாச்சிக்காரர்கள்
இந்த காம்பினேஷனைக் கேட்டால் சிரிக்கிறார்கள்.

கொங்கு நாட்டில் பச்சை பசேலை பார்த்துக்கொண்டு பஸ்ஸில்
போவதே ஜாலிதான்.

Vaa.Manikandan said...

Thanks Vijayamurugan.

Kannan,Will write soon about "annan" veerappan. :)

Thanks prema and Kumutha. Happy to see some gobi ppl.

Aathirai,
No mango for Curd rice.something different.Let me try :)

Anonymous said...

//ம்ம்ம்...டியூஷன் வாத்தியார் யாருன்னு தெரிஞ்சு போச்சு!!//

நானும் யோசிச்சுப் பார்த்தேன். சம்பத்தா கர்ணனான்னு புரியலை.

அடேயப்பா! கோபியிலிருந்து ஒரு பெரிய கூட்டமே இருக்கு போலிருக்கு! ஒரு சந்திப்பு நடத்திடலாமா?

நன்றி
கமல்

Vaa.Manikandan said...

கமல்,

சம்பத் அடிக்கவெல்லாம் மாட்டார்!

அந்த 'கர்ண கொடூரத்'துக்கு வேறு ஒருவர் இருக்கிறார்.

நீங்கள் சொன்னது கூட முயன்று பார்க்கலாம்.

Vaa.Manikandan said...

ayyooo....ayyooo....
Prema, athu Karnan...

வெற்றி said...

மணி,
மன்னிக்கவும். இப் பின்னூட்டம் தங்கள் பதிவு பற்றியதல்ல. ஆறுச் சங்கிலிப் பதிவுக்கு உங்களை என் பதிவில் அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது, அழைப்பை ஏற்று பதிவு போடுவீர்களென எதிர்பார்க்கிறேன்.

மிக்க நன்றி

Anonymous said...

Very good representation about Gobi. I did my MBA from the very famous PKR College. Only women's college in Gobi... But i've never seen jollu guys thr.... why is that so... any specific reason guys/// Just remembering my golden days in the Jail (Hostel) with such a big gate and wall.... Pleasant memories...

Anu

தாணு said...

மணிகண்டன்
ரொம்ப தாமதமாக வந்துதான் உங்க பதிவு பார்க்கிறேன். இன்னும் கூட அதிகமா பச்ச மலை பவளமலை, எல்லாம் கூட எழுதலாம். ய்ஹொடராகக் கூட எழுதலாமே! அரிசியும் பருப்பும் வேறே எந்த ஊரிலும் இந்த சுவையில் கிடைப்பதில்லை.

Viji said...

ஹாய் மணிகண்டன்,
கோபி பற்றிய அழகான பதிவு. அதுவும் அரிசியும் பருப்பும் சோறு பற்றிய தகவல்கள் அருமை.
அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள்:-
//"கொங்குத் தமிழ் என்றால் கோபிதான். கோயம்புத்தூர் அந்த மண்டலத்தில் பெரிய ஊர் என்பதாலும், அந்தக் காலத்தில் ஒருங்கிணைந்த ஈரோடு, கோவை மாவட்டங்களுக்குத் தலைநகரம் என்பதாலும் கொங்குத் தமிழை- கோயம்புத்தூர் தமிழ் ஆக்கிவிட்டார்கள்"//
அட என்ணங்னா இப்படி சொல்லிப்போட்டீங்க. கோயம்புத்தூர் காரங்களும் உங்க பங்காளியும், மாமன் மச்சானும் தானுங்க?

Anonymous said...

//We have this ongoing debate at our home: Erode Vs. Gobi.(En avar is from Erode!)//

அவர் (தமிழ்மண)வலைப்பதிவரா என்பதைத் தெரிந்துகொள்ளலாமா ?

Unknown said...

நீண்ட நாள்களுக்கு பிறகு உங்கள் இடுகையை வாசிக்க நேர்ந்த்தது..

அருமை நண்பா.. நானும் கோபி அருகே உள்ள ஒரு கிராமம் தான்(திருப்பூர் செல்லும் வழியில்).

//.. 'அரிசியும் பருப்பும்' ..// எங்க ஊர்ல மட்டும்தான் இந்த சோறு இருக்குனு நினச்சுட்டு இருந்தேன்..