Nov 21, 2005

ஃபைவ்ஸ்டார் ஓட்டலும் பட்டையைக் கிளப்பலும்

இரண்டு நாளைக்கு முன்னாடிங்கண்ணா, இங்க ஒரு கன்ஃபரன்ஸோ, கருமாந்திரமோ ஒரு ஃபைவ்ஸ்டார் ஒட்டலுக்குப் போனனுங்க! எல்லாரும் சொர்புர்னு அஸென்ட்லயும்,ஸ்விப்ட்லையும் வந்தாங்க.நானு கூட வந்தவன் ஸ்கூட்டர்ல தொத்திட்டுப் போக வேண்டியதா இருந்துச்சு.ஆளாளுக்கு ஆட்டையப் போடறன்னு சொல்லிட்டு மொக்கையப் போட்டுத் தள்ளிட்டாங்க.

எனக்கா ங்கொக்கமக்கா குளிர்காலத்து அவசரம்.ஆனது ஆயிப்போச்சுடா மணி கொஞ்சம் பொறுத்துக்கடானு உக்காந்தா, டீ குடுக்கறன்னு சொன்னாங்க.உட்றா சவாரினு ஓடி போயி
காரியத்த முடிச்சுட்டு வந்து டீய ஒரு மொடக்கு குடிச்சா உள்ளயே எறங்க மாட்டீங்குது. சுப்பன்ங்கட டீதானுங்க நம்மள்ளுக்கு தேனு மாதிரி.எடுத்துப் போட்டம். கீழயும் ஊத்த முடியாது.அவனவன் பட்டும் படமா குடிக்கிறானுக!நானும் அவங்கள மாதிரி உதடு படாம குடிச்சா சட்டைல ஊத்துது.மேல ஊத்தி கீழ ஊத்திட்டு கிடக்கிறக்கு நமக்குத்தெரிஞ்ச மாதிரியே குடிச்சுப் போடறது உசத்தி இல்லீங்களா?.

அது முடிஞ்சு போயி உக்காந்தா கண்ணுக்கு லட்சணமா செவப்பா ஒரு புள்ள எதோ
பேசுனாளுங்க.என்ன பேசுனானு எல்லாம் நான் கவனிக்கறதுல்லீங்க.அதே மாதிரிதான் கேள்வி கேக்கறதும். வந்தமா பொட்டாட்ட உக்காந்தமானு இல்லாம தொணதொணனு கேள்வி கேக்கறது என்னங்க கெட்ட பழக்கம்.

அப்படியே இருந்தா சோத்துக்கு போறவிய எல்லாம் போலாம்னு சொன்னாங்க, நாம மட்டும் எந்திரிச்சா நல்லா இருக்காதுனு பார்த்தா,அட மொத்த சனமும் எந்திருச்சுருசுங்க.காலு நெலத்துல நிக்கமாட்டீங்குது.

உள்ள பூந்து பார்த்தா ஏகப்பட்டது வருசையா அடுக்கி வெச்சுருக்காங்க.போகையலயே நம்ம கூட இருக்குற பசங்க எல்லாம் சொன்னாங்க."மச்சா,இதான் சாக்குன்னு எல்லாத்தையும் ருசி பாக்கலாம்னு நெனச்சீன்னா,நல்லத திங்க முடியாதுனு".சரின்னுட்டு ஒரு நோட்டம் வுட்டேன். ஒரு பத்து,பதினாறு வகை.எத எடுக்கறது,எத வுடறதுனு தெரியல.பேர பாருங்க.சாமீ வாயுலயே நுழைய மாட்டீங்குது.படிப்புதான் எம்.டெக்கு. நாந்தான் சொல்லிக்கோணும்.

எங்க அமத்தாவக் கூட்டிட்டு வந்துருந்தா, கண்ணுல தண்ணி உட்டுருக்கும். பேர்களப் பாத்து. அடப் பேரு தான் இப்படின்னா சைவமா,அசைவமானு தெரியலை.

வக்காலி,அசைவம் மட்டும்தான் திங்கறதுங்கற முடிவுல போயாச்சு. நூடுல்ஸாவது,வெங்காயமாவது.வெங்காயானு எதோ வெச்சிருந்தாங்க.சத்தியமாத்தானுங்க.ஒரு பேரு வெளக்கமா இருந்துச்சுங்க 'ஐதரபாத் தம் கி பிரியாணி' நு.அட்றா...அட்றா...அப்புரம் பார்த்த 'ஆந்திர
சிக்கன் மசாலா' அடேசாமி ரெண்ட மட்டும் மூக்குல ரெண்டு சோறு எட்டிபார்க்குற அளவுக்குத் தின்னேன்.

பொக்குனு போயிடக்கூடாதுனா கொஞ்சம் தயிரும் ஊத்திச் சாப்பிடுன்னு எங்கம்மா சொல்லுவாங்களா.கொஞ்சமா ஒரு ஒணேமுக்கா கரண்டி தயிர ஊத்தி கொழச்சு அடிச்சுட்டு இருந்தப்ப, ஐஸ்கிரீம் கண்ணுல பட்டுச்சு.

அங்க போனா சாக்லேட்டுனு சூடா ஒண்ணு குடுத்தாங்க. ஜில்லுனு ஒண்ணு குடுத்தாங்க. சூட்டையும்,குளிரையும் ஒண்ணா தின்னா பல்லு போயிரும்னு தெரியும்.என்ன பண்ரதுன்னு தெரியாம முழிச்சு, ஒரு கோட்டு போட்ட தாத்தாவ நான் பார்த்தா, அவரு என்ன பண்றன்னு என்னைய பாக்கறாரு. அடிச்சு உடுடானு இரண்டையும் சேத்தி அடிச்சா, அவரும் நம்மளை மாதிரியே பண்றாரு.

எல்லாம் தின்னு முடிச்சுட்டு வெளிய வந்தா, கூட வந்தவன் சொல்றான்(சோத்து முசுவுல அவன இதுவரைக்கும் பாக்காவே இல்லீங்கோ!) கோழி பிரை நல்லா இருந்துச்சுன்னு.

அட விசாரிச்சு பார்த்த அந்த கெரகத்த நான் காலிபிளவர்ன்னுல உட்டுட்டு வந்தேன்.மனசே ஆறல போங்க. அது சரி இந்த பஃபே ல கையெல்லாம் வலில நடுங்க ஆரம்பிச்சுடுதுப, உட்காந்து இலைல சோறு போட்டு குழைச்சு அடிக்கிற மாதிரி வருமுங்களா? சொல்லுங்க பார்க்கலாம்.

8 எதிர் சப்தங்கள்:

தருமி said...

உட்காந்து இலைல சோறு போட்டு குழைச்சு அடிக்கிற மாதிரி வருமுங்களா/ படிச்சி முடிச்சதும் எனக்குப் பசி வந்திரிச்சி; சாப்பிடப் போறேன். வர்ட்டுமா...?

Vaa.Manikandan said...

சாப்பிட்டுட்டு வாங்க!

தருமி said...

உங்க ஊர் ஹைதராபாத்ல 87-ல ஒரு ஹோட்டல்; எத்தனை ஸ்டாரெல்லாம் தெரியாது. டேபிள்ல உக்காந்தாச்சு; ரொம்ப டிம் லைட்; முதல்ல ஏதோ கொண்டுவந்து வச்சாங்க பெரிய ஸ்பூன் போட்டு. பாக்கிறதுக்கு நான்-வெஜ் ஐட்டம்மாதிரி தெரியுதேன்னு ஒண்ணுக்கு ரெண்டா ஸ்பூன் நிறைய எடுத்து வச்சிட்டு சாப்பிட ஆரம்பிச்சபிறகுதான் தெரிஞ்சுது - அது ஊறுகாய்தான்னு!

ilavanji said...

கலக்கல் மணி! இந்த போடு போட்டுட்டு அப்பறம் வயிறு கலங்குனதைப்பத்தி ஒன்னுமே சொல்லலியே!

:)

Anonymous said...

This is my first ever comment/post in blogs. A friend of mine reommended this to read without fail. I read it in office and laughing my lungs off. All my colleagues were looking at me strangely!!!

Great style of writing! keep it up :))

Fatboy

Vaa.Manikandan said...

Thankyou Fatboy.

Anonymous said...

HI Mani,
This is bhuvana. Sema assathal, ungal eluthil tamil uyir irrukuthungo. Keep it up. Will forward it all my friends. I enjoyed a lot.

athu seri, soru vachangale peru vachangala...

ராஜ நடராஜன் said...

நட்சத்திர ஓட்டலுக லூட்டிகள நினைச்சா சிரிப்பா வருது.சோறுடன் ஜாமைக் கலந்து விளாசும் சர்தார்ஜி மற்றும் நம்ம ஊருக்காரர் வறுத்த ரொட்டி(டோஸ்ட்)யை ஐஸ்க்குள்ள முக்குன பட்டரின் விறைப்புடன் முள் கரண்டியுடனும் கத்தியுடனும் சண்டை போடுவார் பாருங்க...வடிவேலு சாரு தோத்துருவாரு.

நானும் நண்பர்களும் மசாலா தோசை ஆர்டர் செய்து விட்டு கை சர்ட்டை மடக்கி விட்டுகிட்டு கையில சாப்பிட்டா எதுத்த மேசையில எங்களைப் பார்த்து சிரிச்சிகிட்டு பொண்ணுக முள் கரண்டியும்,கத்தியுடனும் பந்தா காட்டும்போது அந்த தோசையும் தோசையோட அந்த சில்வர் பிளேட்டும் ரெண்டு மூணு சுத்து சுத்தும் பாருங்க.... மறுபடியும் பொண்ணுங்க பல்லைக் காட்டுவாங்கன்னு நினைக்கிறீங்க?