Apr 29, 2006

நானும் ஒரு கல் எறிகிறேன்!

இந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 'நீ எழுதுவது மட்டும் நல்ல கவிதையா?' என்றோ 'நீ யார் இதை சொல்வதற்கு' என்றோ கேட்பவர்களுக்கு.

எனக்கு கவிதை எழுதுவதற்கான எந்தத் தகுதியும் இல்லை என்றே கொள்ளுங்கள். ஆனால் ஒரு விமர்சகனாக அல்லது ரசிகனாக - எந்தக் கலைப்படைப்பினைக் குறித்தான கருத்தினையும் யாரும் முன் வைக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறேன். இதற்கு சினிமாவையே உதாரணமாக சொல்கிறேன்.(நம் குருதியில் கலந்துவிட்ட ஒன்றல்லவா?). சன் டி.வி யின் திரை விமர்சனத்தில் 'சூப்பர் சார்', 'செம பைட் சார்', 'தலைவர் நல்லா நடிசிருக்காரு' என்று சொல்லும் ரசிகன் நடிப்பிலக்கணம் தெரிந்தவனாக இருக்க வேண்டியதில்லை. இந்தக் கட்டுரையினை படிக்க ஆரம்பிக்கும் போது, என்னை அந்த விமர்சகரில் ஒருவராக கருதிக் கொள்ளுங்கள்.

நவீன கவிதை என்றெல்லாம் பேசுவது 'பெரிய மனுஷத்'தனமாகிவிடுமாதலால் கவிதை என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

சில கவிதைகள் மிகுந்த மனச்சலிப்பினை உருவாக்கிவிடுகின்றன்.கவிதையின் பெயரால் சொற்களின் கூட்டம் எழுத்துலகினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. சில சொற்களை எதுகை மோனையுடனோ அல்லது மடக்கி எழுதும் போதோ கவிதை வடிவம் பெற்றுவிடுவதாக ஆழ்ந்த நம்பிக்கை. பெரும்பாலோனோருக்கு.

பல வாசகர்கள்-அவர்கள் இலக்கியப் பத்திரிகையின் வாசகராக இருக்கட்டும் அல்லது வெகுஜனப் பத்திரிகையோடு நின்று விடுபவராக இருக்கட்டும். கவிதையின் பக்கம் புத்தகத்தில் வரும்போது மிக அவசரமாக, அதே சமயம் அனாயசமாகவும் தாவி விடுவதைக் கண்டிருக்கலாம். இதற்கு மேற்சொன்ன பெரும்பாலோனோரையே குற்றம் சாட்டுவேன்.

ஒரு சிறுபத்திரிக்கையாளரிடமும் பேசிப் பாருங்கள். "கவிதை நிறைய வருது. ஆனா நல்லதாத்தான் ஒண்ணும் வருவதில்லை" என்னும் வாசகம் கண்டிப்பாக தெறித்து வரும். ஒரு பதிப்பாளரிடம் பேசுங்கள். "கவிதை புஸ்தகம்தான் நிறைய வருதே. யாரு சார் வாங்குறாங்க?. மார்க்கட் இல்லை. உரைநடைனா சமாளிக்கலாம்".

கவிதை புதிதான விஷயமாக இருக்க வேண்டும் சொல்லப்படாத கோணத்தில் இருக்க வேண்டும் என்று பலரும் சொல்லி இருகிறார்கள். கவிதைகள் தாங்கி வரும் விஷயம் சலித்துப் போன விஷயங்களாகவே இருக்கும் போது, கவிதையின் மீது வாசகனுக்கு சலிப்புத் தட்டிப் போகிறது. புரியாதபடி எழுதி "நான் சாமனியனுக்காக எழுதுவதில்லை" என்று சொல்வதும் ஒரே தளம்தான்.

'உதிரும் சிறகு பறவையின் வாழ்க்கையை எழுதிச் செல்கிறது' என்னும் பிரமிளின் கவிதை மட்டும் நல்ல கவிதைக்கு உதாரணம் இல்லை. ஆனால் அதன் வித்தியாசமான கோணம் அதனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ஞானக்கூத்தனின் நாய் குறித்தான கவிதையும் சொல்லலாம் "இரவில் குரைக்கும் ஒரு நாயினைப் பார்த்து அடுத்த நாய் அடுத்த நாய் எனக் குரைக்க ஆரம்பிக்கிறது. கடைசியாக குரைக்கும் நாய்க்கு காரணம் தெரியுமா" என்னும் பொருள் படும் படி எழுதியிருக்கும் கோணம் வேறுபட்டது.

பொய் மட்டும் கவிதையாகி விட முடியாது. நிலாவைப் பிடித்து தருவது, அவளின் பார்வை ஊசி போலக் குத்துவதும் புளித்துபோன செய்திகள். அவை கவிதையின் வடிவத்தில் ஏற்றப்படும் போது கவிதையின் ஆளுமை அடித்து நொறுக்கப் படுகிறது.

"அட நாம் கூட யோசித்தோமே" என வாசகனை நினைக்கச் செய்யும் போது கவிதை வெற்றி பெற்று விடுவதாக நான் கருதுகிறேன். சில சமயங்களில் சென்டிமென்ட் கவிதைகள் எளிதாக படிப்பவனை அடைந்துவிடுகிறது. அது இந்திய மனோவியல் சார்ந்த விஷயம். அடிப்படையிலேயே நமது சென்டிமென்ட் சார்ந்த வாழ்க்கை முறையின் பாதிப்பு. இதனை அடிப்படயாக வைத்து மேலும் பல கூட்டம், கவிதைகள் என்னும் பெயரில் சேர்ந்துவிடுகின்றன.காதல் கவிதைகள் கூட.

காதலிக்க எழுதப்படும் கவிதைகள், வர்ணணைக் கவிதைகள் ஆகிய அதிகமான சுமைகளைச் சுமந்து வரும் கவிதைகள்(சொற்கூட்டங்கள்) களையப்படும் போது கவிதை என்னும் பெயரால் சேரும் குப்பைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிடும்.

படிமம் குறித்தான சரியான புரிதல் இந்தப் பணியினை மேலும் எளிதாக்கும். கவிதை சற்று அறிவார்ந்த தளமாக இருப்பதால் படிமம் குறித்தான புரிதலில் பலரும் ஆர்வம் கொண்டிருப்பதில்லை.

சரி இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன? தமிழில் கவிதைக்கென உருவாக்கப்பட்ட தளத்தில் பெரும் குறை இருப்பதனை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காக. நோக்கம் நிறைவேறவில்லை. எழுதிக் கொண்டிருக்கும்போது உணர முடிந்தது, இது ஒன்றும் ஒன்றரைப் பக்க கட்டுரையில் முடிந்துவிடக் கூடிய காரியமில்லை. அரைநூற்றாண்டுக்கும் மேலாக பலரும் முயன்று வரும் காரியம். அவ்வப்போது ஒரு கல்லினை எடுத்துப் போடலாம். இருக்கும் குழியினை மேவுவதற்காக.

நானும் ஒரு சிறு கூழாங்கல்லினை எறிய முயன்றேன்.

(மற்றபடி நான் எழுதும் கவிதைகளை இந்தக் கட்டுரையோடு படித்துவிட்டு சண்டைக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. வளரும் சின்னவனை விட்டு விடுங்கள்.)

13 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

//கவிதை சற்று அறிவார்ந்த தளமாக இருப்பதால் //
உண்மையாவா?!
:-(
நான் அதை விளையாட்டுத்தனமான விடயமாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

வசந்தன்(Vasanthan) said...

பொடிச்சி, ஆளையும் இயக்கத்துக்கு எடுப்பம் எண்டு பார்த்தியளோ?
ஆள் வேற பிளானில போறார் போல கிடக்கு;-)

Vaa.Manikandan said...

இரண்டு பேரும் ஏதோ அடி போடற மாதிரி தெரியுது. ஆனால் கண்ணுக்குள் புகை அடிச்சா மாதிரி மங்கலாய்ப்படுதுங்க அய்யா.

ilavanji said...

மணி,

//வளரும் சின்னவனை விட்டு விடுங்கள் //

எழுதுகிற பலரும் இதனையே காரணமாக கூறமுடியுமே! தினத்தந்தி கவிதைகளையும் காதல் கவிதைகளையும் எனக்கென்னவோ "சித்திரமும் கைப்பழக்கம்" வகையாகத்தான் பார்க்க முடிகிறது!

வருகிற கவிதைகளை தரம் பிரித்து ஆயாசப்படுவதை நல்ல கவிதைகளை அடையாளம் காட்டுவதே ஆக்கபூர்வமாக இருக்குமென நினைக்கிறேன்!

manasu said...

இளவஞ்சி சொல்வது சரியேன்னு தோணுது.

குருதிப்புனலும்,விருமான்டியும் மட்டுமே வந்து கொண்டிருந்தால்(நம்ம தகுதி அவ்ளோதாங்க, அகிர குரசோவா..சத்யஜித்ரே எல்லாம் தெரியாது...) கரகாட்டக்காரன் ரசிகர்கள் என்ன செய்வது.

நமக்கு வேணும்கிறதை நாம எடுத்துக்குவேம்.

Radha N said...

கவிதையோ கட்டுரையோ....இலக்கியப்படைப்புக்கள் எதுவாக இருந்தாலும் அது ஒரு சாரரை மட்டுமே படித்துணர்ந்து கொள்ளாமல் ஒரு சராசரி பாமரனுக்கும் சென்றடைய வேண்டும். அது தான் இலக்கியத்துக்கு கிடைக்கும் வெற்றியாக கருத முடியும்.

தமிழிலக்கியம் கற்றவர்களாலே புரிந்துகொள்ளக்கூடிய அளவில் இருந்த பாடல்கள். பின்னர் கவிதையாகி மேலும் நெகிழ்ந்து புதுக்கவிதையாகியது.... இலக்கியத்தின் பரிணாமமே.

சொல்லவரும் கருத்தினை பிறர்துணையின்றி தானே, படித்தமாத்திரத்தில் புரிந்து கொள்ளும் பாங்கினைப்பெற்ற புதுக்கவிதையினை, அதன் வெற்றியாகத்தான் கருத முடிகிறது.

ஆதித்தனாரைப் பாருங்கள்.....முன்பெல்லாம் பத்திரிகை வெகுஜனங்களுக்கும் போய்சேரவேண்டும் என்ற எண்ணத்தில்....எப்படிப் பதிக்கப்பட்டது. கத்தியால் குத்தினான் என்றால்...அதனை ''சதக் சதக் என்று குத்தினான்...ஆ என்று அலறினான்" என்று பாமரனும் படித்துணரும் வண்ணம் வந்தது.

ஆக இலக்கியம் அனைவரையும் சென்றடையச் செய்யவேண்டும்.

Muthu said...

மணிகண்டன்,
//"அட நாம் கூட யோசித்தோமே" என வாசகனை நினைக்கச் செய்யும் போது கவிதை வெற்றி பெற்று விடுவதாக நான் கருதுகிறேன்//

நல்ல இலக்கியத்திற்கான சாட்சி இது. இதுவே சிறு வாக்கியங்களில் அமைத்தால் அது கவிதையாகிறது.

கவிதை என்றால் என்ன என்று புரியாதவர்கள் அந்த குட்டையை குழப்புவார்கள் என்பது உண்மை.
என்னுடைய சில கேள்விகள்:
ஒரு கவிதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை அளிக்கவேண்டுமா?
சில (நவீன)கவிதைகளை எடுத்து அதை மாறுபட்ட கோணத்தில் அணுகி அதை எப்படி ரசிக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு தொடர் எழுத முடியுமா?

Vaa.Manikandan said...

//வருகிற கவிதைகளை தரம் பிரித்து ஆயாசப்படுவதை நல்ல கவிதைகளை அடையாளம் காட்டுவதே ஆக்கபூர்வமாக இருக்குமென நினைக்கிறேன்! //

நன்றி இளவஞ்சி.

// கரகாட்டக்காரன் ரசிகர்கள் என்ன செய்வது//
கவிதையை நான் குறை சொல்லவில்லை. கரக்கட்டக்கார ரசிகனுக்கு படம் எடுக்கிறோமா அல்லது அகிர குரொசாவின் ரசிகனுக்கு படம் எடுக்கிறோமா என்பது படைப்பவனின் சுதந்திரம்.கவிஞனும் அப்படியே. யாருக்கு எழுதுகிறோம் என்பது. நவீன கவிதை என்னும் பெயரில் கொல்ல வேண்டாம் என்பது என் கருத்து.

அனைவருக்கும் இலக்கியம் சென்றடைய வேண்டும் என்பதில் எந்த விதமான மற்றுக்கருத்தும் இருக்கவியலாது. ஆனால் இலக்கியம் என்னும் பெயரில் குப்பைகளை சேர்ப்பதனை தடுக்க வேண்டிய பெரும்கடமை இருக்கிறது.

//ஒரு கவிதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை அளிக்கவேண்டுமா?//
படிமம் கவிதையில் வரும் போது இது இயல்பாக அமைந்துவிடும் எனத் தோன்றுகிறது. ஆனால் இது கட்டாயம் என்றும் படவில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் 'புத்தக தேவதை' குறித்து எஸ்.செந்தில் குமார் உயிர்மையில் எழுதி இருந்த கவிதையினை ஜெயமோகன் பாராட்டி எழுதி இருந்தார். எனக்கு மிகப் பிடித்த கவிதை. படிமம் இருந்தது. ஆனால் அது எல்லோருக்கும் ஒரே விதமான எண்ண ஓட்டத்தைத்தான் தோற்றுவிக்க முடியும் என்பது என் கருத்து.

//சில (நவீன)கவிதைகளை எடுத்து அதை மாறுபட்ட கோணத்தில் அணுகி அதை எப்படி ரசிக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு தொடர் எழுத முடியுமா?//

இது பெரிய விஷயம். அதிகப் பிரசங்கித்தனமாக இருக்குமோ என்றும், என்னால் இயலுமா என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் முயன்று பார்க்கிறேன்.

சிங். செயகுமார். said...

கவிதை பார்ப்பவர் மனநிலைக்கு ஏற்ப மாறுபடுகின்றது. உரைநடைபோல ஒரே கருத்தில் நின்று வாசிக்கமுடியாமல் செல்வதால் கவிதைகள் எல்லோரையும் சென்றடைவதில்லையோ என்னவோ!

ப்ரியன் said...

கவிதை வாசிப்பவர்களின் கண்களில் / மனசில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது என்பது என் எண்ணம்.

கவிதைப் பற்றி ஆசிப் அவர்கள் எழுத்திய பதிவு அருமை முடிந்தால் இங்கே படியுங்கள்

http://asifmeeran.blogspot.com/2006/04/blog-post_16.html

அன்புடனில் இதைப்பற்றிய விவாதம்http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/1d3b670f8c6a01be/83bfe59c31796a3a?q=naanum+kavithaikaLum&rnum=1#83bfe59c31796a3a

ROSAVASANTH said...

//'உதிரும் சிறகு பறவையின் வாழ்க்கையை எழுதிச் செல்கிறது' //

சிறகிலிருந்து பிரிந்த இறகு காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்க்கையை எழுதி செல்கிறது.

arunagiri said...

"ஞானக்கூத்தனின் நாய் குறித்தான கவிதையும் சொல்லலாம் "இரவில் குரைக்கும் ஒரு நாயினைப் பார்த்து அடுத்த நாய் அடுத்த நாய் எனக் குரைக்க ஆரம்பிக்கிறது. கடைசியாக குரைக்கும் நாய்க்கு காரணம் தெரியுமா" என்னும் பொருள் படும் படி எழுதியிருக்கும் கோணம் வேறுபட்டது".

இது ஞானக்கூத்தனா அல்லது பிச்சமூர்த்தியா? பிச்சமூர்த்தி என்று ஞாபகம், தவறாகவும் இருக்கலாம்.

Vaa.Manikandan said...

அருணகிரி,

நன்றாக நினைவில் இருக்கிறது. 'நாய்' பற்றிய கவிதை ஞானக் கூத்தனுடையதுதான்.

அடுத்த கட்டுரை அவரின் கவிதைகளைப் பற்றி எழுத உத்தேசம்