Jan 3, 2011

இந்த வருடத்தின் முதல் தற்கொலை.



உங்கள் மீதான அதீத நம்பிக்கையில்
என் அந்தரங்கங்களை
பூட்டாமல் விட்டுச் செல்கிறேன்
அல்லது
ரகசிய அறையின் சாவியை
உங்களிடமே கொடுத்து வைத்திருக்கிறேன்.

நான் இல்லாத நேரத்தில்
மிக அவசரமாக
என் ரகசியங்களை சோதனையிடுகிறீர்கள்

எப்பொழுதும்
என்னுடையதாகவே
இருந்திருக்க வேண்டிய
அந்தரங்கங்கள்
இப்பொழுது
நம்மிடையே
பொதுவானதாகிறது.

நேர்த்தியாக என் குற்றங்களை வரிசைப்படுத்துகிறீர்கள்
எனக்கு எதிராக எழுப்ப வேண்டிய வினாக்களை
தயார்படுத்துகிறீர்கள்
வினாக்களுக்கு தரப்படும் பதில்களை பொறுமையாக
பெற்றுக் கொள்ளும் நீங்கள்
அதே வினாக்களை வேறுபடுத்திய வரிசைகளில்
திரும்ப
என் கண்களை நோக்கி செலுத்துகிறீர்கள்
நான் தலை குனியத் துவங்கும் போது
உங்களின் வேகம் அதிகரிக்கிறது.

நான் தோல்வியடைகிறேன்.

என்னிடமிருந்து
கண்ணீர் பெருகும்
கணத்திலிருந்து
நான்
நசுக்கப்படுகிறேன்

உங்களுக்கும் எனக்கும்
இடையில்
கட்டப்பட்ட
எனது பிம்பம்
சிதைந்து
கொண்டிருக்கிறது.

எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்ள
தயாராகிறேன்.
கைகளை கிழித்துக் கொள்வதோ
அல்லது
நெருப்பினில் விரல் வைப்பதோ
உங்களை ஆசுவாசப்படுத்தும்
என நினைக்கிறேன்.

நீங்கள்
எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

வினாக்கள்
இன்னொரு வரிசையில்
விழத் துவங்குகின்றன.

நான் ரகசியமாக
வைத்திருந்த சிறகுகள்
கத்தரிக்கப்படுகின்றன.

எனது வானத்தில்
பறந்து கொண்டிருந்த
சிறு பறவைகளை
சுட்டு வீழ்த்துகிறீர்கள்.

எனது பாடல் வரிகள்
களைத்தெறியப்படுகின்றன.

நான்
உடைந்து கொண்டிருக்கிறேன்.
அல்லது
நொறுங்கிக் கொண்டிருக்கிறேன்

வீதிகளில்
எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள்.

ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
ஒன்று

பட்டாசுகள் வெடிக்கத் துவங்குகின்றன.

இப்பொழுது
என் அறை சாத்தப்படுகிறது
மெதுவாக.

7 எதிர் சப்தங்கள்:

Yaathoramani.blogspot.com said...

வாழ்த்துக்கள்....இது வருடத்தின் முதல் தற்கொலை அல்ல
முதல் நற்பிறப்பு தொடரட்டும் சுகப்பிரசவங்கள்

Lakshmi Sahambari said...

Miga nalla Kavithai !

ஆறுமுகம் said...

இது எல்லோருக்குமான கவிதை. நன்று

முல்லை அமுதன் said...

nalla chinthanai.
vaazhthukkal.
mullaiamuthan
http://kaatruveliithazh.blogspot.com/

Gopal said...

Dear Mani,

Intersting.I read all your old posts.

Regards,
Gopal

kishan said...

//வினாக்களுக்கு தரப்படும் பதில்களை பொறுமையாக
பெற்றுக் கொள்ளும் நீங்கள்
அதே வினாக்களை வேறுபடுத்திய வரிசைகளில்
திரும்ப
என் கண்களை நோக்கி செலுத்துகிறீர்கள்//
nice mani

ILA (a) இளா said...

ஒரு களம், அதன் பின் நிகழிவுகள், நிகழ்வுகளில் நில உணர்வுகள்... கோர்த்தவிதம் அருமை